Friday, December 29, 2017

இந்த ஆண்டு வாசித்த நூல்கள் - 2017

கடந்த வருடத்தைவிட இந்த வருடம் என்னளவில் வாசிப்பிற்கு அதிக நேரம் ஒதுக்கியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்...அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் என் குற்றவுணர்வைத் தூண்டி வாசிக்க வைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்!

படித்த புத்தக்கங்கள் கொஞ்சமேனும் மனிதர்களைப் பற்றிய புரிதலையும், உலகத்தைப் பற்றிய புரிதலையும் அளித்திருக்கிறது என்கிற திருப்தி என்னை வாசிப்பை நோக்கியும் மனிதர்களை நோக்கியும் இழுத்துச் செல்கிறது...

இவை நான் வாசித்த புத்தகங்கள் மட்டுமே. இந்த பட்டியல் தர வரிசை கிடையாது...

இந்த வருடம் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல் கீழே :

1. விலங்குப் பண்ணை - ஜார்ஜ் ஆர்வெல்

2. கிழவனும் கடலும் - எர்னஸ்ட் ஹெமிங்வே

3. தஞ்சைப் பிரகாஷ் சிறுகதைகள் - அகநாழிகை பொன்.வாசுதேவன்

4. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்

5. மாதொருபாகன் - பெருமாள் முருகன்

6. ஆலவாயன் - பெருமாள் முருகன்

7. ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

8. சிலிர்ப்பு - தி.ஜானகிராமன்

9. இரவிற்கு முன்பு வருவது மாலை - ஆதவன்

10. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்யாயன்

11. சாதியை ஒழிக்க வழி - டாக்டர் பீ.ஆர்.அம்பேத்கர்

12. கிருஷணப் பருந்து - ஆ.மாதவன்

13. ஒரு சிறு இசை - வண்ணதாசன்

14. மரப்பசு - தி.ஜானகிராமன்

15. நாளை மற்றொரு நாளே - ஜி.நாகராஜன்

16. பொன்னியின் செல்வன் (பாகம் 1&2)

17. கருக்கு - பாமா

18. மிளர்கல் - இரா.முருகவேள்

19. சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்

20. பூக்குழி - பெருமாள் முருகன்

21. பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார்

22. சாயாவனம் - சா.கந்தசாமி

23. வலை (குறுநாவல்) - ஜான் பிரபு

24. அஜ்வா - சரவணன் சந்திரன்

25. வெட்டாட்டம் - ஷான்

26. முகிலினி - இரா.முருகவேள்

புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்த நண்பர்களுக்கும், தங்கள் வாழ்வின் அனுபவங்களையும் தங்களின் எழுத்தின் வழியாக வந்து என்னிடம் உரையாடும் எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 🙏🙏🙏

புத்தாண்டையும், ஜனவரி புத்தக திருவிழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்!  😍😍😀😀

- கேசவராஜ் ரங்கநாதன்
29/12/2017

Tuesday, December 26, 2017

நூல் அறிமுகம் - சிலிர்ப்பு (தேர்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்) - தி.ஜானகிராமன்

மொத்தம் 29 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. எந்த ஒரு சிரமமும் இன்றி ஒவ்வொரு கதைகளினூடாக எளிமையாக பயணிக்க வைக்கிறார் தி.ஜா. ரொம்பவும் பாரமான சொற் பிரயோகம் இல்லாமல் இயல்பான தமிழில் கதை மாந்தர்களை கண் முன்னே நிழலாட வைத்திருக்கிறார்.

தி.ஜா வை பொறுத்தமட்டில் வாழ்க்கையை ரொம்பவும் சிக்கலுடையதாக ஆக்காமல் அதன் போக்கில் நடக்கவிடும் செறிவுடன் கூடய, புன்னகைக் கூடிய, லேசாக சிலிர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு இயல்புவாத எழுத்தின் சொந்தக்காராகவே பார்க்க முடிகிறது.

நாம் தினந்தோறும் வழியில் பார்க்கும் ஏதோ ஒரு கிழவரின் சாயலை ஒத்திருக்கிறார் 'அக்பர் சாஸ்திரி'. 'கள்ளி' சிறுகதையைப் படிக்கும் போது சென்னையில் இப்போது இருக்கின்ற வெயில் முன் எப்போதும் இருந்திருக்கிறது என்பதை உணர்வுப் பூர்வமாக உணர முடிகிறது! அதே போல வெயில் காலத்தில் வந்துவிட்டுப் போகும் பெருமழையின் பெருமிதத்தை வார்த்தைகளால் அழகாக கட்டமைத்து இருக்கிறார்! இதே போல பட்டணத்து வாழ்க்கைப்பாடுகளையும் அழகாக சொல்லியிருக்கிறார்.

தி.ஜா சங்கீதத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர் ஆதலால் நிறைய கதைகளில் சங்கீத சொற்றொடர்களை இழையோட விட்டிருக்கிறார். உதாரணத்திற்கு 'ஐயரும் ஐயாறும் (ஒரு ஆராய்ச்சி அறிக்கை)', 'பாஷாங்க ராகம்' போன்ற கதைகளைச் சொல்லலாம். சங்கீதம் சம்பந்தப்பட்ட வாத்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் ஆயர்ச்சி ஏற்ப்படாத வகையில் ஒவ்வொரு கதைகளையும் இதமாக நகர்த்தியிருக்கிறார்.

சுந்தர ராமசாமி கூறுவதைப் போல "சிருஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்" தி.ஜா.

ஒவ்வொரு கதைகளை படிக்கும் போதும் நம் மனதினை மயிலிறகால் வருடி சிலர்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்.

சிலிர்ப்பு (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)
ஆசிரியர் : தி.ஜானகிராமன்
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : ரூ.325

Tuesday, December 12, 2017

நூல் அறிமுகம் - வெட்டாட்டம் - ஷான்

நாவல் ஆரம்பத்திலேயே இரகசிய தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு பேச்சு வார்த்தையாகவே ஆரம்பிக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து அதிவேகத்திற்கு அழைத்துச் செல்லும் எழுத்துநடை...

முதலமைச்சராக இருக்கும் வினோதன் வழக்கின் காரணமாக அவரது மகன் வருணை ஒருநாள் இரவில் முதலமைச்சர் ஆக்கிவிடுகிறார். ஆனால், வருணுக்கு சுத்தமாக அரசியல் அனுபவம் கிடையாது. கூடவே தன் அம்மாவின் இறப்பிற்கு காரணமாக இருந்தார் வினோதன் என்பதால் அவர் மேல் வருணிற்கு நெடுநாள் கோபம். ஒரு கட்டாயத்தின் பெயரில் தான் முதலமைச்சராக பதவியேற்கிறான் வருண். கொஞ்ச நாட்கள் தான் அதன் பிறகு வழக்கிலிருந்து அப்பா மீண்டு வந்து தன்னை இந்த பதவிச் சுமையிலிருந்து நீக்கி விடுவார் என்கிற எண்ணத்தோடு பதவியில் அமர்கிறான்...

ஆனால், அதன் பிறகு நிலைமை தலைகீழாகிறது. வழக்கின் தீர்ப்பு எதிராக வர வினோதன் சிறையில் இருக்க வேண்டியதாகிறது! உடன் இருந்து நெறிபடுத்திக் கொண்டிருந்த கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரும் அமைச்சருமான அபுதாஹிர் வினோதனின் விடுதலைக்காக டெல்லி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் வருணின் கல்லூரிப் பேராசிரியர் மகேந்திரனிடம் உதவி கேட்கிறான். அவரும் வருணிற்கு வழிகாட்டுவதற்கு ஒப்புக் கொள்கிறார். ஆனால், வினோதனுக்கும், மகேந்திரனுக்கும் தீராத பகை இருந்து வந்தது. ஒருகாலத்தில் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர் தான் மகேந்திரன்.

நாட்கள் செல்ல செல்ல வேறு ஒருசில அசம்பாவிதங்கள் நடந்தேருகின்றன. அதனால் வருணிற்கு பதவியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகிறது. ஒரு கட்டத்தில் பதவியிருந்தால் தான் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்கிற மாதிரியான பவர் பாலிட்டிக்ஸின் சுழலில் வருண் மாட்டிக் கொள்கிறான்!

சமகால நிகழ்வுகளை வைத்து அடுத்தடுத்த அடுத்தடுத்த அத்யாயங்களை சோர்வின்றி கட்டமைத்திருக்கிறார் ஆசிரியர்! இன்னும் சொல்லப் போனால் சமீபத்திய மற்றும் 80 களின் அரசியல் சூழலையும் நாவலில் கையண்டிருக்கிறார்... கதையின் ப்ளஸ் / மைனஸ் என்று எடுத்துக் கொண்டால் இரண்டுமே இந்த சமகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் தான் என்று கூறலாம்! ஒரு கட்டத்தில் இதற்க்குப் பிறகு இது தான் நடக்கப் போகிறது என்பதை எளிதாக யூகித்து விட முடிகிறது...

அரசியல்வாதிகள் அவர்களின் சொத்துக்களை எவ்வாறு எல்லாம் பதுக்குகிறார்கள், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், குட்டிக் குட்டித் தீவுகளுக்கும் எப்படி பணம் முதலீடாக கொண்டு செல்லப்படுகிறது என்பதை விளக்கமாக இடைஇடையே சொல்லியிருப்பது கதையின் தொய்விலிருந்து மீட்டு வேகமெடுக்க வைக்கிறது! டெக்னாலெஜியை எப்படி எல்லாம் பயன்படுத்தி தில்லு முல்லுகள் நிகழ்த்தப்படுகிறது என்பதையும் கதையோட்டத்துடன் சொல்லியிருக்கிறார்...

ஒரு விறுவிறுப்பான கதையை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திருக்கிறார் ஷான்!

- ர.கேசவராஜ்

12-12-2017

வெட்டாட்டம் - ஷான்
யாவரும் பதிப்பகம்
விலை - ₹240