Friday, June 12, 2020

நூல் அறிமுகம் - தாய் - மாக்சிம் கார்க்கி (தமிழில் தொ.மு.சி.ரகுநாதன்)

#வாசிப்பு2020

9/2020

தாய் - மாக்சிம் கார்கி
தமிழில் - தொ.மு.சி ரகுநாதன்

ரஷ்ய நாட்டின் ஒரு தொழிலாளர் குடியிருப்பில் இருக்கும் ஒரு குடிகாரத் தொழிலாளியின் மனைவியான பெலகேயா நிலாவ்னா மற்றும் அவளது மகன் பாவெல் விலாவிச்... பாவெல்லின் அப்பா இறந்த பிறகு அவனுடைய நடவடிக்கைகளில் நிகழ்ந்த மாற்றங்களை பயத்துடன் கண்ணுற்று துயர் கொள்கிறாள் தாய் பெலகேயா...

மகனின் போக்கு அரசிற்கு எதிராகவும், ஜார் மன்னின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும் இருப்பதை கண்டு மிகவும் மன வருத்தத்திற்கு உள்ளாகிறாள்...சில நாட்களுக்கு பிறகு புதிய மனிதர்கள் சிலர் பாவெல்லை பார்த்து விவாதிப்பற்காக அவர்களின் வீட்டிற்கு வருகிறார்கள்...

நிறைய புத்தகங்களை வாசித்து புரட்சிக்கான திடமுடையவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள நிறைய விவாதங்களை மேற்க்கொள்கிறார்கள்...இந்த விவாதங்களை கவனித்த தாய்க்கு தன்னுடைய மகன் ஒரு ஞாயமான விசயங்களுக்காக தான் போராட ஆயத்தமாகிறான் என்கிற விசயம் பிடிபடுகிறது...
கொஞ்சம் கொஞ்சமாக தாயும், பாவெல் மற்றும் அவனது தோழர்களின் கொள்கைகளின் பால் ஈர்க்கப்படுகிறாள்...ஒரு கட்டத்தில் பாவெலும் அவனது தோழர்களும் கைது செய்யப்பட தாயை நகரத்தில் இருக்கும் தோழன் நிகலாய் இவனோவிச்சின் வீட்டிற்கு கூட்டிச் சென்று தங்க வைத்துக் கொள்கிறான்...அங்கே இன்னும் நிறைய தோழர்களுடைய அறிமுகம் கிடைக்கிறது...தாய் தன்னை இயக்கத்தின் முழுமையான பணிகளில் தன்னை முழுவது ஈடுபடுத்திக் கொள்கிறாள்...

அதே நேரத்தில் ரஷ்ய மக்கள் வாசிப்பில் எவ்வளவு ஆர்வம் கொண்டவர்கள் என்பதை இந்த நாவலின் மூலம் அறிய முடிகிறது...மாபெரும் புரட்சிகள் அனைத்தும் தூண்டப்படுவதற்கு எழுத்து எவ்வளவு உதவிகரமான கருவியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது! 

ஒவ்வொரு நாட்களும் புரட்சிகர கருத்துக்களின் தாக்கத்தால் ஆட்கொள்ளப்படுகிற பெலகேயா நிலாவ்னா என்ன மாதிரியான மனப் போக்குகளுக்கு ஆளாகிறாள் என்பதை கார்க்கி எழுத்தின் ஊடாக உணர்த்துகிறார்...புரட்சி என்பது முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய விசயம் என்பதை உணர முடிகிறது...தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் ஆண்களை விட பெண்கள் இன்னும் உத்வேகத்துடன் உண்மைக்கான குரலாக ஒலிப்பார்கள் என்பதை கதையில் வரும் பெலகேயா நிலாவ்னா, சோபியா, சாஷா பொன்ற நிறைய கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்துகின்றனர்...

நான் வாசித்தது NCBH இன் பதிப்பு...மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தாலும்...புத்தகத்தின் பிழைத் திருத்தம் சரியாக செய்யப்படவில்லை...ஒரு சில பக்கங்களை எல்லாம் வாசிக்கையில் யார் பேசுறார்...யார் பதில் சொல்கிறார் என்று குழப்பம் வருகிறது அளவிற்கு ஆண்பால் பெண்பால் குறிப்புகளிலேயே நிறைய பிழைகளை காண முடிகிறது...

காலங்கள் மாறலாம் ஆனால் காட்சிகள் இன்னும் அதே மாதிரி தான் இருக்கிறது என்பதை உலகின் பல மூலைகளில் நடக்கும் அடக்குமுறை, பாசிச வெறி, தொழிலாளர்கள் சுரண்டல் என்கிற புள்ளியில் இருந்து பார்க்கும் போது தாய் எல்லா காலத்துக்கும் பொருந்துகின்ற ஒரு உலகப்படைப்பு என்பதில் எந்த ஐய்யமும் இன்றி நிரூபணம் ஆகிறது! 

பதிப்பகம் - NCBH
பக்கங்கள் - 534
விலை - ₹350

No comments:

Post a Comment