Tuesday, December 26, 2017

நூல் அறிமுகம் - சிலிர்ப்பு (தேர்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்) - தி.ஜானகிராமன்

மொத்தம் 29 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. எந்த ஒரு சிரமமும் இன்றி ஒவ்வொரு கதைகளினூடாக எளிமையாக பயணிக்க வைக்கிறார் தி.ஜா. ரொம்பவும் பாரமான சொற் பிரயோகம் இல்லாமல் இயல்பான தமிழில் கதை மாந்தர்களை கண் முன்னே நிழலாட வைத்திருக்கிறார்.

தி.ஜா வை பொறுத்தமட்டில் வாழ்க்கையை ரொம்பவும் சிக்கலுடையதாக ஆக்காமல் அதன் போக்கில் நடக்கவிடும் செறிவுடன் கூடய, புன்னகைக் கூடிய, லேசாக சிலிர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு இயல்புவாத எழுத்தின் சொந்தக்காராகவே பார்க்க முடிகிறது.

நாம் தினந்தோறும் வழியில் பார்க்கும் ஏதோ ஒரு கிழவரின் சாயலை ஒத்திருக்கிறார் 'அக்பர் சாஸ்திரி'. 'கள்ளி' சிறுகதையைப் படிக்கும் போது சென்னையில் இப்போது இருக்கின்ற வெயில் முன் எப்போதும் இருந்திருக்கிறது என்பதை உணர்வுப் பூர்வமாக உணர முடிகிறது! அதே போல வெயில் காலத்தில் வந்துவிட்டுப் போகும் பெருமழையின் பெருமிதத்தை வார்த்தைகளால் அழகாக கட்டமைத்து இருக்கிறார்! இதே போல பட்டணத்து வாழ்க்கைப்பாடுகளையும் அழகாக சொல்லியிருக்கிறார்.

தி.ஜா சங்கீதத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர் ஆதலால் நிறைய கதைகளில் சங்கீத சொற்றொடர்களை இழையோட விட்டிருக்கிறார். உதாரணத்திற்கு 'ஐயரும் ஐயாறும் (ஒரு ஆராய்ச்சி அறிக்கை)', 'பாஷாங்க ராகம்' போன்ற கதைகளைச் சொல்லலாம். சங்கீதம் சம்பந்தப்பட்ட வாத்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் ஆயர்ச்சி ஏற்ப்படாத வகையில் ஒவ்வொரு கதைகளையும் இதமாக நகர்த்தியிருக்கிறார்.

சுந்தர ராமசாமி கூறுவதைப் போல "சிருஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்" தி.ஜா.

ஒவ்வொரு கதைகளை படிக்கும் போதும் நம் மனதினை மயிலிறகால் வருடி சிலர்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்.

சிலிர்ப்பு (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)
ஆசிரியர் : தி.ஜானகிராமன்
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : ரூ.325

No comments:

Post a Comment