#வாசிப்பு2020
11/2020
ஹோமோடியஸ் - வருங்காத்தின் சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி - தமிழில் நாகலட்சுமி சண்முகம்
ஹோமோசேப்பியன்கள் ஹோமோடியஸாக (லத்தீன் மொழியில் டியஸ் என்றால் கடவுள்) மாறக் கூடிய காலகட்டமான 21ம் நூற்றாண்டை பற்றிய தன்னுடைய பரந்துபட்ட ஆராச்சியின் கூறுகளை இந்நூல் மூலமாக முடிந்தளவு எளிமையாக்கி கொடுத்திருக்கிறார் இஸ்ரேலிய வரலாற்று அறிஞர் யுவால் நோவா ஹராரி...இவர் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்...இவரின் முந்தைய நூலான சேப்பியன்ஸ் மனித குலத்தின் சுருக்கமான வரலாறு உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற படைப்பாகும்!
மனிதனின் மூதாதையர்களான நியண்டர்தால், சிம்பன்சிக்களில் இருந்து மனிதனின் பரிணாமம் இப்போது இருக்கும் ஹோமோசேப்பியன்ஸ் என்கிற நிலையை அடைந்திருக்கிறது...இதற்கு அடுத்த வளர்ச்சியாக ஹோமோடியஸ் என கூறக்கூடிய அதிமனிதர்களாக (Super humans) மாறுவதற்கான சாத்தியக் கூறுகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறார்.
ஹராரி வரலாற்று ஆய்வாளராக இருந்தாலும் அவர் இந்த புத்தகத்தில் அறிவியல், தொழிநுட்பம், மருத்துவம், பண்பாடு, கலை என எல்லா விதமான பரிணாமக் கூறுகளைப் பற்றியும் சுறுக்கமாக அதே சமயத்தில் சுலபமான உதாரணங்களுடன் விளக்குகிறார்!
இந்த மாறுதல் காலகட்டங்களின் ஊடாக நடைபெறவிரிக்கும் சமூக, பொருளாதார மாற்றங்களையும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), படிமுறைத் தீர்வுகள் (Algorithms) மற்றும் Automation ஆகியவற்றால் நடக்கவிருக்கும் வேலையிழப்புகள் பற்றி கூறுகிறார்!
இப்போதிருக்கும் தொழிற்புரட்சி யுகம் மனித மையமான ஒன்று, இதற்கு முந்தியதான உலகம் கடவுள் கொள்கை மற்றும் பல்வேறு மதப் பிரிவுகளின் ஊடகவும் இருந்து செயல்பட்டு வந்தது. ஆனால் 21ம் நூற்றாண்டு முழுக்க முழுக்க தரவுகளை (Data) மையமாக கொண்டு செயல்படும் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.
எதிர்காலத்தில் இணையம் என்பது ஒரு தவிர்க்கமுடியாத மாபெரும் சக்தியாகவும் தரவோட்டத்தின் (Data Flow) அடிநாதமாகவும், மனித உழைப்பை தேவையில்லாத ஒன்றாக மாற்றவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதையும், நிகழ்காலத்தின் உதாரணங்களை வைத்து projection செய்து பார்க்கும் போது பெரும் மலைப்பு ஏற்ப்படுவதை தவிர்க்க முடியவில்லை!
தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் நாகலட்சுமி சண்முகம் அவர்கள், சிறப்பாக செய்திருக்கிறார். ஒரேஒரு சிறிய குறை தான் கலைச் சொற்கள் எல்லாவற்றையும் தமிழப்படுத்தியிருக்கத் தேவையில்லை. இந்த அதீத தமிழ்ப்படுத்துதல் வாசிப்பின் வேகத்தை மட்டுப்படுத்தி விடுகிறது!
மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் நம்முடைய சந்ததிகள் எப்படியான உலகத்தில் வாழப் போகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் நிச்சயம் இந்த நூலை வாசிக்கலாம்!
"மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்த போது வரலாறு தொடங்கியது, மனிதர்களே கடவுளராக மாறும் போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்."
- யுவால் நோவா ஹராரி
பதிப்பகம் - மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
பக்கங்கள் - 504
விலை - ₹499
No comments:
Post a Comment