Tuesday, November 18, 2014

நெஞ்சம் மறப்பதில்லை! - 3

சாமானியரின் தீபாவளி!
தீபாவளிக்கு முந்தின நாள் எப்போதும் போல உற்சாகத்துடன் முருகேசன் கன்னங்குறிச்சி தபால் நிலையத்தை பூட்டிக் கொண்டு பக்ஷனப் பொதியுடன் கிளம்பினார்.
முருகேசன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் தபால் உதவியாளர். கன்னங்குறிச்சி, குருமம்பட்டி, கலெக்டர் நகர் ஆகிய இடங்களில் முருகேசன் அவர்களுக்கு தபால் பட்டுவாடா வேலை அதுமட்டுமல்லாது நீண்ட நாட்கள் அங்கே அவர் தபால் ஊழியர் என்பதால் தீபாவளிக்கு முந்தின நாள் தின்பண்டங்கள் மற்றும் இனிப்பு வகைகள் என அவரின் பை முழுவதும் அந்தப் பகுதி மக்கள் நிரப்பித் தருவது வழக்கம்.
முருகேசனின் வீடு குகைப் பகுதியில் மாடிவீடுகளுக்கு மத்தியில் ஒரு சந்திற்குள் ஓடு வேயப்பட்ட ஒன்டிக்குடித்தன வீடு. மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், மூத்தவன் தண்டபானி 12 ம் வகுப்பு, சிறியவள் கோபிகா 8 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 7 கி.மீ தூரம் சைக்களில் பயணம் செய்து 5 மணியளவில் வீடு வந்து சேருவார் முருகேசன்.
வீடு வந்ததும் சைக்கிளை ஒரமாக சந்தில் கடத்தி விட்டு பக்ஷனப் பொதியுடன் உள்ளே நுழைவார். முகம், கை, கால் கழுவிக் கொண்டுவிட்டு. தான் கொண்டு வந்த பண்டங்களை தனித்தனி பாத்திரங்களில் பக்குவமாக எடுத்து வைப்பார். கொஞ்சம் பண்டங்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பார். இரவு 8 மணி வரை அரட்டையும், விளையாட்டுமாக அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பட்டாளத்துடன் வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கும்!
8 மணிக்கு மேல் தான் முருகேசன் குடும்பத்தின் தீபாவளி சாப்பிங் டைம் ஆரம்பமாகும். மகன், மகளுடன் பேசிக் கொண்டே குகையில் இருந்து சேலம் கடைவீதிக்கு பயணம் நடக்கும். அங்கே போடப்பட்டிருக்கும் சாலையோரக் கடைகளில் தான் தீபாவளிக்கு துணி எடுப்பது வழக்கம். சமயத்தில் சின்னவள் அடம் பிடித்து ஷோ ரூமிற்கு அழைப்பதுண்டு அப்போது முருகேசன் "அங்க எதுக்கு கண்ணு இதே துணியை தான் அங்க ஸ்டிக்கர் ஒட்டி விக்குறானுவ" என சமாதானம் செய்வதுண்டு ஆனால் தண்டபானி கொஞ்சம் விபரம் தெரிந்த பையன் என்பதால் கேட்பதில்லை!
கால் கடுக்க, வாய்வலிக்க பேரம் பேசி ஆளுக்கு தலா 2 செட் துணிமணி, மனைவிக்கு இரண்டு சேலை, ரூ.200 அல்லது 300 க்கு கொஞ்சம் பட்டாசு. கன்னிகாபரமேசுவரிக் கோவில் வீதியில் இருந்து சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வரும் வழியில் லட்சுமி சுவிட்ஸ் பலகாரக் கடையில் 10 ரூபாய் பெருமானமுள்ள ஐஸ் கிரீமையும் சாப்பிட்டுக் கொண்டு நள்ளிரவில் வீடுவந்து சேர்ந்து அமைதியாய் உறங்கி விட்டு அதிகாலையில் துயில் எழுந்து எந்தவித படாடோபமும் இல்லாமல் எளிமையாய் கழிந்துவிடுகிறது ஒரு சாமானியரின் வீட்டு தீபாவளித் திருநாள்!
அனைவருக்கும் என் மனமார்ந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!