நாவல் ஆரம்பத்திலேயே இரகசிய தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு பேச்சு வார்த்தையாகவே ஆரம்பிக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து அதிவேகத்திற்கு அழைத்துச் செல்லும் எழுத்துநடை...
முதலமைச்சராக இருக்கும் வினோதன் வழக்கின் காரணமாக அவரது மகன் வருணை ஒருநாள் இரவில் முதலமைச்சர் ஆக்கிவிடுகிறார். ஆனால், வருணுக்கு சுத்தமாக அரசியல் அனுபவம் கிடையாது. கூடவே தன் அம்மாவின் இறப்பிற்கு காரணமாக இருந்தார் வினோதன் என்பதால் அவர் மேல் வருணிற்கு நெடுநாள் கோபம். ஒரு கட்டாயத்தின் பெயரில் தான் முதலமைச்சராக பதவியேற்கிறான் வருண். கொஞ்ச நாட்கள் தான் அதன் பிறகு வழக்கிலிருந்து அப்பா மீண்டு வந்து தன்னை இந்த பதவிச் சுமையிலிருந்து நீக்கி விடுவார் என்கிற எண்ணத்தோடு பதவியில் அமர்கிறான்...
ஆனால், அதன் பிறகு நிலைமை தலைகீழாகிறது. வழக்கின் தீர்ப்பு எதிராக வர வினோதன் சிறையில் இருக்க வேண்டியதாகிறது! உடன் இருந்து நெறிபடுத்திக் கொண்டிருந்த கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரும் அமைச்சருமான அபுதாஹிர் வினோதனின் விடுதலைக்காக டெல்லி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் வருணின் கல்லூரிப் பேராசிரியர் மகேந்திரனிடம் உதவி கேட்கிறான். அவரும் வருணிற்கு வழிகாட்டுவதற்கு ஒப்புக் கொள்கிறார். ஆனால், வினோதனுக்கும், மகேந்திரனுக்கும் தீராத பகை இருந்து வந்தது. ஒருகாலத்தில் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர் தான் மகேந்திரன்.
நாட்கள் செல்ல செல்ல வேறு ஒருசில அசம்பாவிதங்கள் நடந்தேருகின்றன. அதனால் வருணிற்கு பதவியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகிறது. ஒரு கட்டத்தில் பதவியிருந்தால் தான் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்கிற மாதிரியான பவர் பாலிட்டிக்ஸின் சுழலில் வருண் மாட்டிக் கொள்கிறான்!
சமகால நிகழ்வுகளை வைத்து அடுத்தடுத்த அடுத்தடுத்த அத்யாயங்களை சோர்வின்றி கட்டமைத்திருக்கிறார் ஆசிரியர்! இன்னும் சொல்லப் போனால் சமீபத்திய மற்றும் 80 களின் அரசியல் சூழலையும் நாவலில் கையண்டிருக்கிறார்... கதையின் ப்ளஸ் / மைனஸ் என்று எடுத்துக் கொண்டால் இரண்டுமே இந்த சமகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் தான் என்று கூறலாம்! ஒரு கட்டத்தில் இதற்க்குப் பிறகு இது தான் நடக்கப் போகிறது என்பதை எளிதாக யூகித்து விட முடிகிறது...
அரசியல்வாதிகள் அவர்களின் சொத்துக்களை எவ்வாறு எல்லாம் பதுக்குகிறார்கள், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், குட்டிக் குட்டித் தீவுகளுக்கும் எப்படி பணம் முதலீடாக கொண்டு செல்லப்படுகிறது என்பதை விளக்கமாக இடைஇடையே சொல்லியிருப்பது கதையின் தொய்விலிருந்து மீட்டு வேகமெடுக்க வைக்கிறது! டெக்னாலெஜியை எப்படி எல்லாம் பயன்படுத்தி தில்லு முல்லுகள் நிகழ்த்தப்படுகிறது என்பதையும் கதையோட்டத்துடன் சொல்லியிருக்கிறார்...
ஒரு விறுவிறுப்பான கதையை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திருக்கிறார் ஷான்!
- ர.கேசவராஜ்
12-12-2017
வெட்டாட்டம் - ஷான்
யாவரும் பதிப்பகம்
விலை - ₹240
No comments:
Post a Comment