Friday, December 29, 2017

இந்த ஆண்டு வாசித்த நூல்கள் - 2017

கடந்த வருடத்தைவிட இந்த வருடம் என்னளவில் வாசிப்பிற்கு அதிக நேரம் ஒதுக்கியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்...அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் என் குற்றவுணர்வைத் தூண்டி வாசிக்க வைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்!

படித்த புத்தக்கங்கள் கொஞ்சமேனும் மனிதர்களைப் பற்றிய புரிதலையும், உலகத்தைப் பற்றிய புரிதலையும் அளித்திருக்கிறது என்கிற திருப்தி என்னை வாசிப்பை நோக்கியும் மனிதர்களை நோக்கியும் இழுத்துச் செல்கிறது...

இவை நான் வாசித்த புத்தகங்கள் மட்டுமே. இந்த பட்டியல் தர வரிசை கிடையாது...

இந்த வருடம் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல் கீழே :

1. விலங்குப் பண்ணை - ஜார்ஜ் ஆர்வெல்

2. கிழவனும் கடலும் - எர்னஸ்ட் ஹெமிங்வே

3. தஞ்சைப் பிரகாஷ் சிறுகதைகள் - அகநாழிகை பொன்.வாசுதேவன்

4. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்

5. மாதொருபாகன் - பெருமாள் முருகன்

6. ஆலவாயன் - பெருமாள் முருகன்

7. ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

8. சிலிர்ப்பு - தி.ஜானகிராமன்

9. இரவிற்கு முன்பு வருவது மாலை - ஆதவன்

10. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்யாயன்

11. சாதியை ஒழிக்க வழி - டாக்டர் பீ.ஆர்.அம்பேத்கர்

12. கிருஷணப் பருந்து - ஆ.மாதவன்

13. ஒரு சிறு இசை - வண்ணதாசன்

14. மரப்பசு - தி.ஜானகிராமன்

15. நாளை மற்றொரு நாளே - ஜி.நாகராஜன்

16. பொன்னியின் செல்வன் (பாகம் 1&2)

17. கருக்கு - பாமா

18. மிளர்கல் - இரா.முருகவேள்

19. சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்

20. பூக்குழி - பெருமாள் முருகன்

21. பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார்

22. சாயாவனம் - சா.கந்தசாமி

23. வலை (குறுநாவல்) - ஜான் பிரபு

24. அஜ்வா - சரவணன் சந்திரன்

25. வெட்டாட்டம் - ஷான்

26. முகிலினி - இரா.முருகவேள்

புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்த நண்பர்களுக்கும், தங்கள் வாழ்வின் அனுபவங்களையும் தங்களின் எழுத்தின் வழியாக வந்து என்னிடம் உரையாடும் எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 🙏🙏🙏

புத்தாண்டையும், ஜனவரி புத்தக திருவிழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்!  😍😍😀😀

- கேசவராஜ் ரங்கநாதன்
29/12/2017

Tuesday, December 26, 2017

நூல் அறிமுகம் - சிலிர்ப்பு (தேர்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்) - தி.ஜானகிராமன்

மொத்தம் 29 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. எந்த ஒரு சிரமமும் இன்றி ஒவ்வொரு கதைகளினூடாக எளிமையாக பயணிக்க வைக்கிறார் தி.ஜா. ரொம்பவும் பாரமான சொற் பிரயோகம் இல்லாமல் இயல்பான தமிழில் கதை மாந்தர்களை கண் முன்னே நிழலாட வைத்திருக்கிறார்.

தி.ஜா வை பொறுத்தமட்டில் வாழ்க்கையை ரொம்பவும் சிக்கலுடையதாக ஆக்காமல் அதன் போக்கில் நடக்கவிடும் செறிவுடன் கூடய, புன்னகைக் கூடிய, லேசாக சிலிர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு இயல்புவாத எழுத்தின் சொந்தக்காராகவே பார்க்க முடிகிறது.

நாம் தினந்தோறும் வழியில் பார்க்கும் ஏதோ ஒரு கிழவரின் சாயலை ஒத்திருக்கிறார் 'அக்பர் சாஸ்திரி'. 'கள்ளி' சிறுகதையைப் படிக்கும் போது சென்னையில் இப்போது இருக்கின்ற வெயில் முன் எப்போதும் இருந்திருக்கிறது என்பதை உணர்வுப் பூர்வமாக உணர முடிகிறது! அதே போல வெயில் காலத்தில் வந்துவிட்டுப் போகும் பெருமழையின் பெருமிதத்தை வார்த்தைகளால் அழகாக கட்டமைத்து இருக்கிறார்! இதே போல பட்டணத்து வாழ்க்கைப்பாடுகளையும் அழகாக சொல்லியிருக்கிறார்.

தி.ஜா சங்கீதத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர் ஆதலால் நிறைய கதைகளில் சங்கீத சொற்றொடர்களை இழையோட விட்டிருக்கிறார். உதாரணத்திற்கு 'ஐயரும் ஐயாறும் (ஒரு ஆராய்ச்சி அறிக்கை)', 'பாஷாங்க ராகம்' போன்ற கதைகளைச் சொல்லலாம். சங்கீதம் சம்பந்தப்பட்ட வாத்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் ஆயர்ச்சி ஏற்ப்படாத வகையில் ஒவ்வொரு கதைகளையும் இதமாக நகர்த்தியிருக்கிறார்.

சுந்தர ராமசாமி கூறுவதைப் போல "சிருஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்" தி.ஜா.

ஒவ்வொரு கதைகளை படிக்கும் போதும் நம் மனதினை மயிலிறகால் வருடி சிலர்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்.

சிலிர்ப்பு (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)
ஆசிரியர் : தி.ஜானகிராமன்
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : ரூ.325

Tuesday, December 12, 2017

நூல் அறிமுகம் - வெட்டாட்டம் - ஷான்

நாவல் ஆரம்பத்திலேயே இரகசிய தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு பேச்சு வார்த்தையாகவே ஆரம்பிக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து அதிவேகத்திற்கு அழைத்துச் செல்லும் எழுத்துநடை...

முதலமைச்சராக இருக்கும் வினோதன் வழக்கின் காரணமாக அவரது மகன் வருணை ஒருநாள் இரவில் முதலமைச்சர் ஆக்கிவிடுகிறார். ஆனால், வருணுக்கு சுத்தமாக அரசியல் அனுபவம் கிடையாது. கூடவே தன் அம்மாவின் இறப்பிற்கு காரணமாக இருந்தார் வினோதன் என்பதால் அவர் மேல் வருணிற்கு நெடுநாள் கோபம். ஒரு கட்டாயத்தின் பெயரில் தான் முதலமைச்சராக பதவியேற்கிறான் வருண். கொஞ்ச நாட்கள் தான் அதன் பிறகு வழக்கிலிருந்து அப்பா மீண்டு வந்து தன்னை இந்த பதவிச் சுமையிலிருந்து நீக்கி விடுவார் என்கிற எண்ணத்தோடு பதவியில் அமர்கிறான்...

ஆனால், அதன் பிறகு நிலைமை தலைகீழாகிறது. வழக்கின் தீர்ப்பு எதிராக வர வினோதன் சிறையில் இருக்க வேண்டியதாகிறது! உடன் இருந்து நெறிபடுத்திக் கொண்டிருந்த கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரும் அமைச்சருமான அபுதாஹிர் வினோதனின் விடுதலைக்காக டெல்லி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் வருணின் கல்லூரிப் பேராசிரியர் மகேந்திரனிடம் உதவி கேட்கிறான். அவரும் வருணிற்கு வழிகாட்டுவதற்கு ஒப்புக் கொள்கிறார். ஆனால், வினோதனுக்கும், மகேந்திரனுக்கும் தீராத பகை இருந்து வந்தது. ஒருகாலத்தில் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர் தான் மகேந்திரன்.

நாட்கள் செல்ல செல்ல வேறு ஒருசில அசம்பாவிதங்கள் நடந்தேருகின்றன. அதனால் வருணிற்கு பதவியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகிறது. ஒரு கட்டத்தில் பதவியிருந்தால் தான் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்கிற மாதிரியான பவர் பாலிட்டிக்ஸின் சுழலில் வருண் மாட்டிக் கொள்கிறான்!

சமகால நிகழ்வுகளை வைத்து அடுத்தடுத்த அடுத்தடுத்த அத்யாயங்களை சோர்வின்றி கட்டமைத்திருக்கிறார் ஆசிரியர்! இன்னும் சொல்லப் போனால் சமீபத்திய மற்றும் 80 களின் அரசியல் சூழலையும் நாவலில் கையண்டிருக்கிறார்... கதையின் ப்ளஸ் / மைனஸ் என்று எடுத்துக் கொண்டால் இரண்டுமே இந்த சமகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் தான் என்று கூறலாம்! ஒரு கட்டத்தில் இதற்க்குப் பிறகு இது தான் நடக்கப் போகிறது என்பதை எளிதாக யூகித்து விட முடிகிறது...

அரசியல்வாதிகள் அவர்களின் சொத்துக்களை எவ்வாறு எல்லாம் பதுக்குகிறார்கள், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், குட்டிக் குட்டித் தீவுகளுக்கும் எப்படி பணம் முதலீடாக கொண்டு செல்லப்படுகிறது என்பதை விளக்கமாக இடைஇடையே சொல்லியிருப்பது கதையின் தொய்விலிருந்து மீட்டு வேகமெடுக்க வைக்கிறது! டெக்னாலெஜியை எப்படி எல்லாம் பயன்படுத்தி தில்லு முல்லுகள் நிகழ்த்தப்படுகிறது என்பதையும் கதையோட்டத்துடன் சொல்லியிருக்கிறார்...

ஒரு விறுவிறுப்பான கதையை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திருக்கிறார் ஷான்!

- ர.கேசவராஜ்

12-12-2017

வெட்டாட்டம் - ஷான்
யாவரும் பதிப்பகம்
விலை - ₹240

Thursday, November 30, 2017

நூல் அறிமுகம் - வலை (குறுநாவல்) - ஜான் பிரபு

கடல் எப்பொழுதும் ஒரு பெரும் ஈர்ப்பினை மனிதனை நோக்கி செலுத்திக் கொண்டேயிருக்கிறது! சமவெளிகளில் வாழும் மக்களுக்கு நெய்தல் நிலம் ஒரு அமைதியைத் தரும் பிரதேசமாகவே இருந்து வந்திருக்கிறது...

ஆனால், அந்த நெய்தல் வெளிக்கு இன்னொரு ஒரு முகமும் இருக்கிறது...நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் கடல்சார் பொருட்கள் நம்மை வந்தடைய உயிரைப் பிணையம் வைத்து கொண்டு வரும் கடலோடி நண்பர்களின் வாழ் நிலையை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வடித்திருக்கிறார் ஆசிரியர்...

கடலோடி மக்களின் வாழ்க்கைத் தரம், அவர்கள் மீன்பிடி தொழிலின் போது இலங்கைக் கடற்படையினால் படும் துயரங்கள், அதனால் குடும்பங்கள் சந்தித்த இழப்புகள், வாழ் சூழலினால் நிறைவேறாமல் போன ஆசைகள், காதல்கள் என ஒரு கடலோடி சகோதரனின் வீட்டிலேயே ஒருவனாக இருந்து பார்ப்பதைப் போன்ற ஒரு உணர்வை புத்தகம் ஏற்படுத்தியிருக்கிறது!

அளவான கதாபாத்திரங்களைக் கொண்டு கதைச் சூழலை வெகு இயல்பாய் கட்டமைத்திருக்கிறார் தோழர் ஜான் பிரபு! நாம் தினமும் செய்திகளில் காணும் இலங்கைக் கடற்படையினால் நடத்தப்படும் கைதுகளையும், கொலைகளையும் ஏதோ பத்தோடு பதினொன்றாக கடந்து விடுகிறோம்...ஆனால், நம்முடைய சாப்பாட்டு மேஜைக்கு வரும் ஒவ்வொரு கடல்சார் உணவுப் பொருட்களுக்குப் பின்னும் ஏதோ ஒரு மீனவ நண்பனின் மரண பயம் கலந்த உழைப்பு இருக்கிறது என்பதை இந்த நாவல் நினைவுபடுத்திச் செல்லும்!

நூலின் பெயர் : வலை (குறுநாவல்)
ஆசிரியர் : ஜான் பிரபு
பதிப்பகம் : ஜீவா படைப்பகம்

Wednesday, November 8, 2017

நூல் அறிமுகம் - சோளகர் தொட்டி - சா.பாலமுருகன்

இந்த நாவலைப் பற்றி நண்பர்கள் அதிகம் பேசியிருந்தாலும் இப்போது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் வாழும் சோளகர் என்னும் பழங்குடிகள் வாழும் "சோளகர் தொட்டி" (தொட்டி என்பது கிராமம் என்று பொருள்) என்னும் இடம் தான் கதையின் நிகழ்விடம்...

முதல் பாதி சோளகர்களின் வாழ்வியல் பற்றிய பதிவாக விரிகிறது...தொட்டியின் தலைவனாக கொத்தல்லி கிழவன் இருக்கிறான்...சிவண்ணாவும், அவன் அம்மா ஜோகம்மாளும், ஜடையனும் என தொட்டியில் நிறைய கதாபாத்திரங்கள் வருகிறார்கள்...அவர்களின் முக்கியமான உணவு ராகி அங்கேயிருக்கும் நிலத்தில் பயிரிட்டு பகிர்ந்துண்டு வாழ்ந்து வருகிறார்கள்...என சம்பவங்களை கொர்த்து முதலாம் அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர்.

இரண்டாம் அத்தியாயத்தில் அந்த மக்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது...சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு உதவிகள் இந்த வன கிராமங்களில் இருந்த செல்வாதாக கூறி தமிழக/கர்நாடக காவல் துறை கிராமங்களில்  நுழைகிறது! அங்கே இருக்கும் மக்கள் அனைவரையும் கண்மூடித்தனமாக விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்கிறது...அடி, உதையைத் தாண்டி சொல்லவியலாத சித்திரவதைகளை எல்லாம் அந்த மக்கள் அனுபவிக்கிறார்கள்...சிவண்ணாவையும் தம்மையாவையும் காவல் துறை கைது செய்து அழைத்துப் போய் விசாரணை என்கிற பெயரில் கடும் சித்திரவதைக்கு  உள்ளாக்குகிறது....காலப்போக்கில் போலீசின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக சிவண்ணா வீரப்பனிடம் தஞ்சமடைகிறான்.

அதன் பிறகு சிவண்ணாவின் தம்பி ஜடையன், மனைவி மாதி மற்றும் அவள் மகள் என அனைவரையும் காவல் துறை பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகிறது! மாதேஸ்வரன் மலையில் நடக்கும் விசாரணை முகாமிற்கு மாதியும்,  அவள் மகளும் மாதியின் அண்ணன் வீட்டில் தஞ்சமடைந்திருக்கும் போது அடித்து தூக்கி வரப்படுகிறார்கள்! அங்கே ஏற்கனவே இவர்களைப் போல நிறைய வன கிராம மக்களைக் கொண்டு வந்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள்...

அங்கே இருப்பவர்கள் படும் மனிதாபிமானம் அற்ற துன்பங்களை படிக்கும் போது காவல்துறை மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும், நம்பிக்கையும் இழந்து விடுவோம்...சிலநாட்களில் மாதிக்கு இரத்த போக்கும், சுயநினைவு அற்றுப் போகவே அவர்கள் இருவரையும்  விடுவித்து விடுவார்கள்...மாதி சிறிது காலம் அவளின் அண்ணன் வீட்டில் தங்கியருந்து அவளின் மகளுக்கும், அண்ணன் மகன் ஜூருண்டைக்கும் கல்யாணத்தை முடித்து வைத்த சில நாட்களில் தொட்டிக்கு திரும்பி விடுவாள்...

தொட்டியில் அவள் மாமியார் ஜோகம்மாள் நோய்வாய் பட்டு பக்க வாதம் வந்து பாதிக்கப்பட்டு இருப்பாள்...மாதி அவளுக்கான பணிவிடைகளை செய்து சீர்காட்டிலும் ராகி பயிரிடுவாள்...இதற்கிடையில் சிவண்ணா நோய்வாய்ப்பட்ட அவன் அம்மாவை பார்த்து விட்டு போக வருவான்...அப்போது மாதியிடம் தான் கோர்ட்டில் சரண்டையப் போவதாக கூறிச் செல்வான்....போலீசார் கொத்தல்லியிடம் சிவண்ணா தொட்டிக்கு வந்தால் தகவல் சொல்ல வேண்டும் சொல்லியிருப்பார்கள்....சிவண்ணா சரணைடந்த விசயத்தை செய்தி தாள் மூலம் கேள்விப்பட்டு தலமலை முகாமின் இன்ஸ்பெக்டர் தொட்டிக்கு வந்து கொத்தல்லிக் கிழவனை திட்டிவிட்டு போவான்...அப்போது மாதியும், ஜோகம்மாளும் அருகிலிருப்பார்கள்...இதைக் கேட்டதும் சிவண்ணா உயிரோடு தான் இருக்கிறான் என நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள்!

அதன் பிறகு இரண்டு நாட்கள் இரவுகளில் தொடர்ந்து மழை பெய்து ராகி பயிரை உயிர்த்தெழ செய்திருக்கும்...சில நாட்களில் ஜோகம்மாளும் இறந்து விடுவாள்... மாதி சிவண்ணாவின் வருகைக்காக காத்திருப்பதாக கதை முடிகிறது...

சோளகர் தொட்டி
ச.பாலமுருகன்
விலை : ₹150
__________________________________________

சோளகர் தொட்டியின் பற்றி இணையத்தளத்தில் தேடிய போது சமீபத்தில் நடந்த இந்த ஒன்று கூடல் பற்றிய செய்தி ஆச்சரியத்தையும், நிம்மதியையும் அளித்தது...இணைப்பு கீழே :

சோளகர் தொட்டிக்கு நன்றி கூறிய சோளகர்கள்...

- ர.கேசவராஜ்
09-11-2017

Wednesday, November 1, 2017

நூல் அறிமுகம் - விலங்குப் பண்ணை - ஜார்ஜ் ஆர்வெல்

புத்கத்தை எடுத்து படிக்க ஆரம்பித்ததுமே மனசுக்குள் ஒரு கேள்வி 1945 ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில் எப்படி இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஓத்துப் போகின்றது? என்பதாகத் தான் இருக்கிறது.

புத்தகம் கம்யூனிச அதிகார வர்க்கத்தினுடைய அநியாயங்களையும், சுரண்டல்களையும் கருப் பொருளாகவும், விலங்குகளைக் குறியீடாக வைத்து எழுதப்பட்டிருந்தாலும், தமிழகத்தின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை இந்தப் புத்தகம் தீர்க்கமான பார்வையினை வெளியிட்டிருப்பதை நீங்கள் காணலாம். இதே பார்வை அனேகமான அரசியல் காலகட்டங்களோடு பொறுந்தியும் இருந்திருக்கிறது.

படிப்பதற்கு கடினமில்லாத சொற்களின் கலவையோடு மொழிபெயர்த்திருக்கிறார் பி.வி.ராமஸ்வாமி. இன்றைய சூழலில் தமிழ் மக்கள் நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகம் விலங்குப் பண்ணை!

விலங்குப் பண்ணை (141 பக்கங்கள்)

- ஜார்ஜ் ஆர்வெல் (தமிழில் : பி.வி.ராமஸ்வாமி)

கிழக்கு பதிப்பகம் - விலை : ரூ.85

Sunday, September 24, 2017

ஆணும், பெண்ணும் சில உறவுச் சிக்கல்களும்

நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழி ஒரு வர் அழைத்திருந்தார். அயர்ச்சியான குரலாய் இருக்க "என்ன மச்சி ஆச்சு?" எனக் கேட்டேன். அவர் காதலித்துக்கு கொண்டிருந்தார் அவருடைய இணை கூறிய விசயத்தை எல்லாம் செய்து கொண்டேயிருந்திருக்கிறார்...

உதாரணமாக ஆண் நண்பர்களுடன் பேசாதே, வெளியே என்னுடைய அனுமதியுடன் தான் போக வேண்டும்...நான் கூறுகின்ற வேலைக்குத் தான் நீ போக வேண்டும்... உனக்கு இது தெரியாது அது தெரியாது நான் சொல்லுவதைத் தான் செய்ய வேண்டும். இறுதியாக இனிமேல் நீ எதையும் எழுதக் கூடாது படிக்கக் கூடாது என முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார் தோழியின் காதலர்...

இதில் நீ இனிமே படிக்கக் கூடாது, எழுதக் கூடாது என கூறுவதெல்லாம் தீவர தாழ்வு மனப்பான்மையின் உச்சம்! "நான் படிக்குறதில்ல, அதனால நீயும் படிக்கக் கூடாது. ஏன்னா என்னைய விட ஒரு விசயத்த நீ அதிகமா தெரிஞ்சுக்கிட்டா என்னோட பேச்ச நீ கேக்க மாட்டல்ல" என்னும் மனப்பான்மையின் வெளிப்பாடு! இந்த மாதிரியான மனப்பான்மை ஒருசில எழுத்தாளர்களுக்கே இருக்கிறது.

இத்தனையும் சொன்னது ஒரு படிக்காத கிரமாத்து ஆளாக இருந்தாலும் பரவாயில்லை. அவரும் படித்த ஆசாமி தான், ஒரு நிறுவனத்தின் மனிதவளத் துறையில் பணி புரியும் நபர்...ஆக நாம் படித்த படிப்பு இப்படி எல்லாம் தான் நம்மை பிற்போக்காக சிந்திக்க வைத்துள்ளதா அல்லது நம்மிடம் உள்ள பிற்போக்கான எண்ணங்களையும், செயல்களையும் போற்றிப் பாதுகாப்பதற்கான சூழலைத் தான் ஏற்படுத்திக் கொடுக்கிறதா என்னும் பெரிய கேள்விக் குறி எழாமல் இல்லை...

ஆண் பெண் உறவுவில் 100/75 இப்படியான கட்டுப்பாட்டுடன் தான் தினமும் நகர்த்தப்படுகிறுது! அதாவுது தன்னை காதலிக்கும் / திருமணம் முடித்த பெண்ணிற்கு ஒரு அழகான பொற் கூண்டினைத் தான் இன்றைய ஆண்கள் பெரும்பாலும் கொடுக்க நினைக்கிறார்கள்! இந்த மாதிரியான நிலையை மாற்றுவதற்கு பெண்ணும் நம்மைப் போன்ற ஒரு சமமான உயிர் தான் இவளுக்கும் நம்மைப் போலவே எல்லா உணர்வுகளும் இருக்கின்றன என்பதை ஆண்கள் தெளிவுற வேண்டும்...

நீங்கள் இந்த மாதிரியான அடக்குமுறைகளை ஒரு பெண்ணின் மீது கையாளும் போதெல்லாம் ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள்.
பெண்ணோடு திறந்த மனதுடன் அமர்ந்து அவளுடைய கனவுகளையும், இலட்சியங்களையும் கொஞ்சமேனும் கேளுங்கள்...

அவர்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள உதவ முடியாவிட்டாலும் தடையாக இருக்காதீர்கள்! ஏனென்றால் பெண் என்பவள் ஒரு ஜடப்பொருள் அல்ல நீங்கள் உங்களுடைய உடைமையாக நினைத்து அடக்கி ஆட்சி செயவதற்கு! அவளும் ரத்தமும், சதையும், நரம்பும் நிறைந்த நம்மைப் போலவே 6 அறிவும் நிறைந்த ஒரு உணர்வுள்ள ஜீவன் தான் என்பதை மனதில் நிறுத்தினாலே போதும் உறவுப் பிரச்சனைகளில் இருந்து வெளியே வரலாம்...

இதே மாதிரியான கண்ணோட்டத்தை ஒரு பெண்ணும் கொண்டிருக்க வேண்டும்...அப்போது தான் அந்த இணை ஆண்-பெண் சமத்துவ சமூதாயத்தின் அங்கத்தினர் என்கின்ற நிலையை எய்த முடியும்!

- கேசவராஜ் ரங்கநாதன்
24-09-2017

Wednesday, July 19, 2017

நூல் அறிமுகம் - மிளிர் கல் - இரா.முருகவேள்

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படியாக கொண்டு ஆவணப்படம் எடுப்பதற்காக டெல்லியில் இருந்து கிளம்பி தமிழகத்திற்கு வரும் முல்லையும், சென்னையில் அவளுடன் இணையும் அவளுடைய கல்லூரியில் படித்த கம்யூனிச தோழனான நவீனும், இடையில் சந்திக்கும் பேராசிரியர் ஸ்ரீகுமாரும் தான் நாவலின் முக்கியமான கதை மாந்தர்கள்.

பயணத்தை சென்னையில் இருந்து ஆரம்பித்து பூம்புகாரில் வாழ்ந்த கண்ணகியின் வாழ்க்கையை பற்றிய செய்தியை சேகரிப்பதற்கான பயணத்தை மேற்கொள்கிறார்கள் முல்லையும், நவீனும். ஏதேதோ கற்பனைகளுடன் புகாரை அனுகிய முல்லைக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது!

கண்ணகி தங்கியிருந்த எழுநிலை மாடத்தையும், ஏனைய முக்கியமான இடங்களையும் நினைவுகளில் அசை போட்டுக் கொண்டு வந்தவளுக்கு இப்போது இருக்கும் புகாரின் கலர் கலரான கட்டிடங்களும் பழமை மறந்த இடங்களும் வெறுப்பை உண்டாக்கி விடுகின்றது. ஒரு கட்டத்தில் முல்லை இது வேண்டாம் நாம் திரும்பி விடலாம் என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறாள்.

அந்த ஒரு சூழலில் தான் பேராசிரியர் ஸ்ரீகுமாரை அவர்கள் சந்திக்கிறார்கள். அவர் கூறுகின்ற வராலற்றுத் தவகல்களால் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. இதற்கிடையில் ரத்தினக் கற்களை பற்றி நாம் அறியாத பல விசயங்களை ஆசிரியர் விளக்குகிறார். அந்த ஆராய்ச்சிக்காக தான் ஸ்ரீகுமார் ஒரு பெரு நிறுவனத்தின் சார்பாக ஸ்பான்சர் செய்யப்பட்டு வந்திப்பது அவரின் கடத்தலிற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் தெரிய வருகிறது!

நாம் இன்று ப்ரிஷியஸ் ஸ்டோன்ஸ் என்று நகைகளில் பதித்து அணிந்து கொள்ளும் வைரகளின் பின்னும், வைடூரியங்களின் பின்னும், இன்னபிற கற்களின் பின்னும் எப்பேர்ப்பட்ட பெருமுதலைகளும், கார்ப்பரேட் வலைப்பின்னலும் சூழ்ந்து கொண்டிருக்கிறது என நிறைய செயதிகளைக் கொட்டியிருக்கிறார். அதே போல சமகால நிகழ்வுகளான மீத்தேன் பற்றியும், விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றியும், நியூட்ரினோ பற்றியும் ஆங்காங்கே அடிக் கோடிட்டு காட்டியிருக்கிறார்!

கடத்தப்பட்ட இடத்திலிருந்து ஸ்ரீகுமார் விடுதலையாகி வந்த பிறகு கண்ணகி சென்ற பாதையை நோக்கிப் பயணம் ஆரம்பிக்கிறது...இடைஇடையே வரும் சிலப்பதிகார விளக்கங்களும் வழிநெடுக அவர்கள் ஆங்காங்கே கண்டடையும் சிலம்பு சார்ந்த இடங்களும் ஆசிரியர் அதை விவரித்த விதமும் நம்மையும் அந்த பயணத்தின் ஒரு பகுதியாகவே உடன் பயணிக்க வைத்திருக்க்கிறது!

பூம்புகாரில் ஆரம்பித்து, கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகளும் பயணித்த அந்த 1800 வருடத்திற்கு முந்திய பெருவழியின் சித்திரம் சற்றே ஒருகனம் கண்முன் வந்து செல்வது நிச்சயம்! கதை நெடுக ரத்தினக் கற்களைப் பற்றிய நிறைய தரவுகள், வலாற்றினைப் பற்றியும், பழந்தமிழரின் வாழ்வியல் குறித்தும், அந்தந்த இடங்களில் இருந்த பழங்குடியினங்களின் வாழ்வியல் குறித்தும் நிறைய விசயங்களை ஸ்ரீகுமார் மூலமாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது! அதே நேரம் சில இடங்களில் ஓவர் டோஸாகவும் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது...அதனால் சில இடங்களில் அயர்ச்சியும் பீடிக்கிறது...

கதை பூம்புகாரில் ஆரம்பித்து மதுரை வழியாக கம்பம் பள்ளத்தாக்கின் வழியாக குமுளி மேல் ஏறி கண்ணகி கோயிலில் இருந்து கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் கொடுங்கல்லூரில் ஒரு சிலிர்ப்புடன் முடிவடைகிறது...

இந்த நாவலை படித்ததும் இதை எழுதுவதற்கு ஆசிரியர் எத்தனை ஆய்வுகள், எத்தனை புத்தகங்களை புரட்டி குறிப்புகள் எடுத்திருப்பார்! என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது!

மளிர் கல்
ஆசிரியர் : இரா.முருகவேள்,
பதிப்பகம் : பொன்னுலகம் பதிப்பகம்,
விலை : ₹200