Saturday, February 15, 2020

நூல் அறிமுகம் - சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

#வாசிப்பு2020

4/2020

அலைக்கழிப்பின் வழி அல்லல்படுகின்ற ஒருவனின் வாழ்விற்கும், சாவிற்கும் இடையிலான போராட்டத்தின் மங்கலான ஒரு சித்திரம் தான் சுபிட்ச முருகன் புதினம்...சாபத்தின் அடர்த்தியை அதன் வீரியத்தை அதுவிடுக்கும் செயதியை கதை நெடுகிலும் காமத்தின் ஊடாக சொல்லுகிறார்...

இளங்கா அத்தையின் மஞ்சள் பூசிய முகமும், அவளின் கோபமும், அதனால் ஏற்பட்ட சாபமும் நாயகனின் குடும்பத்தில் பல துர்மரணங்களை ஏற்ப்படுத்தி இறுதியில் அந்த சாபம் இறுதியாக நாயகனை காமத்தின் வழி எவ்வாறெல்லாம் அலைக்கழித்து இறுதில் சுபிட்ச முருகனின் காலடியில் பாவம் தீர்க்கிறான் என்பதை உயிரோட்டமாக எழுதியிருக்கிறார்...



கதையில் நிறைய இடங்களில் போதாமையை உணர முடிகிறது...இன்னும் கொஞ்சம் இந்த சம்பவத்தைப் பற்றி விவரித்து எழுதியிருக்கலாம் என தோன்றுகிறது! உதாரணமாக நாயகன் எச்சில் துப்பும் சாமியின் கோயிலுக்கு போகும் வரை நன்றாக இருந்தவனாக காட்டிவிட்டு, அடுத்த காட்சியில் அவனை முடவனாக காட்டியிருக்கிறார்...இடை இடையில் தொடர்பு துண்டித்து துண்டித்து இணைந்து கொண்டு வாசித்த ஒரு அனுபவத்தைக் கொடுத்தது சுபிட்ச முருகன்!

சரவணன் சந்திரன் அண்ணன் இதுவரை எழுதிய நூல்களில் இருந்து சற்றே விலகி இறையியலையும், மெய்ஞ்ஞானத்தையும் சேர்த்து வித்தியாசமான ஒரு நாவலை கொடுத்திருக்கிறார்! :)

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

பதிப்பகம் - டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள் - 128
விலை - ₹150

நூல் அறிமுகம் - உலகை வாசிப்போம் - எஸ்.ராமகிருஷ்ணன்

#வாசிப்பு2020

3/2020

உலக இலக்கியம் குறித்த அறிமுகம் என்றாலே எஸ்.ராமகிருஷ்ணன் தான் முதலில் மனதில் வந்து நிற்கிறார்... காரணம் அவருடைய உலக இலக்கிய பேருரைகளை யூடியூப்பில் பார்த்து பழகியது தான்!

31 கட்டுரைகளை கொண்டு புத்தகம் உலகை வாசிப்போம்...உலக இலக்கிய பேருரைகளில் எஸ்.ரா ஒரு நாவலோ,  சிறுகதையோ அல்லது கட்டுரை குறித்து பேசியிருப்பார். ஆனால், இந்த புத்தகத்தில் அவர் அறிந்த உலக எழுத்தார்களின்/கவிஞர்களின் (தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹே, ஆல்டெர்ன்பெர்க், கீட்ஸ், ரூமி மற்றும் பல ஆளுமைகள்) தனிப்பட்ட வாழ்க்கையையும், சுவாரஸ்யமான தகவல்களை தொகுத்து வழங்கியிருக்கிறார்.


சில உலக இலக்கியத்தை பற்றிய புத்தகங்களை வாசிக்கும் போது சலிப்பு மேலிடும்...ஆனா இந்த புத்தகத்தை பொறுத்த மட்டில் எழுத்து நடை தொய்வில்லாமல் ஓவர் டோஸ் ஆகாமல் கொடுத்திருக்கிறார்! உலக இலக்கியம் வாசிக்க தொடங்க நினைக்கும் நண்பர்களுக்கு இந்த நூல் மிகவும் உதவியாக இருக்கும்!

 உலகை வாசிப்போம் - எஸ்.ராமகிருஷ்ணன்

தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் : 200
விலை : ₹200

நூல் அறிமுகம் - ஆப்பிளுக்கு முன் - சி.சரவண கார்த்திகேயன்

#வாசிப்பு2020

2/2020

காந்தி இந்த பெயரைக் கேட்டவுடன் நம் மனதிற்குத் தோன்றும் மகாத்மா தோற்றத்தையும் தாண்டி நம்மில் நிறைய பேருக்கு அவருடைய பிரம்மச்சரிய சோதனைகளைப் பற்றிய விமர்சனங்களையும், கண்ணோட்டங்களையும் காந்தியின் கண்ணோட்டத்தில் இருந்து விளக்கியிருக்கும் நூல் தான் ஆப்பிளுக்கு முன்.



காந்தியின் இறுதிவரை கூட இருந்த அவரது பேத்தி முறையான மநுபென் காந்தியின் மூலம் காந்தியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பங்களை கதையாக சொல்லியிருக்கிறார். அஹிம்சை, எளிய வாழ்க்கை, உண்மையின் பக்கம் நின்று போராடிய காந்தியின் இன்னொரு பிடிவாதமான பக்கத்தை இந்த நாவல் கூறுகிறது. காந்தியின் வாழ்வைப் பற்றிய தெளிவான வாதங்களையும், நோக்கங்களையும், தீர்க்க தரிசனங்களையும் காந்தியின் மூலமாகவே எடுத்துரைக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சரவணகார்த்திகேயன்.

ஆப்பிளுக்கு முன் - சி.சரவணகார்த்திகேயன்

உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 166
விலை : ₹170

நூல் அறிமுகம் - தறியுடன் - இரா.பாரதிநாதன்

#வாசிப்பு2020

1/2020

தறியுடன் - இரா.பாரதிநாதன்

தலைப்பை பார்த்தவுன் வாங்க வேண்டும் என மனதில் நினைத்த புத்தகம்! காரணம் கைத் தறியின் சத்தத்தையும், பவர் லூம்ஸின் சத்தத்தையும் கேட்டு வளர்ந்தவன் என்பதால்...பட்டு, நூல், பேட்டு, கண்டிகை என நெசவுத் தொழிலை மையமாக கொண்டு பல நூறு குடும்பங்களில் ஒன்று எங்களின் குடும்பமும்...அப்பாவினால் நெசவைத் தொடர முடியாவிடாலும் சொந்தங்கள் பெரும்பாலும் தறியை நம்பித் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் தான் தறியுடன் நாவலின் நிகழ்விடம்...கதையின் நாயகன் ரங்கன். அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் நாவல்...சேலத்தின் வட்டார வழக்கு, நெசவு செய்யும் மக்களின் வாழ்க்கை முறை என ஆரம்பத்தில்லிருந்தே கதை வாசிப்பவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது! சிரமம்மில்லாத எழுத்து நடை, வர்ணனை என எல்லாவற்றிலும் ஒரு சிறு பிசுறு இல்லாமல் கதையில் நன்றாக ஒன்றி வாசிக்க முடிகிறது...



தறியோட்டும் நெவுத் தொழிலாளர்கள் தினமும் சந்திக்கும் இன்னல்கள், அவமானங்களையும் அவற்றை எல்லாம் எதிர்த்து போராடும் நக்சல்பாரி கம்யூனிச இயக்கத்தைப் பற்றியும் அழகாக கொடுத்திருக்கிறார்...ரங்கன் எவ்வாறு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதன் முழுநேர சேவகனாக வருகிறான்...இயக்கத்தில் இருக்கும் தலைமறைவுத் தோழர்கள் படும் இன்னல்கள்...அரசும், முதலாளிகளும் சேர்ந்து தொழிலாளர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கச் செய்யும் சதித்திட்டங்கள் என நாவல் தொய்வில்லாமல் எழுதியிருக்கிறார்...

மக்களுக்காக போராடும் போராளிகளை அரசும், அதன் இயந்திரமும் தீவிரவாத முத்திரை குத்தி அழிக்க நினைக்கும் அக்கிரமங்களை தோலுரித்துக் காட்டியுள்ளது தறியுடன்!

புத்தகம் : தறியுடன்
ஆசிரியர் : இரா.பாரதிநாதன்
பதிப்பகம் : பொன்னுலகம் புத்தக நிலையம்
பக்கங்கள் : 780
விலை : 650/-