ரொம்ப நாளாக படிக்காமல் வாங்கி வைத்திருந்த புத்தகம்...படித்ததும் அடடா இத்தனை நாளா இத படிக்காம அப்படியே வச்சிட்டோமே னு நினைக்க வைத்த புத்தகம் இது!
ரொம்ப நாள் பழகிய அண்ணன் ஒருவருடன் உக்கார்ந்து மதுரைத் தமிழில் ஒரு குடும்பத்தின் கதையை தொய்வில்லாமல் கேட்ட ஒரு உணர்வு...
1940 களில் இருந்த ஒரு தமிழ் உருது இஸ்லாமிய குடுபத்தின் நிகழவுகள் தான் கதைகளம். புத்தகத்தின் தலைப்பின் படி அரபு நாட்டிலிருந்து வந்து இங்கே தங்கிய இஸ்மாயில் சாயபுவின் 8 வாரிசுகளுக்கு (7 மகன்கள், 1 மகள்) சொத்துகளை இரண்டு பாதியாக பாகம் பிரித்து, முதல் பாதியாக இருக்கும் சொத்தை 7 மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமிருக்கும் ஒரு பாதியை மகளுக்கு மட்டும் கொடுத்துவிடுகிறார் இஸ்மாயில் சாயபு! அதனால் அவர்களின் வழித் தோன்றால்கள் ஏழரைப்பங்காளி வகையறா என அறியப்படுகிறார்கள்...
இஸ்மாயில் சாயபுவின் வகையறாவில் வந்த ரஜாக் சாயபு - ஜொகரா இணை தவமாய் தவமிருந்து பெற்ற மகன் சையத் தாவவூத்... எக்கச்சக்கமான சொத்துகள் கொண்டவர் ரஜாக் சாயபு அவற்றின் ஒற்றை வாரிசு தாவூத் தான்!...ரஜாக் சாயபுவின் மௌத்திற்கு (இறப்பிற்கு) பிறகு தாவூத்தின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களையும்...தாவூத்தின் ஒன்றுவிட்ட அண்ணனான குத்தூஸின் அறிமுகம், பிறகு மக்தூம் சாயபுவின் மகள் ஆபில்பியை தாவூத்திற்கு நிக்காஹ் செய்து வைக்கும் வைபவம் எல்லாம் கதை சொல்லும் பாங்கில் நானும் அந்த நிக்காஹ்வில் கலந்து கொண்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்திச் சென்றது!
ஒருவர் மீது வைக்கும் அதீத நம்பிக்கை, ஆனால் நம்பியவர்க்கு எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் குத்தூஸால் செய்யப்படும் துரோகம், ஆபிலின் வைராக்கியம், தாவூத்தின் கையாலாகத் தனம் என நாவல் பல்வேறு உணர்வுத் தளங்களை கடந்து செல்கிறது...
ஒருகட்டத்தில் தாவூத்தின் குட்டிப் பையன் உசேன் சாப்பாட்டிற்காகவே பள்ளிக்கூடம் செல்லும் போது "அடப்பாவி உன்னோட அலட்சியத்தால பாவம் சின்னபுள்ள இப்படி கஷ்டப்படுதேய்யா" என்று மனம் தாவூத்தை பார்த்து கேள்வி எழுப்புவதை தவிர்க்க முடியவில்லை...
தமிழகத்தில் சத்துணவுத் திட்டதின் ஆரம்பகால நாட்கள் இப்படித் தான் இருந்தனவா என்கின்ற ஒரு சித்திரத்தரை ஏற்படுத்தியிருக்கிறார்... உசேன் அவனுடைய துருதுருப்பான நடவடிக்கைகளால் நம்மை ஈர்த்துவிடுகிறான்!
கொஞ்ச நாட்கள் இஸ்லாமியர் வீட்டிலிருந்து கதைகேட்டது போல ஒரு நிறைவு! வசதியான வாழ்க்கை, பூரிப்பு, சந்தோசம் வெறுமை, சலிப்பு, ஏழ்மை பசி, படிப்பிற்கான தாகம், விடாமுயற்சி என எல்லா விதமான உணர்களின் உள்ளாக எளிய நடையில் நம்மை பயணிக்க வைக்கிறது இந்த புத்தகம்...
ஒருசில இடங்களில் இந்தி/உருது சொற்களைப் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது...அடிக்குறிப்புகளுக்கு பதிலாக புத்தகத்தின் கடைசி பக்கங்களில் அந்த அடிக்குறிப்புகளை மாற்றியமைத்தால் வாசிக்கும் போது பார்த்து புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்...
இந்த நூலினை பரிந்துரை செய்த சேலம் பாலம் புத்தக விற்பனை நிலைய்தைச் சேர்ந்த நண்பருக்கு அன்பும் நன்றியும்! <3 :)
கேசவராஜ் ரங்கநாதன்
07/01/2018
ஏழரைப்பங்காளி வகையறா
எஸ்.அர்ஷியா
எதிர் வெளியீடு
விலை : ₹ 300
No comments:
Post a Comment