கடல் எப்பொழுதும் ஒரு பெரும் ஈர்ப்பினை மனிதனை நோக்கி செலுத்திக் கொண்டேயிருக்கிறது! சமவெளிகளில் வாழும் மக்களுக்கு நெய்தல் நிலம் ஒரு அமைதியைத் தரும் பிரதேசமாகவே இருந்து வந்திருக்கிறது...
ஆனால், அந்த நெய்தல் வெளிக்கு இன்னொரு ஒரு முகமும் இருக்கிறது...நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் கடல்சார் பொருட்கள் நம்மை வந்தடைய உயிரைப் பிணையம் வைத்து கொண்டு வரும் கடலோடி நண்பர்களின் வாழ் நிலையை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வடித்திருக்கிறார் ஆசிரியர்...
கடலோடி மக்களின் வாழ்க்கைத் தரம், அவர்கள் மீன்பிடி தொழிலின் போது இலங்கைக் கடற்படையினால் படும் துயரங்கள், அதனால் குடும்பங்கள் சந்தித்த இழப்புகள், வாழ் சூழலினால் நிறைவேறாமல் போன ஆசைகள், காதல்கள் என ஒரு கடலோடி சகோதரனின் வீட்டிலேயே ஒருவனாக இருந்து பார்ப்பதைப் போன்ற ஒரு உணர்வை புத்தகம் ஏற்படுத்தியிருக்கிறது!
அளவான கதாபாத்திரங்களைக் கொண்டு கதைச் சூழலை வெகு இயல்பாய் கட்டமைத்திருக்கிறார் தோழர் ஜான் பிரபு! நாம் தினமும் செய்திகளில் காணும் இலங்கைக் கடற்படையினால் நடத்தப்படும் கைதுகளையும், கொலைகளையும் ஏதோ பத்தோடு பதினொன்றாக கடந்து விடுகிறோம்...ஆனால், நம்முடைய சாப்பாட்டு மேஜைக்கு வரும் ஒவ்வொரு கடல்சார் உணவுப் பொருட்களுக்குப் பின்னும் ஏதோ ஒரு மீனவ நண்பனின் மரண பயம் கலந்த உழைப்பு இருக்கிறது என்பதை இந்த நாவல் நினைவுபடுத்திச் செல்லும்!
நூலின் பெயர் : வலை (குறுநாவல்)
ஆசிரியர் : ஜான் பிரபு
பதிப்பகம் : ஜீவா படைப்பகம்
No comments:
Post a Comment