Wednesday, July 19, 2017

நூல் அறிமுகம் - மிளிர் கல் - இரா.முருகவேள்

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படியாக கொண்டு ஆவணப்படம் எடுப்பதற்காக டெல்லியில் இருந்து கிளம்பி தமிழகத்திற்கு வரும் முல்லையும், சென்னையில் அவளுடன் இணையும் அவளுடைய கல்லூரியில் படித்த கம்யூனிச தோழனான நவீனும், இடையில் சந்திக்கும் பேராசிரியர் ஸ்ரீகுமாரும் தான் நாவலின் முக்கியமான கதை மாந்தர்கள்.

பயணத்தை சென்னையில் இருந்து ஆரம்பித்து பூம்புகாரில் வாழ்ந்த கண்ணகியின் வாழ்க்கையை பற்றிய செய்தியை சேகரிப்பதற்கான பயணத்தை மேற்கொள்கிறார்கள் முல்லையும், நவீனும். ஏதேதோ கற்பனைகளுடன் புகாரை அனுகிய முல்லைக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது!

கண்ணகி தங்கியிருந்த எழுநிலை மாடத்தையும், ஏனைய முக்கியமான இடங்களையும் நினைவுகளில் அசை போட்டுக் கொண்டு வந்தவளுக்கு இப்போது இருக்கும் புகாரின் கலர் கலரான கட்டிடங்களும் பழமை மறந்த இடங்களும் வெறுப்பை உண்டாக்கி விடுகின்றது. ஒரு கட்டத்தில் முல்லை இது வேண்டாம் நாம் திரும்பி விடலாம் என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறாள்.

அந்த ஒரு சூழலில் தான் பேராசிரியர் ஸ்ரீகுமாரை அவர்கள் சந்திக்கிறார்கள். அவர் கூறுகின்ற வராலற்றுத் தவகல்களால் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. இதற்கிடையில் ரத்தினக் கற்களை பற்றி நாம் அறியாத பல விசயங்களை ஆசிரியர் விளக்குகிறார். அந்த ஆராய்ச்சிக்காக தான் ஸ்ரீகுமார் ஒரு பெரு நிறுவனத்தின் சார்பாக ஸ்பான்சர் செய்யப்பட்டு வந்திப்பது அவரின் கடத்தலிற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் தெரிய வருகிறது!

நாம் இன்று ப்ரிஷியஸ் ஸ்டோன்ஸ் என்று நகைகளில் பதித்து அணிந்து கொள்ளும் வைரகளின் பின்னும், வைடூரியங்களின் பின்னும், இன்னபிற கற்களின் பின்னும் எப்பேர்ப்பட்ட பெருமுதலைகளும், கார்ப்பரேட் வலைப்பின்னலும் சூழ்ந்து கொண்டிருக்கிறது என நிறைய செயதிகளைக் கொட்டியிருக்கிறார். அதே போல சமகால நிகழ்வுகளான மீத்தேன் பற்றியும், விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றியும், நியூட்ரினோ பற்றியும் ஆங்காங்கே அடிக் கோடிட்டு காட்டியிருக்கிறார்!

கடத்தப்பட்ட இடத்திலிருந்து ஸ்ரீகுமார் விடுதலையாகி வந்த பிறகு கண்ணகி சென்ற பாதையை நோக்கிப் பயணம் ஆரம்பிக்கிறது...இடைஇடையே வரும் சிலப்பதிகார விளக்கங்களும் வழிநெடுக அவர்கள் ஆங்காங்கே கண்டடையும் சிலம்பு சார்ந்த இடங்களும் ஆசிரியர் அதை விவரித்த விதமும் நம்மையும் அந்த பயணத்தின் ஒரு பகுதியாகவே உடன் பயணிக்க வைத்திருக்க்கிறது!

பூம்புகாரில் ஆரம்பித்து, கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகளும் பயணித்த அந்த 1800 வருடத்திற்கு முந்திய பெருவழியின் சித்திரம் சற்றே ஒருகனம் கண்முன் வந்து செல்வது நிச்சயம்! கதை நெடுக ரத்தினக் கற்களைப் பற்றிய நிறைய தரவுகள், வலாற்றினைப் பற்றியும், பழந்தமிழரின் வாழ்வியல் குறித்தும், அந்தந்த இடங்களில் இருந்த பழங்குடியினங்களின் வாழ்வியல் குறித்தும் நிறைய விசயங்களை ஸ்ரீகுமார் மூலமாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது! அதே நேரம் சில இடங்களில் ஓவர் டோஸாகவும் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது...அதனால் சில இடங்களில் அயர்ச்சியும் பீடிக்கிறது...

கதை பூம்புகாரில் ஆரம்பித்து மதுரை வழியாக கம்பம் பள்ளத்தாக்கின் வழியாக குமுளி மேல் ஏறி கண்ணகி கோயிலில் இருந்து கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் கொடுங்கல்லூரில் ஒரு சிலிர்ப்புடன் முடிவடைகிறது...

இந்த நாவலை படித்ததும் இதை எழுதுவதற்கு ஆசிரியர் எத்தனை ஆய்வுகள், எத்தனை புத்தகங்களை புரட்டி குறிப்புகள் எடுத்திருப்பார்! என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது!

மளிர் கல்
ஆசிரியர் : இரா.முருகவேள்,
பதிப்பகம் : பொன்னுலகம் பதிப்பகம்,
விலை : ₹200