Thursday, August 21, 2014

நெஞ்சம் மறப்பதில்லை!- 2

அன்று காலை அலுவலகம் சென்றவுடன் பாஸிடம் இருந்து தொலைபேசி அலறியது  எப்பொதும் நான் அவரை காலையில் சென்றதும் போய் பார்க்கிற பழக்கம் எல்லாம் கிடையாது ! எதாவது முக்கியம் என்றால் என் மேஜை எண்ணிற்கு அழைப்பார் , சென்று பார்த்துவிட்டு வருவேன் .

அதுவும் காலையில் வந்ததும் கூப்பிட மாட்டார் குறைந்தது அரை மணி நேரமாவது கழித்துதான் அழைப்பு வரும் . ஆனால் அன்று வழக்திற்கு மாறாக வந்து சீட்டில் உக்கார்ந்ததும் கால்! ஐய்யயோ என்னாச்சோ ஏதாச்சோ என்று   பாஸுடைய கேப்பின்னை நோக்கி பரபரப்பாக நடந்தேன். எதிரில் வந்த ஹிட்ச்.ஆர் என்னைப் பேந்தப் பேந்த விழித்துப் பார்த்துக்கொண்டே அவரின் கேப்பின்னிற்குள் சென்றமர்ந்தார் அந்த பெண்மணி.

முன்னதாகவே சரவணன் பாஸிற்கு அருகில் நின்று  தூபம் போட்டுக் கொண்டிருந்தான்! நல்ல நண்பன் தான் ஆனால் நண்பர்களையும்
எதிரிகளாக மாற்றி அழகு பார்க்கும்  விசயங்களை அலுவலகங்கள் எளிதாக அரங்கேற்றிப் பார்த்துவிடும்! "பயபுள்ள இவன் வேற ஏதோ ஓதிக்கிட்டு இருக்கான் என்னத்தப் பண்ணி வச்சிருக்கானோ?!" என பதக் பதக் என அடித்துக் கொண்டது...

நான் : சொல்லுங்க ஜி கூப்டு இருந்தீங்க என்ன விஷேசம்?

பாஸ் : வா கேசவா நேத்தே உன்கிட்ட சொல்லனும்னு இருந்தேன் இங்க             ப்ராஜெக்ட் கொஞ்சம் கம்மியா இருக்குறதால கொஞ்சம் பேர "விசாகபட்டிணம் & பெல்லாரி" க்கு கொஞ்ச நாள் ட்ரான்ஸ்பர் பண்ணலாம் னு மேனஜெமென்ட் முடிவு பண்ணி இருக்கு...அதனால புது பசங்கள அனுப்பினா சரிவராது சரியா பண்ண மாட்டாங்க அதனால உன்ன போல சீனியர் ஆளுங்க போனா நல்ல இருக்கும் என முடித்தார் (இது நம்மை சிக்கவைக்க அவர்கள் போடும் நாய் பிஸ்கட்).

நான் : என்னிக்கு போகுற மாதிரி இருக்கும் ஜி?

அவர் : உனக்கு போகுற ஐடியா இருந்தா சொல்லு இன்னிக்கு நைட் கே கூட டிக்கெட் போட சொல்லிடுறேன்.

இதற்கு நடுவில் சரவணன் : அதெல்லாம் பிரச்சன இல்ல,அருண் சார் நீங்க டிக்கெட் போட சொல்லுங்க கேசவன் போவான் என்று சொன்னான்.(சிரித்துகொண்டே)

எனக்கா வாயில் நல்ல வசையாக வந்தது ! சரி ஒரு லீட் முன்னாடி இருக்கும் போது எதுவும் பேசிட கூடாதே "டேய் நீ கொஞ்சம் கம்முனு இருடா" என்று முறைத்தவாரே சொன்னேன் பிறகு அவன் பேசவில்லை...

அன்று இரவு இதை எல்லாம் அம்மாவிடம் சொன்னேன் முதலில் சமாதானம் ஆகல அப்புறம் இங்க இருக்குற நிலைமைய புரிய வச்சி ஓகே வாங்குறதுக்குள்ள என் தாவு கிளிஞ்சுருச்சு! அடுத்த நாள் ஹெட்ச்.ஆர் இடம் இருந்து போன் என்னுடைய டிடைல்ஸ் எல்லாம் கேட்டு "சரிங்க நான் டிக்கெட் போட்டுட்டு குப்டுறேன்" என போன் ஐ வைத்தார்.
------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய கைபேசிக்கும் குறுஞ்செய்தி வந்தது பயணச்சீட்டு நிச்சயமாகிவிட்டது என...விசாகபட்டிணம் போவதற்கு போட்டு இருந்தார்கள்...நான் வைஷாகிர்க்கும் தனசேகர் பெல்லாரி கும் முறையாக அனுப்பி வைக்கப்பட்டோம் !! தனசேகரிடம் முன்னமே சொல்லி இருந்தேன்"பெல்லாரி வேண்டாம் ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும்! சுத்தியும் காடு தான் அந்த ஸ்டீல் பிளான்ட் இருக்குற ஏரியா ல ஒரு பெட்டி கடைகூட கிடையாது டா பெல்லாரிக்கு மட்டும் போய்டாத டா" எங்க கேட்டான் ?!

செமி ஸ்லீப்பர் ஏசி பேருந்தில் கடைசி இருக்கையை முன்பதிவு செய்து கொடுத்து இருந்தார்கள். பேருந்து ஏற்றிவிட வேந்தனும் கிரியும் வந்து இருந்தார்கள்...சாய்ந்தரம் 6 மணிக்கு பேருந்தை எடுத்தார்கள். வழி நெடுகிலும் தெலுங்கு பட பாடல்களும், திருப்பதி ஏழு மலையானின் பக்திப்பாடல்களும் ஊதுவத்தி மனதுடன் ஊர்ந்து கொண்டு இருந்தன! என்னுடைய பக்கத்துக்கு இருக்கையில் உக்கார்ந்து இருந்த தெலுங்கு பையன் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு புராணத்தை என் காதில் பாடிக்கொண்டு வந்தான்...இரவு 8 மணி இருக்கும் வண்டி நெல்லூரை நெருங்க நெருங்க எனக்கு வியர்த்து கொட்டியது! என்னடா இது எனக்கு வந்த சோதனை என துடைத்துக் கொண்டு எழுந்து பார்த்தேன் அந்த தெலுங்கு பையன் என் மடி மீது பவ்வியமாக தூங்கிக்கொண்டு இருந்தான்! எழுந்து பார்த்தால் பேருந்தில் குளிர்சாதனம் வேலை செய்யவில்லை!!

பயணிகள் எல்லாரும் கூச்சல் போட வண்டி நெல்லூரில் ஒரு உணவகத்தில் நின்றது...உணவகத்திற்குள் சென்று கை கழுவி அமர்ந்து சர்வரிடம் டிபன் இருக்கா என கேட்டதும் "பரோட்டா உந்தி பாபு" என சொன்னார். சரி "ஒக்க ப்ளேட் பரோட்டா தீஸ்கோண்டு ராவண்டி"என எனக்கு தெரிந்த தெலுங்கில் சொன்னேன். "சார் sidedish ஏமி காவாலி மீக்கு ? " எனக்கேட்டார். அவர் சொன்னதில் சென்னா மசாலா மட்டும் தான் விளங்கியது. அதையும் ஒரு ப்ளேட் கொண்டுவந்து வைத்து சாபிடாகி விட்டது! வழக்கம் போல என்ன கொடுமை என்றால் பரோட்டாவை விட sidedish  விலை அதிகம்!ஹோட்டல்லில் இருந்து பஸ்சிற்கு வந்தேன் ஏசி வேலை செய்ய ஆரம்பித்து இருந்தது. எப்பாடா என மொபைலில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை ஹெட் போனில் போட்டு கேட்டுக் கொண்டே தூங்கிவிட்டேன். ஊரை விட்டு பிரிந்து வருபவர்களுக்கு இசையும் அலைபேசியும் மட்டும் தானே துணை!
------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த நாள் காலை 7 மணி இருக்கும் பஸ் இன்னும் நின்ற பாடில்லை ஹைவேயில் ஓடிக்கொண்டே இருந்தது! அருகில் இருந்த தெலுங்கு பையனை கேட்கலாம் என்று பார்த்தால் அவன் வழியில் எங்கேயோ இறங்கி விட்டான் போல! அருகில் இருந்த பெரியவரிடம் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் என கேட்டேன் அவர் இன்னும் அரை மணிநேரத்தில் வந்துவிடும் விசாகபட்டிணம் பஸ் காம்ப்ளெக்ஸ் என பதில் சொன்னார். எப்பாடா இப்பவாச்சும் ஒரு முடிவுக்கு வந்ததே இந்த பயணம் என பேரு மூசு விட்டேன். ரயிலில் பயணம் செய்வது இவ்வளவு அயர்ச்சியை தராது ஆனால் பஸ் பயணம் அப்படி இல்லை அல்லவா!

ஒருவழியாக விசாகபட்டினம் வந்தாச்சு அடுத்து கம்பெனியில் குடுத்த ஹாஸ்டலை தேடி கண்டுபுடிக்கணும்!! இதுக்கு முந்தி மும்பை பயணத்தின் போது கூட இன்னொரு ஆள் கூட இருந்ததால் அது பெரிதாக தெரியவில்லை...ஆனால் இது தமிழ்நாட்டை விட்டு தனியாக வரும் முதல் பயணம்! கேரளம் தவிர்த்து வேறு எங்கும் தனித்து போனதில்லை!

சரி என்று ஒரு ஆட்டோ பிடித்து "சம்பத் விநாயகா டெம்பில் ஒஸ்தாரா ?" என கேட்டேன். அவரும் ஆமோதித்தார். ஆட்டோ ஒரு 5 நிமிடம் சென்று ஒரு பெரிய பள்ளமான பகுதியில் இறங்கியது...GRT Jewellers ஐ ஒட்டி இறங்கியது அந்த மேடான சாலை. அங்கே வலப்பக்கம் திரும்பி ஒரு வீட்டு கேட்டின் முன் நின்றது. ஆட்டோகாரருக்கு பணத்தை கொடுத்துவிட்டு அந்த வீட்டின் உள்ளே நுழைத்தேன். நான் அங்கே பார்க்க வேண்டியது "சந்திரசேகர் சிரிகிரி" ஆமாம் தெலுங்கு மக்களின் புனைப் பெர்யர்கள் இப்படி தான் கொஞ்சம் சிரிப்பாக இருக்கும்! இவர் பெயராவது பரவால சில புனைப் பெயர்கள் "கொண்டவெட்டி, அளவளாவி, தலப்பாக்கா" என்று இருக்கும்!

சந்திரா சார் வந்து என்னை வரவேற்றார்...பிறகு குளித்து விட்டு வாருங்கள் சைட்டிற்கு போகலாம் என சொல்லிவிட்டு சென்றார்...எங்கள் வேலை "விசாகபட்டிணம் ஸ்டீல் பிளான்ட்"டில்  அன்றைக்கே அங்கு இன்னொரு நண்பரும் ஹைதராபாத்தில் இருந்து வந்து இருந்தார். பெயர் "ஸ்ரீதர் வல்சா" குளித்து முடித்து உணவு அறுந்திவிட்டு சுமார் 25 கிலோமீட்டர் பஸ் பயணத்திற்கு தயாராகி விடுதியை விட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்து பஸ் நிலையத்திற்கு சென்றோம். சந்திரா சார் சொன்னார் "கேசவ் நீ நாளைக்கே பஸ் பாஸ் வாங்கிகோங்க ஒரு மாச பாஸ் எங்க வேணாலும் போய்க்கலாம்" என்றார். நானும் வாங்கிக்கிறேன் சார் என்றேன்.

------------------------------------------------------------------------------------------------------------

இந்த பெண்மணி போல தான் இருப்பார் அந்த கமலா அம்மா (படம் ஒரு குறிப்பிற்கு மட்டுமே)
அது ஒரு மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு மொத்தமாக 20 பேர் இருந்திருப்போம்! 3 அல்லது 4 பேரை தவிற மற்ற அனைவரும் ஆந்திரா பல்கலைக்கழக மாணவர்கள். அதில் என்னோடு அரையை பகிர்ந்து கொண்டது ஸ்ரீதர் மற்றும் சுபாங்கர் மண்டல் மேற்கு வங்கத்தை சேர்ந்த நண்பன் அரசு ஊழியர். அதை தவிர்த்து அவ்வப்போது மாறி மாறி வந்து போவார்கள் அந்த சூழல் எனக்கு மிகவும் வித்தியாசமானது! ஆண்கள் விடுதி தமிழ் ஆட்கள் யாரும் கிடையாது பேச்சு துணைக்கு எனக்கு உற்ற நண்பர்கள் புத்தகமும், முகநூலும் மட்டுமே! ஸ்ரீதர் என்னை அழைத்தால் வா சரக்கு அடிக்க போவோம் என்பதாக தான் இருக்கும்! வாரத்திற்கு 3 நாட்களாவது வொயின் ஷாப்பில் இருப்பான்! ஒன்றிரண்டு முறை உடன் சென்று வந்தேன்.

நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டு ஆமை கதியில் ஓடியது! பேச்சு துணைக்கு ஆட்கள் இல்லை எங்க பார்த்தாலும் சுந்தரத் தெலுங்கு! இதற்க்கு இடையில் உடல் நலம் பாதித்துவிட்டது. எந்த நேரம் பார்த்தாலும் சாதம் மட்டும் தான் அங்கே கிடைக்கும் முக்கிய தின்பண்டம்! நம்ம ஊர் இட்லி சாம்பார் எல்லாம் கிடைப்பது குதிரை கொம்பு அப்படியே கிடைத்தாலும் ரொம்ப தூரம் போகணும். ஒரு முறை டாக்டர் நீங்க நைட் நேரத்துல இட்லி சப்டுங்கன்னு சொல்லிட்டாரு நானும் சுத்துறேன் சுத்துறேன் ஒரு கடையிலும் இட்லி கிடைக்கல நைட் டைம்ல எல்லாரும் புல் மீல்சை கட்டிக்கொண்டு இருந்தார்கள்!

விரக்தியுடன் விடுதிக்கு வந்தேன். நல்ல காய்ச்சல் போறாத குறைக்கு மிக்ரைன் தலைவலி வேறு! உடல் சோர்வு கட்டிலில் இருந்து எழுந்து நடக்க கூட முடியவில்லை... சமையல்கட்டிற்கு சென்று பார்த்தேன் அங்கே வீட்டு வேலை செய்யும் கமலா அம்மாவிடம் கொஞ்சம் சுடுநீர் கிடைக்குமா ? என தெலுங்கில் கேட்டேன். அந்த அம்மா நான் வந்திருக்கும் நிலை கண்டு பதறிப்போய் என்ன பா ஆச்சு என்ன பண்ணுது என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போதே நான் வாந்தி எடுக்க ஆரம்பித்தேன்! பிறகு பொறுமையாக வெந்நீர் வைத்து துடைத்து விட்டார். அதற்குள் ஹாஸ்டல் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது அந்த ஆண்டியும் வந்தார் பிறகு, மருத்துவமனைக்கு காரில் ஏற்றி கூட்டிசென்றனர். 5 நாட்கள் மருத்துவமனையில் இருக்கவேண்டும் என மருத்துவர் கூறிவிட அங்கேயே இருக்கவேண்டி போனது!

அந்த வீடு வேலை செய்யும் கமலா அம்மாவும் என்னை கவனித்துகொள்ள அங்கேயே தங்கலானார். தினமும் எனக்கு அவர்கள் வீட்டில் இருந்து சமையல் செய்து கொண்டுவந்து தருவார்! இருவருக்கும் நாங்கள் பேசிக்கொள்ளும் மொழிகளும் அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனாலும்,அந்த பெண்மணி எனக்கு என்னென்ன வேண்டும் என்பதை குறிப்பால் உணர்ந்து செய்து வந்தார். அன்பிற்கும், தாய் பாசத்திற்கும் ஏங்கிக் கிடந்த என்னை சிறு குழந்தையை போல கவனித்தார் கமலா அம்மா!

அன்றைக்கு அந்த அம்மா மட்டும் அங்கே இல்லை என்றால் என்னுடைய நிலை என்ன என்று எனக்கே தெரியாது! வீட்டை விட்டு தூர தேசங்களிலும், பிற மாநிலங்களிலும் மொழி தெரியாமல், அல்லல்பட்டுக் கொண்டு இருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ இளைஞர்களுக்கு இதே போன்று ஓடிசாலான தேகமும், கிழிந்த சேலையுமாய்,கையில் காசு இல்லாவிட்டாலும் மனம் நிறைய அன்பையும்,பாசத்தையும் மட்டுமே உடைமையாய் கொண்டு வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்களாய் வாழ்ந்துகொண்டு இருக்கும் எண்ணில் அடங்கா அம்மாக்களுக்கு என்றுமே மானுடம் கடமைப்பட்டுள்ளது!

பிறகுதான் தெரிந்தது தெய்வமும், அம்மாவும்,வீட்டிலும், கோவிலிலும் மட்டும் இல்லை அது தாய்மை என்னும் பெயரில் இந்த உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறது என்று!

நெஞ்சம் மறப்பதில்லை-1

நெஞ்சம் மறப்பதில்லை-1

ஆயிரம் கனவுகள் சூழ்ந்த பதின்பிராயம் அது! ஒரு புதிய பள்ளிக்குள் அன்று நுழைந்தேன்... கே.எஸ் தியேட்டருக்கு மிகவும் அன்மையில் அமைந்திருந்த பள்ளி அது அதனால் தியேட்டரில் ஓடும் படையப்பா படத்தின் அத்தனைப் வசனங்களையும், பாடல்களையும் உள்வாங்கிக் கொண்டே பாடங்களை கவனித்திருப்போம்!

அங்கு நான் படித்தது ஓராண்டு காலம் தான்! ஓடுகள் வேயப்பட்ட நீளமான வகுப்பறைகள் மற்றும் ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் மட்டும் தான் அதன் சொத்து! அங்கே எங்களின் நட்பு வட்டம் மிகவும் சிறியது நான், தண்டபானி, நந்தகணேஷ், ப்ரீத்தி, லலிதா (லலிதாம்பிகை)  மற்றும் மதுபாலா. நாங்கள் ஆறு பேரும் ஒரு கேங்கு...

அதில் லலிதாவின் மேல் எனக்கு அவ்வளவு ஈர்ப்பு! இப்பொழுதும் கூட அவளின் பெயர் சொல்லும் போது இதழோரம் அரும்பும் புன்னகையை மறைக்க முடிவதில்லை! தினமும் பள்ளி முடிகையில் பள்ளிக்கு வெளியே பதார்த்தங்கள் விற்கும் ஆயாவிடம் மரவள்ளி, நிலக்கடலை என தீனிகளை வாங்கிக் கொரித்தவாறு நானும் லல்லியும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு பேசிக் கொண்டே போவோம்!

அவ்வளவு நட்பு, அவ்வளவு அன்பு, அவ்வளவு காதல் என மார்கழிப் பூவின் மேல் ஊடுருவிய பனியைப் போல மனதினுட் புகுந்தவள் அவள்...என் வீடு ஒரு திசையில் இருந்தாலும் அவளோடு பேசுவதற்கு என்றே உடன் சென்று வீடு வரை விட்டு வந்த நாட்கள் எத்தனையோ!

இது போறாது என்று மாலை வேளைகளில் அவளின் வீட்டிற்குச் சென்று முகம் பார்த்து வந்திருக்கிறேன்...கொஞ்ச நாட்களில் நானும் பள்ளி மாறிவிட ஆனால் அந்த காதல் மட்டும் மனதிலிருந்து மறையவில்லை...ஒரு நாள் மதுபாலாவை என்னுடைய பள்ளியிலேயே பார்க்க நேர்ந்தது...லலிதாவின் நெருங்கிய தோழி அவள்...அவளிடம் விசாரித்த போது "அவ இங்க இல்ல அப்பாவோட தொழில்ல நட்டமாகிருச்சு அதனால சொந்த ஊருக்கு போய்ட்டாங்க, என்கிட்ட கான்டேக்டும் இல்ல டா" என சொல்லிப் போனாள்...

அடுத்த வருடம் அதே பள்ளியில் அவளும் வந்து சேர்ந்தாள்! ஓரிரு முறை என் முகம் பார்த்துப் புன்னகை உதிர்த்துபோனாள். நண்பன் ஒருவனின் உதவியுடன் அவளின் வீட்டையும் கண்டுபிடித்தாயிற்று...ஆனால் என்ன அந்த வீதியில் சைக்கிள் டயர் தேய போய் வந்தது தான் மிச்சம்!

இப்படி நாட்கள் உருண்டோட தேர்வுகளும் முடிந்தது, பள்ளிப் ப்ராயமும் முடிந்தது...ஆனால், அந்த சொல்லாத முதல் காதலின் சுவடுகள் மட்டும் மனதினுள் தங்கி விட்டது மணலினுள் நுழைந்த மழை நீரின் ஈரம் போல! 

காதலின் சுவடு!

அது ஒரு மழை நாள் அவளின் அருகில் நான் அமர்ந்து கொண்டு இருந்தேன் அவளின் இருப்பே எனக்கு ஒரு ஆசுவாசமாய் இருந்தது!

அவள் விரல் பிடித்து, கைகோர்த்து, தலைக்கோதி நகர்ந்த நாட்களை என்ன சொல்ல?

வாழ்க்கை நமக்கு பல்வேறு வடுக்களை விட்டுவிட்டு செல்கிறது...
என் வாழ்வின் மாறாத வடுவாய் என்றும் அவள் என் இதயத்தில் தங்கி விட்டாள்!!

அதனை ஆற்ற மருந்தும் இல்லை...
அவள்மட்டுமே மருந்தென்றாகி விட்டபின் எனக்கேது விடிவு ?
என்னும் வினாவோடு வாழ்க்கையில் பயணித்துக்கொண்டு இருக்கும் ஒரு சாதாரணமான காதலன் நான்!