Sunday, June 14, 2020

நூல் அறிமுகம் - ஹோமோடியஸ் வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)

#வாசிப்பு2020

11/2020

ஹோமோடியஸ் - வருங்காத்தின் சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி - தமிழில் நாகலட்சுமி சண்முகம்

ஹோமோசேப்பியன்கள் ஹோமோடியஸாக (லத்தீன் மொழியில் டியஸ் என்றால் கடவுள்) மாறக் கூடிய காலகட்டமான 21ம் நூற்றாண்டை பற்றிய தன்னுடைய பரந்துபட்ட ஆராச்சியின் கூறுகளை இந்நூல் மூலமாக முடிந்தளவு எளிமையாக்கி கொடுத்திருக்கிறார் இஸ்ரேலிய வரலாற்று அறிஞர் யுவால் நோவா ஹராரி...இவர் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்...இவரின் முந்தைய நூலான சேப்பியன்ஸ் மனித குலத்தின் சுருக்கமான வரலாறு உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற படைப்பாகும்!

மனிதனின் மூதாதையர்களான நியண்டர்தால், சிம்பன்சிக்களில் இருந்து மனிதனின் பரிணாமம் இப்போது இருக்கும் ஹோமோசேப்பியன்ஸ் என்கிற நிலையை அடைந்திருக்கிறது...இதற்கு அடுத்த வளர்ச்சியாக ஹோமோடியஸ் என கூறக்கூடிய அதிமனிதர்களாக (Super humans) மாறுவதற்கான சாத்தியக் கூறுகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறார்.

ஹராரி வரலாற்று ஆய்வாளராக இருந்தாலும் அவர் இந்த புத்தகத்தில் அறிவியல், தொழிநுட்பம், மருத்துவம், பண்பாடு, கலை என எல்லா விதமான பரிணாமக் கூறுகளைப் பற்றியும் சுறுக்கமாக அதே சமயத்தில் சுலபமான உதாரணங்களுடன் விளக்குகிறார்!

இந்த மாறுதல் காலகட்டங்களின் ஊடாக நடைபெறவிரிக்கும் சமூக, பொருளாதார மாற்றங்களையும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), படிமுறைத் தீர்வுகள் (Algorithms) மற்றும் Automation ஆகியவற்றால் நடக்கவிருக்கும் வேலையிழப்புகள் பற்றி கூறுகிறார்!


இப்போதிருக்கும் தொழிற்புரட்சி யுகம்  மனித மையமான ஒன்று, இதற்கு முந்தியதான உலகம் கடவுள் கொள்கை மற்றும் பல்வேறு மதப் பிரிவுகளின் ஊடகவும் இருந்து செயல்பட்டு வந்தது. ஆனால் 21ம் நூற்றாண்டு முழுக்க முழுக்க தரவுகளை (Data) மையமாக கொண்டு செயல்படும் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

எதிர்காலத்தில் இணையம் என்பது ஒரு தவிர்க்கமுடியாத மாபெரும் சக்தியாகவும் தரவோட்டத்தின் (Data Flow) அடிநாதமாகவும், மனித உழைப்பை தேவையில்லாத ஒன்றாக மாற்றவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதையும், நிகழ்காலத்தின் உதாரணங்களை வைத்து projection செய்து பார்க்கும் போது பெரும் மலைப்பு ஏற்ப்படுவதை தவிர்க்க முடியவில்லை!

தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் நாகலட்சுமி சண்முகம் அவர்கள், சிறப்பாக செய்திருக்கிறார். ஒரேஒரு சிறிய குறை தான் கலைச் சொற்கள் எல்லாவற்றையும் தமிழப்படுத்தியிருக்கத் தேவையில்லை. இந்த அதீத தமிழ்ப்படுத்துதல் வாசிப்பின் வேகத்தை மட்டுப்படுத்தி விடுகிறது!

மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் நம்முடைய சந்ததிகள் எப்படியான உலகத்தில் வாழப் போகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் நிச்சயம் இந்த நூலை வாசிக்கலாம்!

"மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்த போது வரலாறு தொடங்கியது, மனிதர்களே கடவுளராக மாறும் போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்."

- யுவால் நோவா ஹராரி

பதிப்பகம் - மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
பக்கங்கள் - 504
விலை - ₹499

Friday, June 12, 2020

நூல் அறிமுகம் - ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி

#வாசிப்பு2020

10/2020

ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி

18 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் கொண்ட தொகுப்பு, பழ. அதியமான் தொகுத்திருக்கிறார். கரிசல் நிலத்தின் கதை சொல்லியான அழகிரிசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் அவர்கள் பிறந்த இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர்.

கரிசல் நிலத்திலிருந்து எழுத வந்திருந்தாலும் ஒருசில கதைகளைத் தவிர மற்றவை எல்லாம் சென்னையின் மைலாப்பூர், திருவல்லிக்கேணி என சென்னையின் அறுபதுகளின் வாழ்நிலை கதைகளில் பிரதிபலிக்கிறது...
கதாபாத்திரங்கள் எல்லோரும் ஏழை மற்றும் நடுத்தர குடுத்து ஆட்களாகவே இருக்கிறார்கள். அநேக கதைகளில் பசி என்பதை மையச் சரடாக பயன்படுத்தியிருக்கிறார் அழகிரிசாமி.  

குடும்ப வாழ்க்கை, மனிதர்களின் மன அவசம், பலவீனங்கள், குழந்தைகளின் உலகம், மனிதனின் சிறுமை எண்ணங்கள் என பல்வேறு தளங்களில் எளிமையான நடையில் சித்தரிப்பின் லாவகத்தோடும், உள்ளோடும் துயர இழையுடனும், நகைச்சுவையோடும்,  வாசகனுக்கு சலிப்பில்லாமலும் ஒரு Feel good தொகுப்பாக இருக்கிறது ராஜா வந்திருக்கிறார்! 

பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 270
விலை - ₹300

நூல் அறிமுகம் - தாய் - மாக்சிம் கார்க்கி (தமிழில் தொ.மு.சி.ரகுநாதன்)

#வாசிப்பு2020

9/2020

தாய் - மாக்சிம் கார்கி
தமிழில் - தொ.மு.சி ரகுநாதன்

ரஷ்ய நாட்டின் ஒரு தொழிலாளர் குடியிருப்பில் இருக்கும் ஒரு குடிகாரத் தொழிலாளியின் மனைவியான பெலகேயா நிலாவ்னா மற்றும் அவளது மகன் பாவெல் விலாவிச்... பாவெல்லின் அப்பா இறந்த பிறகு அவனுடைய நடவடிக்கைகளில் நிகழ்ந்த மாற்றங்களை பயத்துடன் கண்ணுற்று துயர் கொள்கிறாள் தாய் பெலகேயா...

மகனின் போக்கு அரசிற்கு எதிராகவும், ஜார் மன்னின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும் இருப்பதை கண்டு மிகவும் மன வருத்தத்திற்கு உள்ளாகிறாள்...சில நாட்களுக்கு பிறகு புதிய மனிதர்கள் சிலர் பாவெல்லை பார்த்து விவாதிப்பற்காக அவர்களின் வீட்டிற்கு வருகிறார்கள்...

நிறைய புத்தகங்களை வாசித்து புரட்சிக்கான திடமுடையவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள நிறைய விவாதங்களை மேற்க்கொள்கிறார்கள்...இந்த விவாதங்களை கவனித்த தாய்க்கு தன்னுடைய மகன் ஒரு ஞாயமான விசயங்களுக்காக தான் போராட ஆயத்தமாகிறான் என்கிற விசயம் பிடிபடுகிறது...
கொஞ்சம் கொஞ்சமாக தாயும், பாவெல் மற்றும் அவனது தோழர்களின் கொள்கைகளின் பால் ஈர்க்கப்படுகிறாள்...ஒரு கட்டத்தில் பாவெலும் அவனது தோழர்களும் கைது செய்யப்பட தாயை நகரத்தில் இருக்கும் தோழன் நிகலாய் இவனோவிச்சின் வீட்டிற்கு கூட்டிச் சென்று தங்க வைத்துக் கொள்கிறான்...அங்கே இன்னும் நிறைய தோழர்களுடைய அறிமுகம் கிடைக்கிறது...தாய் தன்னை இயக்கத்தின் முழுமையான பணிகளில் தன்னை முழுவது ஈடுபடுத்திக் கொள்கிறாள்...

அதே நேரத்தில் ரஷ்ய மக்கள் வாசிப்பில் எவ்வளவு ஆர்வம் கொண்டவர்கள் என்பதை இந்த நாவலின் மூலம் அறிய முடிகிறது...மாபெரும் புரட்சிகள் அனைத்தும் தூண்டப்படுவதற்கு எழுத்து எவ்வளவு உதவிகரமான கருவியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது! 

ஒவ்வொரு நாட்களும் புரட்சிகர கருத்துக்களின் தாக்கத்தால் ஆட்கொள்ளப்படுகிற பெலகேயா நிலாவ்னா என்ன மாதிரியான மனப் போக்குகளுக்கு ஆளாகிறாள் என்பதை கார்க்கி எழுத்தின் ஊடாக உணர்த்துகிறார்...புரட்சி என்பது முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய விசயம் என்பதை உணர முடிகிறது...தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் ஆண்களை விட பெண்கள் இன்னும் உத்வேகத்துடன் உண்மைக்கான குரலாக ஒலிப்பார்கள் என்பதை கதையில் வரும் பெலகேயா நிலாவ்னா, சோபியா, சாஷா பொன்ற நிறைய கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்துகின்றனர்...

நான் வாசித்தது NCBH இன் பதிப்பு...மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தாலும்...புத்தகத்தின் பிழைத் திருத்தம் சரியாக செய்யப்படவில்லை...ஒரு சில பக்கங்களை எல்லாம் வாசிக்கையில் யார் பேசுறார்...யார் பதில் சொல்கிறார் என்று குழப்பம் வருகிறது அளவிற்கு ஆண்பால் பெண்பால் குறிப்புகளிலேயே நிறைய பிழைகளை காண முடிகிறது...

காலங்கள் மாறலாம் ஆனால் காட்சிகள் இன்னும் அதே மாதிரி தான் இருக்கிறது என்பதை உலகின் பல மூலைகளில் நடக்கும் அடக்குமுறை, பாசிச வெறி, தொழிலாளர்கள் சுரண்டல் என்கிற புள்ளியில் இருந்து பார்க்கும் போது தாய் எல்லா காலத்துக்கும் பொருந்துகின்ற ஒரு உலகப்படைப்பு என்பதில் எந்த ஐய்யமும் இன்றி நிரூபணம் ஆகிறது! 

பதிப்பகம் - NCBH
பக்கங்கள் - 534
விலை - ₹350

நூல் அறிமுகம் - மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ்

#வாசிப்பு2020

8/2020

மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ்

சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் மன்னார்குடி மற்றும் தஞ்சை மாநகரில் வாழந்த கிருஸ்துவ கள்ளர் குடும்பத்துப் பெண்ணான எஸ்தரின் வாழ்கையின் ஊடாக அந்த காலத்தில் நிலவிய சாதிய முறையை பற்றியும், மக்களின் வாழ்வியல் முறையும், கிறிஸ்துவ மதம் மாறிய மக்களின் வாழ் நிலையையும்...முக்கியமாக பெண்களின்  நிலையையும் ஒரு குறுக்கு வெட்டுத் தொற்றமாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் ப்ரகாஷ்...

நிறைய கனவுகளுடனும், ஆசைகளுடனும் மன்னார்குடியில் 15 வயது நிரம்பிய தைரியமான, ஆங்கிலப் புலமை, இசை ஞானம்,  சமத்துவ சமுதாயத்தில் நம்பிக்கையுள்ள பெண்ணாக வலம் வருகிறாள் எஸ்தர்...அந்த காலகட்டத்தில் 15 வயதில் ஒன்று வீட்டில் விதவையாக இருப்பார்கள் அல்லது கணவன் வீட்டில் இருப்பார்கள்... ஆனால் எஸ்தர் மட்டும் அதில் விதிவிலக்காக இருந்தாள்...
வாழ்வில் எஸ்தர் எடுத்த ஒரு தவறான முடிவினால் இடையில் லாசரஸ் என்னும் ஒருவனின் வலையில் மாட்டிக் கொண்டு திருமண பந்தத்தில் வலுக்கட்டாயமாக நுழைத்தனுப்பப்படுகிறாள்...

அதன் பிறகு அவளின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை ப்ரகாஷ் தன் இயல்பான எழுத்து நடையில் தொய்வின்றி எழுதியிருக்கிறார்! 

18ம் நூற்றாண்டின் அரசியல், சமூக நிலைப்பாடுகள், தஞ்சை மாகாணத்தில் சரபோஜி மன்னர்களின் இக்கட்டான சூழல் என அன்றைய காலகட்டத்தையும் கதைக்கு இயைந்தாற்போல பயன்படுத்தியிருக்கிறார்! 

பதிப்பகம் - வாசகசாலை பதிப்பகம்
பக்கங்கள் - 110
விலை - ₹120

நூல் அறிமுகம் - ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்

#வாசிப்பு2020

7/2020

ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான் 

முதல் உலகப் போர் முடிந்த கால கட்டத்தில் குமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் என்னும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் கடலோர கிரமத்தில் வசிக்கும் மக்களையும், அந்த கிராமத்தின் தலைவனாக தன்னை பாவித்திருக்கும் வடக்கு வீட்டு அகமது கண்ணு முதலாளி என்கிற கதாபத்திரத்தின் ஊடாக தலைக்கணம் என்னென்ன இழிவான நிலைக்கு ஒருவனை கொண்டு செல்லும் என்பதை நாவல் காட்டுகிறது...

இஸ்லாமிய பழமைவாதத்தையும், அதில் இருக்கும் மூட நம்பிக்கைகளையும், முதலாளியின் அடக்குமுறையையும் எதிர்த்து குரல் கொடுக்கும் சுறாப்பீலி விற்கும் மஹமூது ஒரு ஹீரோவாகவே கட்சியளிக்கிறார்...

அந்த காலகட்டத்தில் இஸ்லாத்தில் பெண்களின் எண்ணங்களுக்கு மதிப்பே கொடுப்பதில்லை என்பதையும் முதலாளியின் மகள் ஆயிஷா, அவரின் தங்கை நூகுபாத்துமா ஆகிய  கதாப்பாத்திரங்களின் மூலமாக உணர்த்துகிறார்...

ஊரில் ஆங்கிலப் பள்ளிக் கூடம் வருவதை எதிர்க்கும் மக்கள்...மதரஸா என்னும் குர்ஆன் சொல்லித்தரும் பள்ளிக் கூடத்தை தவிர மற்றதை ஹராம் என்று ஒதுக்கும் மக்கள் என இஸ்லாமிய மக்களின் ஊடாக இருந்த பிற்போக்குத் தனங்களை எல்லாம் உள்ளபடியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் மீரான்...

நாவலை ஆரம்பிக்கும் போது வழக்குச் சொற்களை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்தாலும் மொழிநடையில் நம்மை இயல்பாக நாவலின் ஊடக பயணித்து ஒன்றி வாசிக்க வைத்து விடுகிறது! 

பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 215
விலை - ₹225

நூல் அறிமுகம் - ஜிப்ஸி - ராஜு முருகன்

#வாசிப்பு2020

5/2020

ஜிப்ஸி இந்த வார்த்தையை இதற்கு முன்பு மாருதி மோட்டார் நிறுவனத்தின் ஜிப்ஸி ஜீப்பில் இருந்து அறிந்திருந்தேன்...அந்த வார்த்தையின் அர்த்ததை நாடோடி என்பதாக சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன்...அதுவும் ராஜுமுருகனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் வழியாக தான்...

ராஜு தானும் தன்னுடைய உதவியாளர்கள் இருவருடன் இணைந்து பயணித்த தேசாந்திரிப் பயணத்தின் அனுபவக் குறிப்புகள் தான் விகடனில் தொடராக வெளியான ஜிப்ஸி கட்டுரைத் தொகுப்பு...காசியில் ஆரம்பித்து பயணத்தில் தாங்கள் சந்தித்த அனுபவங்கள், பார்த்து பிரம்மித்து வியந்த மனிதர்கள், ஆளுமைகள் என நம்மையும் அவரோடு கூட்டிச் செல்கிறார்...எழுத்தில் சிறு நகைச்சுவை தொனியை தேவையான இடங்களில் கையாண்டிருக்கிறார்...13 கட்டுரைகளிலும் சலிப்பில்லாமல் ஊர் சுற்றிக் காண்பித்து புதிய மனிதர்களையும் இந்தியாவின் பல்வேறு நாடோடி இனங்களையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்...

நாம் தினமும் வீதிகளில் பார்க்கும் ராமர், லட்சுமண, அனுமார் வேடமேற்று யாசித்து வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் குழு மக்கள், மோட்டார் சைக்கிள் கூண்டு சாகசம் நடத்தும் கேரளத்தைச் சேர்ந்த மரியம், வீதிகளில் கூத்துக் கட்டும் கழைக்கூத்து கலைஞர்கள், இன்னும் சில விளிம்பு நிலையில் இருக்கும் நாடோடிக் குழுக்களுடன் இருந்து சேகரித்த அனுபவங்களையும் பயணத்தின் வழியே அடைந்த தரிசனங்களையும் அதே சுவாரஸ்யம் மாறாமல் கொடுத்திருக்கிறார் ராஜு முருகன்!

இந்த ஜிப்ஸி புத்தகம் கொடுத்த நினைவுகளோடு, ஜிப்ஸி படத்தையும் காண ஆவலாய் காத்திருக்கிறேன்! :)

ஜிப்ஸி - ராஜு முருகன்

பதிப்பகம் - விகடன்
பக்கங்கள் - 136
விலை - ₹115