Saturday, December 26, 2020
நூல் அறிமுகம் - மணல் பூத்த காடு - முஹம்மது யூசுஃப்
Wednesday, December 2, 2020
நூல் அறிமுகம் - நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்
#வாசிப்பு2020
நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்
இலங்கையில் 80 களில் நடந்த போரில் பங்கேற்ப்பதற்காக பயிற்சி பெற்ற இளம் பதின் வயது போராளிகளின் வாழ்வியலை விளக்குகிறது நஞ்சுண்டகாடு...அவர்களின் நஞ்சுண்டகாடு பயிற்சி முகாமில் நடக்கும் விசயங்களையும், இனியவன் மற்றும் சுகுமாறன் என்கிற இரண்டு போராளிகளுக்கு இடையில் ஏற்ப்படும் நட்பை முன்வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் குணா கவியழகன்...
பயிற்சி முகாமில் நடக்கும் சிறு சிறு சச்சரவுகள் அதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் பனிஷ்மெண்ட்டுகள் என கதை போனாலும்...அங்கிருக்கும் போராளிகளின் இடையே இருந்த ஒற்றுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சிறு சிறு பகடியான தருணங்களும் இல்லாமல் இல்லை...
அவர்கள் அனைவரும் பயிற்சி முடிந்து போர்களத்திற்கு போகும் போது வாசிக்கும் நமக்கும் அந்த பிரிவுணர்வு ஏற்ப்படுகிறது...அதன் பிறகாக நடக்கும் இனியவன், சுகுமாறன் சந்திப்புகளும்...சுகுமாறனின் குடும்ப நிலைமை போரின் குரூரத்தால் தாக்கப்பட்டு மிகவும் பரிதாபமான நிலையை அடைந்து துன்புருவதை சுகுமாறனின் அக்கா சொல்லும் போது மனித வாழ்வின் துன்பியல் சக்கரம் இப்படி எல்லாம் ஒரு குடும்பத்தை அடிக்குமா என்கிற வேதனை எழுந்து ஒரு துளி கண்ணீர் துளிர்க்கிறது...அந்த இடத்தில் குணா அவரின் உணர்வுகளை வாசிப்பவரிடம் கடத்தி விடுகிறார்...
தமிழீழ போரில் பங்கேற்ற போராளிகளின் வாழ்வியலை அறிய விரும்புகிறவர்கள் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்...
பதிப்பகம் - கிண்டில் பதிப்பு
விலை - 99
Sunday, November 29, 2020
நூல் அறிமுகம் - விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
நூல் அறிமுகம் - தோழர் சோழன் - எஸ்.எஸ். சிவசங்கர்
Saturday, October 3, 2020
நூல் அறிமுகம் - புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
#வாசிப்பு2020
13/2020
புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகில் உள்ள பனைவிளை கிராமத்தில் இருக்கின்ற புத்தம் வீடு தான் கதைக்களம்...அந்த ஊருக்கு பிரதான தொழில் பனை, பனையை வைத்து கள், பதனீர், கருப்பட்டி என விதவிதமான பண்டங்கள் செய்து விற்பது அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வியல்...
கிராமத்தில் இரண்டு பிரிவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் ஒரு சாரார் பனை முதலாளிகள், இன்னொரு சாரார் பனையேறி தொழில் பார்க்கும் கூலியாட்கள்...ஊரின் மிகவும் பெருமை வாய்ந்த வீடான புத்தம் வீட்டின் தலைவராக கண்ணப்பச்சி இருக்கிறார் அவருக்கு இரண்டு மகன்கள் அவர்களில் மூத்த மகனின் மகள் லிஸி தான் கதையின் நாயகி...இளைய மகனின் மகள் லில்லி குறும்பும், அழகும் நிறைந்த பெண்...
கதை இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நடந்தது...அதனால் அந்த காலத்ததின் நிலையை இயல்பாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்! புத்தம் வீடும் அதன் மனிதர்களும் எவ்வாறு சரிவை சந்திக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை இறங்குமுகமாக எப்படி போகிறது என்பதையும் காலத்தின் கட்டாயம் இந்த இரண்டு பெண்களின் வாழ்வை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை ஒரு பெண்ணின் பார்வையில் ஹெப்சிபா அழகாக கதை சொல்லியிருக்கிறார்...
குமரி வட்டார வழக்கும், கடினமில்லாத மொழியும் இயல்பாக கதையில் ஒன்றி வாசிக்க முடிகிறது!
பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 160
விலை - 190
Sunday, June 14, 2020
நூல் அறிமுகம் - ஹோமோடியஸ் வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)
#வாசிப்பு2020
11/2020
ஹோமோடியஸ் - வருங்காத்தின் சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி - தமிழில் நாகலட்சுமி சண்முகம்
ஹோமோசேப்பியன்கள் ஹோமோடியஸாக (லத்தீன் மொழியில் டியஸ் என்றால் கடவுள்) மாறக் கூடிய காலகட்டமான 21ம் நூற்றாண்டை பற்றிய தன்னுடைய பரந்துபட்ட ஆராச்சியின் கூறுகளை இந்நூல் மூலமாக முடிந்தளவு எளிமையாக்கி கொடுத்திருக்கிறார் இஸ்ரேலிய வரலாற்று அறிஞர் யுவால் நோவா ஹராரி...இவர் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்...இவரின் முந்தைய நூலான சேப்பியன்ஸ் மனித குலத்தின் சுருக்கமான வரலாறு உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற படைப்பாகும்!
மனிதனின் மூதாதையர்களான நியண்டர்தால், சிம்பன்சிக்களில் இருந்து மனிதனின் பரிணாமம் இப்போது இருக்கும் ஹோமோசேப்பியன்ஸ் என்கிற நிலையை அடைந்திருக்கிறது...இதற்கு அடுத்த வளர்ச்சியாக ஹோமோடியஸ் என கூறக்கூடிய அதிமனிதர்களாக (Super humans) மாறுவதற்கான சாத்தியக் கூறுகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறார்.
ஹராரி வரலாற்று ஆய்வாளராக இருந்தாலும் அவர் இந்த புத்தகத்தில் அறிவியல், தொழிநுட்பம், மருத்துவம், பண்பாடு, கலை என எல்லா விதமான பரிணாமக் கூறுகளைப் பற்றியும் சுறுக்கமாக அதே சமயத்தில் சுலபமான உதாரணங்களுடன் விளக்குகிறார்!
இந்த மாறுதல் காலகட்டங்களின் ஊடாக நடைபெறவிரிக்கும் சமூக, பொருளாதார மாற்றங்களையும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), படிமுறைத் தீர்வுகள் (Algorithms) மற்றும் Automation ஆகியவற்றால் நடக்கவிருக்கும் வேலையிழப்புகள் பற்றி கூறுகிறார்!
இப்போதிருக்கும் தொழிற்புரட்சி யுகம் மனித மையமான ஒன்று, இதற்கு முந்தியதான உலகம் கடவுள் கொள்கை மற்றும் பல்வேறு மதப் பிரிவுகளின் ஊடகவும் இருந்து செயல்பட்டு வந்தது. ஆனால் 21ம் நூற்றாண்டு முழுக்க முழுக்க தரவுகளை (Data) மையமாக கொண்டு செயல்படும் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.
எதிர்காலத்தில் இணையம் என்பது ஒரு தவிர்க்கமுடியாத மாபெரும் சக்தியாகவும் தரவோட்டத்தின் (Data Flow) அடிநாதமாகவும், மனித உழைப்பை தேவையில்லாத ஒன்றாக மாற்றவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதையும், நிகழ்காலத்தின் உதாரணங்களை வைத்து projection செய்து பார்க்கும் போது பெரும் மலைப்பு ஏற்ப்படுவதை தவிர்க்க முடியவில்லை!
தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் நாகலட்சுமி சண்முகம் அவர்கள், சிறப்பாக செய்திருக்கிறார். ஒரேஒரு சிறிய குறை தான் கலைச் சொற்கள் எல்லாவற்றையும் தமிழப்படுத்தியிருக்கத் தேவையில்லை. இந்த அதீத தமிழ்ப்படுத்துதல் வாசிப்பின் வேகத்தை மட்டுப்படுத்தி விடுகிறது!
மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் நம்முடைய சந்ததிகள் எப்படியான உலகத்தில் வாழப் போகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் நிச்சயம் இந்த நூலை வாசிக்கலாம்!
"மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்த போது வரலாறு தொடங்கியது, மனிதர்களே கடவுளராக மாறும் போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்."
- யுவால் நோவா ஹராரி
பதிப்பகம் - மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
பக்கங்கள் - 504
விலை - ₹499
Friday, June 12, 2020
நூல் அறிமுகம் - ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி
நூல் அறிமுகம் - தாய் - மாக்சிம் கார்க்கி (தமிழில் தொ.மு.சி.ரகுநாதன்)
நூல் அறிமுகம் - மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ்
நூல் அறிமுகம் - ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
நூல் அறிமுகம் - ஜிப்ஸி - ராஜு முருகன்
5/2020
ஜிப்ஸி இந்த வார்த்தையை இதற்கு முன்பு மாருதி மோட்டார் நிறுவனத்தின் ஜிப்ஸி ஜீப்பில் இருந்து அறிந்திருந்தேன்...அந்த வார்த்தையின் அர்த்ததை நாடோடி என்பதாக சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன்...அதுவும் ராஜுமுருகனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் வழியாக தான்...
ராஜு தானும் தன்னுடைய உதவியாளர்கள் இருவருடன் இணைந்து பயணித்த தேசாந்திரிப் பயணத்தின் அனுபவக் குறிப்புகள் தான் விகடனில் தொடராக வெளியான ஜிப்ஸி கட்டுரைத் தொகுப்பு...காசியில் ஆரம்பித்து பயணத்தில் தாங்கள் சந்தித்த அனுபவங்கள், பார்த்து பிரம்மித்து வியந்த மனிதர்கள், ஆளுமைகள் என நம்மையும் அவரோடு கூட்டிச் செல்கிறார்...எழுத்தில் சிறு நகைச்சுவை தொனியை தேவையான இடங்களில் கையாண்டிருக்கிறார்...13 கட்டுரைகளிலும் சலிப்பில்லாமல் ஊர் சுற்றிக் காண்பித்து புதிய மனிதர்களையும் இந்தியாவின் பல்வேறு நாடோடி இனங்களையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்...
நாம் தினமும் வீதிகளில் பார்க்கும் ராமர், லட்சுமண, அனுமார் வேடமேற்று யாசித்து வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் குழு மக்கள், மோட்டார் சைக்கிள் கூண்டு சாகசம் நடத்தும் கேரளத்தைச் சேர்ந்த மரியம், வீதிகளில் கூத்துக் கட்டும் கழைக்கூத்து கலைஞர்கள், இன்னும் சில விளிம்பு நிலையில் இருக்கும் நாடோடிக் குழுக்களுடன் இருந்து சேகரித்த அனுபவங்களையும் பயணத்தின் வழியே அடைந்த தரிசனங்களையும் அதே சுவாரஸ்யம் மாறாமல் கொடுத்திருக்கிறார் ராஜு முருகன்!
இந்த ஜிப்ஸி புத்தகம் கொடுத்த நினைவுகளோடு, ஜிப்ஸி படத்தையும் காண ஆவலாய் காத்திருக்கிறேன்! :)
ஜிப்ஸி - ராஜு முருகன்
பதிப்பகம் - விகடன்
பக்கங்கள் - 136
விலை - ₹115
Saturday, February 15, 2020
நூல் அறிமுகம் - சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்
4/2020
அலைக்கழிப்பின் வழி அல்லல்படுகின்ற ஒருவனின் வாழ்விற்கும், சாவிற்கும் இடையிலான போராட்டத்தின் மங்கலான ஒரு சித்திரம் தான் சுபிட்ச முருகன் புதினம்...சாபத்தின் அடர்த்தியை அதன் வீரியத்தை அதுவிடுக்கும் செயதியை கதை நெடுகிலும் காமத்தின் ஊடாக சொல்லுகிறார்...
இளங்கா அத்தையின் மஞ்சள் பூசிய முகமும், அவளின் கோபமும், அதனால் ஏற்பட்ட சாபமும் நாயகனின் குடும்பத்தில் பல துர்மரணங்களை ஏற்ப்படுத்தி இறுதியில் அந்த சாபம் இறுதியாக நாயகனை காமத்தின் வழி எவ்வாறெல்லாம் அலைக்கழித்து இறுதில் சுபிட்ச முருகனின் காலடியில் பாவம் தீர்க்கிறான் என்பதை உயிரோட்டமாக எழுதியிருக்கிறார்...
கதையில் நிறைய இடங்களில் போதாமையை உணர முடிகிறது...இன்னும் கொஞ்சம் இந்த சம்பவத்தைப் பற்றி விவரித்து எழுதியிருக்கலாம் என தோன்றுகிறது! உதாரணமாக நாயகன் எச்சில் துப்பும் சாமியின் கோயிலுக்கு போகும் வரை நன்றாக இருந்தவனாக காட்டிவிட்டு, அடுத்த காட்சியில் அவனை முடவனாக காட்டியிருக்கிறார்...இடை இடையில் தொடர்பு துண்டித்து துண்டித்து இணைந்து கொண்டு வாசித்த ஒரு அனுபவத்தைக் கொடுத்தது சுபிட்ச முருகன்!
சரவணன் சந்திரன் அண்ணன் இதுவரை எழுதிய நூல்களில் இருந்து சற்றே விலகி இறையியலையும், மெய்ஞ்ஞானத்தையும் சேர்த்து வித்தியாசமான ஒரு நாவலை கொடுத்திருக்கிறார்! :)
சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்
பதிப்பகம் - டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள் - 128
விலை - ₹150
நூல் அறிமுகம் - உலகை வாசிப்போம் - எஸ்.ராமகிருஷ்ணன்
3/2020
உலக இலக்கியம் குறித்த அறிமுகம் என்றாலே எஸ்.ராமகிருஷ்ணன் தான் முதலில் மனதில் வந்து நிற்கிறார்... காரணம் அவருடைய உலக இலக்கிய பேருரைகளை யூடியூப்பில் பார்த்து பழகியது தான்!
31 கட்டுரைகளை கொண்டு புத்தகம் உலகை வாசிப்போம்...உலக இலக்கிய பேருரைகளில் எஸ்.ரா ஒரு நாவலோ, சிறுகதையோ அல்லது கட்டுரை குறித்து பேசியிருப்பார். ஆனால், இந்த புத்தகத்தில் அவர் அறிந்த உலக எழுத்தார்களின்/கவிஞர்களின் (தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹே, ஆல்டெர்ன்பெர்க், கீட்ஸ், ரூமி மற்றும் பல ஆளுமைகள்) தனிப்பட்ட வாழ்க்கையையும், சுவாரஸ்யமான தகவல்களை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
சில உலக இலக்கியத்தை பற்றிய புத்தகங்களை வாசிக்கும் போது சலிப்பு மேலிடும்...ஆனா இந்த புத்தகத்தை பொறுத்த மட்டில் எழுத்து நடை தொய்வில்லாமல் ஓவர் டோஸ் ஆகாமல் கொடுத்திருக்கிறார்! உலக இலக்கியம் வாசிக்க தொடங்க நினைக்கும் நண்பர்களுக்கு இந்த நூல் மிகவும் உதவியாக இருக்கும்!
உலகை வாசிப்போம் - எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் : 200
விலை : ₹200
நூல் அறிமுகம் - ஆப்பிளுக்கு முன் - சி.சரவண கார்த்திகேயன்
2/2020
காந்தி இந்த பெயரைக் கேட்டவுடன் நம் மனதிற்குத் தோன்றும் மகாத்மா தோற்றத்தையும் தாண்டி நம்மில் நிறைய பேருக்கு அவருடைய பிரம்மச்சரிய சோதனைகளைப் பற்றிய விமர்சனங்களையும், கண்ணோட்டங்களையும் காந்தியின் கண்ணோட்டத்தில் இருந்து விளக்கியிருக்கும் நூல் தான் ஆப்பிளுக்கு முன்.
காந்தியின் இறுதிவரை கூட இருந்த அவரது பேத்தி முறையான மநுபென் காந்தியின் மூலம் காந்தியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பங்களை கதையாக சொல்லியிருக்கிறார். அஹிம்சை, எளிய வாழ்க்கை, உண்மையின் பக்கம் நின்று போராடிய காந்தியின் இன்னொரு பிடிவாதமான பக்கத்தை இந்த நாவல் கூறுகிறது. காந்தியின் வாழ்வைப் பற்றிய தெளிவான வாதங்களையும், நோக்கங்களையும், தீர்க்க தரிசனங்களையும் காந்தியின் மூலமாகவே எடுத்துரைக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சரவணகார்த்திகேயன்.
ஆப்பிளுக்கு முன் - சி.சரவணகார்த்திகேயன்
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 166
விலை : ₹170
நூல் அறிமுகம் - தறியுடன் - இரா.பாரதிநாதன்
1/2020
தறியுடன் - இரா.பாரதிநாதன்
தலைப்பை பார்த்தவுன் வாங்க வேண்டும் என மனதில் நினைத்த புத்தகம்! காரணம் கைத் தறியின் சத்தத்தையும், பவர் லூம்ஸின் சத்தத்தையும் கேட்டு வளர்ந்தவன் என்பதால்...பட்டு, நூல், பேட்டு, கண்டிகை என நெசவுத் தொழிலை மையமாக கொண்டு பல நூறு குடும்பங்களில் ஒன்று எங்களின் குடும்பமும்...அப்பாவினால் நெசவைத் தொடர முடியாவிடாலும் சொந்தங்கள் பெரும்பாலும் தறியை நம்பித் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் தான் தறியுடன் நாவலின் நிகழ்விடம்...கதையின் நாயகன் ரங்கன். அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் நாவல்...சேலத்தின் வட்டார வழக்கு, நெசவு செய்யும் மக்களின் வாழ்க்கை முறை என ஆரம்பத்தில்லிருந்தே கதை வாசிப்பவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது! சிரமம்மில்லாத எழுத்து நடை, வர்ணனை என எல்லாவற்றிலும் ஒரு சிறு பிசுறு இல்லாமல் கதையில் நன்றாக ஒன்றி வாசிக்க முடிகிறது...
தறியோட்டும் நெவுத் தொழிலாளர்கள் தினமும் சந்திக்கும் இன்னல்கள், அவமானங்களையும் அவற்றை எல்லாம் எதிர்த்து போராடும் நக்சல்பாரி கம்யூனிச இயக்கத்தைப் பற்றியும் அழகாக கொடுத்திருக்கிறார்...ரங்கன் எவ்வாறு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதன் முழுநேர சேவகனாக வருகிறான்...இயக்கத்தில் இருக்கும் தலைமறைவுத் தோழர்கள் படும் இன்னல்கள்...அரசும், முதலாளிகளும் சேர்ந்து தொழிலாளர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கச் செய்யும் சதித்திட்டங்கள் என நாவல் தொய்வில்லாமல் எழுதியிருக்கிறார்...
மக்களுக்காக போராடும் போராளிகளை அரசும், அதன் இயந்திரமும் தீவிரவாத முத்திரை குத்தி அழிக்க நினைக்கும் அக்கிரமங்களை தோலுரித்துக் காட்டியுள்ளது தறியுடன்!
புத்தகம் : தறியுடன்
ஆசிரியர் : இரா.பாரதிநாதன்
பதிப்பகம் : பொன்னுலகம் புத்தக நிலையம்
பக்கங்கள் : 780
விலை : 650/-




