Thursday, November 30, 2017

நூல் அறிமுகம் - வலை (குறுநாவல்) - ஜான் பிரபு

கடல் எப்பொழுதும் ஒரு பெரும் ஈர்ப்பினை மனிதனை நோக்கி செலுத்திக் கொண்டேயிருக்கிறது! சமவெளிகளில் வாழும் மக்களுக்கு நெய்தல் நிலம் ஒரு அமைதியைத் தரும் பிரதேசமாகவே இருந்து வந்திருக்கிறது...

ஆனால், அந்த நெய்தல் வெளிக்கு இன்னொரு ஒரு முகமும் இருக்கிறது...நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் கடல்சார் பொருட்கள் நம்மை வந்தடைய உயிரைப் பிணையம் வைத்து கொண்டு வரும் கடலோடி நண்பர்களின் வாழ் நிலையை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வடித்திருக்கிறார் ஆசிரியர்...

கடலோடி மக்களின் வாழ்க்கைத் தரம், அவர்கள் மீன்பிடி தொழிலின் போது இலங்கைக் கடற்படையினால் படும் துயரங்கள், அதனால் குடும்பங்கள் சந்தித்த இழப்புகள், வாழ் சூழலினால் நிறைவேறாமல் போன ஆசைகள், காதல்கள் என ஒரு கடலோடி சகோதரனின் வீட்டிலேயே ஒருவனாக இருந்து பார்ப்பதைப் போன்ற ஒரு உணர்வை புத்தகம் ஏற்படுத்தியிருக்கிறது!

அளவான கதாபாத்திரங்களைக் கொண்டு கதைச் சூழலை வெகு இயல்பாய் கட்டமைத்திருக்கிறார் தோழர் ஜான் பிரபு! நாம் தினமும் செய்திகளில் காணும் இலங்கைக் கடற்படையினால் நடத்தப்படும் கைதுகளையும், கொலைகளையும் ஏதோ பத்தோடு பதினொன்றாக கடந்து விடுகிறோம்...ஆனால், நம்முடைய சாப்பாட்டு மேஜைக்கு வரும் ஒவ்வொரு கடல்சார் உணவுப் பொருட்களுக்குப் பின்னும் ஏதோ ஒரு மீனவ நண்பனின் மரண பயம் கலந்த உழைப்பு இருக்கிறது என்பதை இந்த நாவல் நினைவுபடுத்திச் செல்லும்!

நூலின் பெயர் : வலை (குறுநாவல்)
ஆசிரியர் : ஜான் பிரபு
பதிப்பகம் : ஜீவா படைப்பகம்

Wednesday, November 8, 2017

நூல் அறிமுகம் - சோளகர் தொட்டி - சா.பாலமுருகன்

இந்த நாவலைப் பற்றி நண்பர்கள் அதிகம் பேசியிருந்தாலும் இப்போது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் வாழும் சோளகர் என்னும் பழங்குடிகள் வாழும் "சோளகர் தொட்டி" (தொட்டி என்பது கிராமம் என்று பொருள்) என்னும் இடம் தான் கதையின் நிகழ்விடம்...

முதல் பாதி சோளகர்களின் வாழ்வியல் பற்றிய பதிவாக விரிகிறது...தொட்டியின் தலைவனாக கொத்தல்லி கிழவன் இருக்கிறான்...சிவண்ணாவும், அவன் அம்மா ஜோகம்மாளும், ஜடையனும் என தொட்டியில் நிறைய கதாபாத்திரங்கள் வருகிறார்கள்...அவர்களின் முக்கியமான உணவு ராகி அங்கேயிருக்கும் நிலத்தில் பயிரிட்டு பகிர்ந்துண்டு வாழ்ந்து வருகிறார்கள்...என சம்பவங்களை கொர்த்து முதலாம் அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர்.

இரண்டாம் அத்தியாயத்தில் அந்த மக்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது...சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு உதவிகள் இந்த வன கிராமங்களில் இருந்த செல்வாதாக கூறி தமிழக/கர்நாடக காவல் துறை கிராமங்களில்  நுழைகிறது! அங்கே இருக்கும் மக்கள் அனைவரையும் கண்மூடித்தனமாக விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்கிறது...அடி, உதையைத் தாண்டி சொல்லவியலாத சித்திரவதைகளை எல்லாம் அந்த மக்கள் அனுபவிக்கிறார்கள்...சிவண்ணாவையும் தம்மையாவையும் காவல் துறை கைது செய்து அழைத்துப் போய் விசாரணை என்கிற பெயரில் கடும் சித்திரவதைக்கு  உள்ளாக்குகிறது....காலப்போக்கில் போலீசின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக சிவண்ணா வீரப்பனிடம் தஞ்சமடைகிறான்.

அதன் பிறகு சிவண்ணாவின் தம்பி ஜடையன், மனைவி மாதி மற்றும் அவள் மகள் என அனைவரையும் காவல் துறை பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகிறது! மாதேஸ்வரன் மலையில் நடக்கும் விசாரணை முகாமிற்கு மாதியும்,  அவள் மகளும் மாதியின் அண்ணன் வீட்டில் தஞ்சமடைந்திருக்கும் போது அடித்து தூக்கி வரப்படுகிறார்கள்! அங்கே ஏற்கனவே இவர்களைப் போல நிறைய வன கிராம மக்களைக் கொண்டு வந்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள்...

அங்கே இருப்பவர்கள் படும் மனிதாபிமானம் அற்ற துன்பங்களை படிக்கும் போது காவல்துறை மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும், நம்பிக்கையும் இழந்து விடுவோம்...சிலநாட்களில் மாதிக்கு இரத்த போக்கும், சுயநினைவு அற்றுப் போகவே அவர்கள் இருவரையும்  விடுவித்து விடுவார்கள்...மாதி சிறிது காலம் அவளின் அண்ணன் வீட்டில் தங்கியருந்து அவளின் மகளுக்கும், அண்ணன் மகன் ஜூருண்டைக்கும் கல்யாணத்தை முடித்து வைத்த சில நாட்களில் தொட்டிக்கு திரும்பி விடுவாள்...

தொட்டியில் அவள் மாமியார் ஜோகம்மாள் நோய்வாய் பட்டு பக்க வாதம் வந்து பாதிக்கப்பட்டு இருப்பாள்...மாதி அவளுக்கான பணிவிடைகளை செய்து சீர்காட்டிலும் ராகி பயிரிடுவாள்...இதற்கிடையில் சிவண்ணா நோய்வாய்ப்பட்ட அவன் அம்மாவை பார்த்து விட்டு போக வருவான்...அப்போது மாதியிடம் தான் கோர்ட்டில் சரண்டையப் போவதாக கூறிச் செல்வான்....போலீசார் கொத்தல்லியிடம் சிவண்ணா தொட்டிக்கு வந்தால் தகவல் சொல்ல வேண்டும் சொல்லியிருப்பார்கள்....சிவண்ணா சரணைடந்த விசயத்தை செய்தி தாள் மூலம் கேள்விப்பட்டு தலமலை முகாமின் இன்ஸ்பெக்டர் தொட்டிக்கு வந்து கொத்தல்லிக் கிழவனை திட்டிவிட்டு போவான்...அப்போது மாதியும், ஜோகம்மாளும் அருகிலிருப்பார்கள்...இதைக் கேட்டதும் சிவண்ணா உயிரோடு தான் இருக்கிறான் என நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள்!

அதன் பிறகு இரண்டு நாட்கள் இரவுகளில் தொடர்ந்து மழை பெய்து ராகி பயிரை உயிர்த்தெழ செய்திருக்கும்...சில நாட்களில் ஜோகம்மாளும் இறந்து விடுவாள்... மாதி சிவண்ணாவின் வருகைக்காக காத்திருப்பதாக கதை முடிகிறது...

சோளகர் தொட்டி
ச.பாலமுருகன்
விலை : ₹150
__________________________________________

சோளகர் தொட்டியின் பற்றி இணையத்தளத்தில் தேடிய போது சமீபத்தில் நடந்த இந்த ஒன்று கூடல் பற்றிய செய்தி ஆச்சரியத்தையும், நிம்மதியையும் அளித்தது...இணைப்பு கீழே :

சோளகர் தொட்டிக்கு நன்றி கூறிய சோளகர்கள்...

- ர.கேசவராஜ்
09-11-2017

Wednesday, November 1, 2017

நூல் அறிமுகம் - விலங்குப் பண்ணை - ஜார்ஜ் ஆர்வெல்

புத்கத்தை எடுத்து படிக்க ஆரம்பித்ததுமே மனசுக்குள் ஒரு கேள்வி 1945 ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில் எப்படி இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஓத்துப் போகின்றது? என்பதாகத் தான் இருக்கிறது.

புத்தகம் கம்யூனிச அதிகார வர்க்கத்தினுடைய அநியாயங்களையும், சுரண்டல்களையும் கருப் பொருளாகவும், விலங்குகளைக் குறியீடாக வைத்து எழுதப்பட்டிருந்தாலும், தமிழகத்தின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை இந்தப் புத்தகம் தீர்க்கமான பார்வையினை வெளியிட்டிருப்பதை நீங்கள் காணலாம். இதே பார்வை அனேகமான அரசியல் காலகட்டங்களோடு பொறுந்தியும் இருந்திருக்கிறது.

படிப்பதற்கு கடினமில்லாத சொற்களின் கலவையோடு மொழிபெயர்த்திருக்கிறார் பி.வி.ராமஸ்வாமி. இன்றைய சூழலில் தமிழ் மக்கள் நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகம் விலங்குப் பண்ணை!

விலங்குப் பண்ணை (141 பக்கங்கள்)

- ஜார்ஜ் ஆர்வெல் (தமிழில் : பி.வி.ராமஸ்வாமி)

கிழக்கு பதிப்பகம் - விலை : ரூ.85