கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் நிர்பயா என்கிற பெயரும், முகேஷ் என்கிற பெயரும் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப் பட்டன. "இந்தியாவின் மகள்" என நிர்பயாவை அடையாளப்படுத்திய ஊடகங்கள் முகேஷை யாரென்று அடையாளப்படுத்தும் அவனும் இந்தியக் குடிமகன் தானே?!
தோழி ஒருவர் தனது பதிவில் "அந்த முகேஷின் ஆண்குறியை கொஞ்சம், கொஞ்சமாக வெட்டிக் கொல்ல வேண்டும் எனப் பதிவிட்டிருந்தார்!" இப்போது சொல்லுங்கள் அந்த கற்பழிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலைக்கும், இந்த தோழியின் மனநிலைக்கும் பெரிய வித்யாசம் இருப்பதாகத் தெரியவில்லை! கேட்டால் தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்கிற சப்பைக்கட்டான பதில் கிடைக்கும். சரி இந்த மாதிரியான தண்டனைகள் அதிகமுள்ள வளைகுடா நாடுகளில் வன்புணர்வு குற்றங்கள் எதுவும் நடப்பதில்லையா? அப்படியான தண்டனைகளை கொடுக்க வேண்டுமெனில் இந்திய ஆண்களில் பாதி பேருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்! ஏனெனில் இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு பதினாறு (16) நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகிறார் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன!
சரி முகேஷ் போன்ற மனப்பிறள்வுள்ள மனிதர்கள் உருவாக காரணமாக இருப்பதற்கு இந்த சமூகமும் ஒரு காரணம் தான் அதற்காக நம்மை நாமே தண்டித்துக் கொள்ள எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்?
எப்போதும் இந்தியர்கள் செண்டிமென்ட்டல் இடியட்ஸ் என்பதை மணிக்கு ஒருமுறை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறோம்! அதனாலேயே இந்த மாதிரி அவனின் குறியை வெட்ட வேண்டும், தூக்கிலிட வேண்டும், ஆண்களே இப்படித் தான் என்பன போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கருத்துகள் வந்த விழுந்த வண்ணம் இருக்கின்றன. பெண் குழந்தைகள் அனுபவிக்கும் அதே அளவு பாலியல் தொல்லைகளையும் ஆண்குழந்தைகளும் அனுபவிக்கிறார்கள் என அதே ஆய்வு கூறுகிறது! இப்போது எங்கே கொண்டு போய் முகத்தை வைத்துக் கொள்வீர்கள் இவ்வளவு பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகள்?
நிரந்திமான தீர்வுகளை நோக்கிய நகர்தலை நமது சமூகம் இன்னும் ஒரு இன்ச் கூட முயற்சித்து பார்க்கவில்லை என்பது தான் வருத்தத்திற்குறிய விசயம்! அப்போதைக்கான தீர்வுகளை வீராவேசகமாக பேசிவிட்டு அடுத்த வேளை சோற்றிற்கான வேலைகளை கவனிக்க சென்றுவிடுகிறோம். செக்ஸைப் பற்றின புரிதலும் அதற்கான அரசின் திட்டங்களும் இன்னும் சரியான முறையில் வரையருக்கப்படவில்லை. செக்ஸ் கல்வி மற்றும் பாலின வேறுபாட்டினை வளரும் குழந்தைகள் மத்தியிலும், வளர்ந்த பெரியவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டிய தலையாய கடமை அரசின் கையில் இருக்கிறது!
அதுமட்டுமின்றி நம் வீட்டுக் குழந்தைகளுக்கு நம்முடைய உடல் கட்டமைப்பைப் பற்றின விழிப்புணர்வை கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமை! செக்ஸ் பற்றின விசயங்களை பதின் வயதடைந்த குழந்தைகளுடன், பெற்றோர் தெளிவான விவாதம் செய்ய வேண்டும். மனித இனத்தின் மூலமே காமம் தான் ஒவ்வொரு உயிர்கள் உருவாகக் காரணம் அதுவே! பிறகு அதைப் பற்றின விவாதத்தினை மேற் கொள்வது பாவம் என நினைப்பது சுத்த மடத்தனம்!
இவைகள் என்னுடைய அறிவிற்கு தோன்றின சில விசயங்கள். நண்பர்கள் உங்களது கருத்துக்களை தாராளமாக பதியலாம்.
பெண்களை தெய்வமாக எல்லாம் மதிக்கத் தேவையில்லை! அவளை ஒரு சக உயிராக பார்ப்போம் அதுவே அவளுக்கு அளிக்கும் மிகப் பெரிய மரியாதை!
ஆரோக்கியமான விவாதங்களையும், நல்ல புரிதலையும் இன்றைய சர்வதேச பெண்கள் தினத்தில் நம்வீட்டு வரவேற்பறையிலிருந்து நம் வீட்டுப் பிள்ளைகளிடமிருந்து ஆரம்பிப்போம்! இனி முகேஷ் போன்ற காமுகர்களும் வேண்டாம்! நிர்பயா போன்ற சித்திரவதையை அனுபவிக்கும்/அனுபவித்த பெண்ணும் வேண்டாம்!
அம்மா, அக்கா, அண்ணி, தங்கை, அத்தை, சித்தி, பெரியம்மா, பாட்டி, தோழி & காதலி என என்னை அன்பால் அரவணைக்கும் அனைத்துப் பெண்களுக்கும் என் மனமார்ந்த பெண்கள் தின நல்வாழ்த்துகள்! smile emoticon
No comments:
Post a Comment