Wednesday, March 11, 2015

நட்பு சூழ் உலகு

அகோரமான சத்தத்துடன் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள் அம்மா...என்னவோ எதோ என்று ஓடி வந்து பரிதவித்த பார்வையுடன் அம்மாவை பார்த்தான் பிரபு...அடுப்படியில் வேலை செய்து  கொண்டிருந்த யசோதா போட்டது போட்ட படியே விட்டுவிட்டு ஹாலுற்கு ஓடி வந்தாள்.  இரண்டு வாரத்திற்கு முன்னர் தான் அம்மாவிற்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை சென்னை அரசு மருத்துவமனையில் முடிந்திருந்தது. கழுத்துப்  பகுதியில் அறுவை செய்யப் பட்டிருந்ததால் ஒரு குழாய் மூலம் அம்மா மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அறுவை முடிந்த ஒரே வாரத்தில் டாக்டர்களிடம் ஒப்புதல் வாங்கி அம்மாவை சேலத்திற்கு அழைத்து வந்து விட்டிருந்தான் பிரபு. பிரபுவின் அப்பா பாஸ்கர்  ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு சாலை விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்! அதன் பிறகு வீட்டில் இருந்தது அம்மா, தங்கை யசோதா மற்றும் பிரபு மூன்று பேர் தான்... அப்போது தான் பிரபு படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தான்...  சொற்ப நாட்களில் தான் அம்மாவிற்கு இருந்த தைராய்டு  புற்று நோயாக  மாறி  இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு மருத்துவர்களின் அறிவுரைப் படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அம்மாவை கூட்டிவந்து அறுவை சிகிச்சை செய்தான் பிரபு...

சிகிச்சை முடிந்து சேலத்திற்கு அம்மாவை கூட்டி வந்து வீட்டில் கொஞ்ச நாள் இருந்தால் போதும் சொந்த ஊரின் வாசமே அவளை சீக்கிரம் குணமடைய வைத்து விடும் என்பதில் பிரபு உறுதியுடன் இருந்தான்... ஆனால் சேலத்தின் அப்போதைய சீதோஷன நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை...திசம்பர் மாதம்  ஆகையால் காலை வேளைகளில் பனிபொழிவு அதிகமாகவே இருந்தது! சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என மருத்துவர்களும் அறிவுறுத்தி இருந்தார்கள். ஆனால் காலம் போடும் கணக்கு எப்போதும் நேரெதிர் விகிதத்தில் அல்லவா அமைந்துவிடுகிறது...அம்மாவின் மூச்சு மெதுவாய் ஒடுங்கிக் கொண்டிருந்தது...அவளின் கையினைப் பிடித்திருந்த பிரபுவிற்கு எல்லாமே சூனியமாய் இருந்தது! மெல்ல மெல்ல நாடி ஒடிங்கிற்று சொல்லொண்ணாத துயர் அவன் மனதை பிய்த்து தள்ளியது... யசோதா வாய் விட்டுக் கதறி அழக் கூட முடியாமல் பேய் பிடித்தவளைப் போல செவுற்றின் ஓரம் கூனிக் குறுகி நின்றிருந்தாள்!

அந்த நேரத்தில் சரியாக செல்வா வந்தான் ஆறிலிருந்து இருந்து ஒன்றாகப் படித்தவர்கள் பிரபுவும் செல்வராஜும்...ஓ என்று அலறிய படி ஓடிச் சென்று செல்வாவின் நெஞ்சினில் முகம் பதித்து தாரைத் தாரையாக கண்ணீர் வடித்தான் பிரபு... இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள் என்கின்ற கேள்வி பிரபுவையும், யசோதாவையும் ஆழத் துழைத்திருந்தது... வீடுச் சுவற்றில் இருந்த விநாயகர் படத்தை எடுத்து உடைக்க முயன்றவனை செல்வா இழுத்துப் பிடித்து ஆறுதல் சொன்னான்... பிறகு கட்டிலில் இருந்த அம்மாவின் சடலத்தை இன்னும் சில நண்பர்களின் உதவியுடன் தரையில் இறக்கி வைத்தார்கள்...கொஞ்சம் சொந்தக்காரர்களும் வந்திருந்தார்கள் அதில் கொஞ்சம் பேர் கடன்காரர்களும் இருந்தார்கள்...பிரபுவின் அப்பா அவனுக்கு சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் கொஞ்சம் கடனை சேர்த்து வைத்துவிட்டுச் சென்றிருந்தார், இருக்கின்ற ஓட்டு வீடும் சொந்த வீடு கிடையாது.

பிரபுவின் தாய் மாமனுக்கு அலைபேசி மூலம் தகவல் சொல்லி இருப்பினும் இன்னும் அவர் வந்ததாய் தெரியவில்லை...ஏதோ பிணக்கினால்  அம்மாவும் மாமாவின் வீட்டிற்கு போவதில்லை அவர்களும் இங்கே வருவதில்லை... ரொம்ப தூரமும் இல்லை பஸ் பிடித்தால் அரை மணி நேரத்தில் வந்துவிடலாம்...மணி 3 ஆகி இருந்தது இன்னும் வரவில்லை. அங்கே கூடி இருந்த கொஞ்ச சொந்தக்காரர்களும் ஏதோ கல்யாண வீட்டில் அமர்ந்திருப்பது போல கதை பேசிக் கொண்டிருந்தார்கள்... பிரபுவின் நண்பர்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து நடக்கவேண்டிய வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். செல்வா, சுந்தரராஜ், முனியப்பன், முருகதாஸ் மற்றும் சில நண்பர்கள்...பணத்திற்காகவோ, பொருளிற்க்காகவோ அவர்கள் தயங்கி நிற்கவில்லை. கையில் இருந்த பணத்தைக் கொண்டு அடக்கத்திற்கான அத்தனை வேலைகளையும் பார்த்தார்கள்!

மணி 5.30யை நெருங்கி இருந்தது. மாமன் இன்னும் வருவதாக தெரியவில்லை. செல்வா பிரபுவிடம் சென்று "பிரபு நேரமாகிட்டே போகுது மேலுக்கு முடியாம கிடந்த உடம்பு ரொம்ப நேரம் வச்சு இருக்க கூடாது! காட்டுக்கு எடுத்துட்டு போய் சீக்ரமா எரிச்சிடுறது நல்லது..."என்றான் காதோரமாக "தாய் வீடு கொடித் துணி போடுறதுக்கு கூட வக்கில்லாமலா டா போய்ட்டா எங்கம்மா?" என சொல்லியபடியே விசும்பி விசும்பி அழுதான் பிரபு... அந்த நேரம் பார்த்து சுந்தர் உள்ளே வந்து சொன்னான் "டேய் அப்டி எல்லாம் நினைக்காத டா எத்தினி நாள் இந்த அம்மா  கையால நான் சாப்டிருப்பேன் அந்த கடனுக்காக நான் போடுறேண்டா தாய் வீட்டுக் கோடித் துணி!" என்றான் ஆவேசமாக...அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா சடங்குகளையும் முடிந்த பிறகு பிரேத ஊர்வலம் இடுகாட்டை நெருங்கிக் கொண்டிருந்தது...

சிதையில் அம்மாவின் உடம்பு வைக்கப் பட்டிருந்தது... யாரோ 2,3 பேர் அந்த சமயத்தில் காட்டிற்குள் நுழைந்தார்கள்...மாமா சில சொந்தக்காரர்கள் சகிதமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது..."முகத்த கடைசியா பாக்க வேண்டியவங்க பாத்துக்கோங்க" என்கிற குரல் கேட்டது. அந்த குரலைக் கேட்டதும் அந்த மூன்று பேரும் அவசரமாக நடந்து வந்தனர். மாமாவைப் பார்த்ததும் பிரபுவிற்கு பற்றிக்  கொண்டுவந்தது! திரும்ப நின்று "யார பாக்க இங்க வந்தீங்க என்றான்?" அவர் பேசாமல் அமைதியாக நின்றார்..."பாவிகளா இந்த பொம்பள போய் சேரும் போது கூட நிம்மதியா போக விட மாட்டிங்களா?" என்றான் கண்கள் சிவக்க..."இல்ல மாப்ள உங்க அம்மா பேசின பேச்சு....." என முடிப்பதற்குள் செல்வா குறுக்கிட்டான் "ஏங்க என்னதான் பிரச்சனையா இருந்தாலும் ஒரு மனுஷி சாகும் போது கூடவா இப்டி மனசுல வச்சு பழி வாங்குவீங்க?" என்றான்... பிரபு குறுக்கிட்டு "விடுறா செல்வா என்னைய பொறுத்த வரைக்கும் என்ன பெத்தவ சாகல ஆனா இவங்க எப்பவோ செத்துட்டாங்க...செத்த பொணத்துகிட்ட என்ன டா பேச்சு ஆகுற வேலைய பாக்கலாம் வாடா"... கூட வந்தவர் "தம்பி பாத்து மரியாதையா பேசுப்பா" என்றார்... "யோவ் கூடப் பொறந்த தங்கச்சிக்கு ஒரு கோடித் துணி போட வக்கில்ல இந்தாளுக்கு என்னையா மரியாத? ச்சி இனிமே இங்க நின்னீங்கனா  இன்னும் மரியாதை கெட்டுரும்" என்று பொறுமினான் பிரபு...ஒன்றும் பேசுவதற்கு முடியாமல் அந்த மூவரும் அமைதியாக நடையைக் கட்டத் துவங்கினர்... சிதை எரியத் துவங்கியது...அம்மாவின் இருப்பு இனிமேல் இல்லை என்னும் எண்ணமே அவன் மனதில் பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது...

"சார் கணக்கு முடிக்க மாமா, மச்சான், அண்ணன், தம்பிங்க  எல்லாரும் வாங்க" என வெட்டியான் கூப்பிட... அங்கே இருந்த கொஞ்சம் சொந்தங்களும் அதற்கு முன்னமே கிளம்பி விட்டிருந்தனர்...

அங்கே இருந்த நண்பர்கள் கூட்டம் மட்டும் அங்கே இருந்த கூரை வேயப்பட்ட கொட்டகைக்குப் போய் உக்கார்ந்து நான் தான் மாமன், இவன் மச்சான், இவன் அண்ணன், அவன் தம்பி என கணக்கை முடித்து அமர்ந்திருந்தனர்... அசதியாய் இருந்ததால் செல்வா மடியில் அவனைப் சற்று நேரம் படுக்க வைத்திருந்தான்... சற்று நேரம் தூங்கிய பின் கண்விழித்துப் பார்த்தான் பிரபு... அம்மா செல்வாவின் முகத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்...கண்களில் நீர் தானாகப் பெருக்கெடுத்து ஓடியது...செல்வா கையில் இருந்த கைக்குட்டையை வைத்து துடைத்து விட்டான்...

5 comments: