Sunday, November 29, 2020

நூல் அறிமுகம் - விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

வாசிப்பு2020

15/2020

விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

இந்த புத்தகத்தை ரொம்ப ஆசையாய் வாங்கி வைத்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது... இந்த இரண்டு வருடத்தில் இரண்டு முறை வாசிக்க எடுத்து முதல்முறை நான்கு பதிப்புகளின் முன்னுரையை மட்டும் வாசித்து வைத்து விட்டேன்...இரண்டாம் முறை முதல் பகுதியில் இரண்டு அத்தியாயங்களுடன் நிறுத்திவிட்டேன்...


இந்த முறை விடக்கூடாது எப்படியாவது முடித்துவிட வேண்டும் என சபதம் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்...சுமார் 3 மாதங்கள் எடுத்துக் கொண்டேன் விஷ்ணுபுரத்தை வாசித்து முடிக்க...
வசந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரத்தின் கதையை சபையோர் முன்னிலையில் கூறுகிறான்...அந்த கதை சொல்லலில் விரிவான சொற்களால் கட்டமைக்கப்பட்ட நகரமே விஷ்ணுபுரம்...

இந்த நாவல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது...

1. ஸ்ரீபாதம் 
2. கௌஸ்தூபம்
3. மணிமுடி

1. ஸ்ரீபாதம் : 

முதல் பகுதியான ஸ்ரீபாதத்தில், சோனா நதிக்கரையில், ஹரிததுங்காவின் சிகரங்களின் நிழலில் எழுந்து நிற்கும் விஷ்ணுபுர நகரத்தின் அதி அற்புதமான தோற்றமும், கோயிலின் பிரம்மாண்டமான வடிவத்தையும் நம்மால் காட்சிப்படுத்திக் கொள்ள முடிகிறது! விஷ்ணுபுர கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்ப்பங்களின் அழகையும், திருவிழாவிற்காக மக்கள் அலை அலையாக திரண்டு வரும் காட்சிகளையும் மிகவும் அழகாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்...ஒரு நாவலில் இத்தனை கதை மாந்தர்களா என வியக்கும் அளவிற்கு அவ்வளவு பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது...கதையின் ஓட்டத்தில் அந்த சிரமம் நீங்கி விடுகிறது...எல்லா கதாபாத்திரங்களின் அறிமுகமும் இந்த பகுதியில் தான் நடக்கிறது...இந்த பகுதி மிகவும் வேகமாகவும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமலும் வாசித்து முடிக்க முடிகிறது...

2. கௌஸ்தூபம்:

நாவலின் இரண்டாம் பகுதியான கௌஸ்தூபத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பது விஷ்ணுபுர ஞான சபையில் நடக்கும் தர்க்க விவாதங்கள் தான்...முதல் பகுதியை எளிமையாக வாசித்து முடித்திருந்தேன்...ஆனால் இந்த பகுதியில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த எத்தனையோ ஞானமரபுகளின் குருமார்கள் எல்லோரும் சேர்ந்து சர்ச்சை செய்து கொள்வதாக அமைத்திருக்கிறார் ஜெயமோகன்...இந்த ஞானசபையின் முடிவில் தான் விஷ்ணுபுரத்தின் அடுத்த தலைமைப் பீடத்தை வெற்றி கொள்ளப் போகும் ஞான மரபைத் தேர்ந்தடுப்பார்கள்...தர்க்கங்களில் பேசப்பட்ட சொல் பிரயோகங்கள் அரைகுறையாக தான் புரிந்த்து, அதனால் ஒரு நாளைக்கு 10 பக்கங்களைத் தாண்டி வாசிப்பது மிகவும் சிரமமாக இருந்தது...ஒரு நாவலுக்குள் இவ்வளவு தர்கங்களும், வாசகனைக் குழப்பும் விவாதங்களும் தேவை தானா என்கிற எண்ணம் எழாமல் இல்லை.

இந்த ஞானசபையின் முடிவில் நடக்கும் கிருஷ்ணபட்சி பரீட்சையில் வெற்றி பெற்று பௌத்த பிக்குவான அஜிதர் அடுத்த தலைமை ஸ்தானத்தை அடைகிறார்...அஜிதரின் வாதப் பிரதிவாதங்கள் அங்கே இருந்த வேதாந்திகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் பிடிக்கவில்லை...அதனால் பல சதியாலோசனைகளையும் செய்கிறார்கள், அவை அனைத்தையும் முறியடித்து பௌத்தம் விஷ்ணுபுரத்தின் தலைமை பீடத்தை அலங்கரிக்கிறது! 

3. மணிமுடி :

மகா அஜிதரின் ஆட்சியின் கீழ் விஷ்ணுபுரம் பௌத்தத்தின் ஒரு தலைநகராக விளங்குகிறது...அஜிதருக்கு முன்னர் பவதத்தரின் காலத்தில் வைணவ தலமாக இருக்கிறது...இந்த மூன்றாவது பகுதியான மணிமுடியில் விஷ்ணுபுரம் ஒரு சிதிலமடைந்த நகரமாக காட்சியளிக்கிறது...இந்த பகுதியில் தான் நகரம் பிரளையத்தில் மூழ்கி அழிகிறது...மணிமுடி பகுதியில் இங்கே குடியிருக்கும் பூர்வக் குடிகளான செம்பர் குல மக்களின் பெருமூப்பனின் சிலை தான் கருவறைக்குள் இருக்கும் விஷ்ணுவின் சிலை உருவகப்படுத்தப்படுகிறது...அவர் புறண்டு படுக்கும் காலம் தான் பிரளய காலமாக கருதப்படுகிறது...

மொத்தத்தில் விஷ்ணுபுரம் கனவில் உருவான ஒரு பிரம்மாண்ட நகரம்... ஜெயமோகன் முன்னுரையில் சொன்னது ஞாபகம் வருகிறது : "விஷ்ணுபுரம் ஒரு கனவு. கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அதே சமயம் கனவுகளில் முற்றிலும் இனியவை என்று ஏதுமில்லை. கனவுகள் நம்மை நமக்குக் காட்டுபவை. நம்மை நிலைகுலையச் செய்பவை. நாம் நமது தர்க்கபுத்தியால் எத்தனை தூரம் சென்றாலும் எவ்வளவு சுருக்கி வகைப்படுத்தினாலும் அளந்துவிட முடியாதவை."

பிகு. : ஜெயமோகனை புதிதாக வாசிக்க விரும்புகிறவர்கள் இந்த புத்தகத்தை தவிர்த்து வேறு படைப்புகளில் இருந்து ஆரம்பிக்கலாம்...

பதிப்பகம் - கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் - 827
விலை - 800

நூல் அறிமுகம் - தோழர் சோழன் - எஸ்.எஸ். சிவசங்கர்

#வாசிப்பு2020

14/2020

தோழர் சோழன் - எஸ்.எஸ்.சிவசங்கர்

1987ஆம் ஆண்டு வாக்கில் ஆண்டிமடம், அரியலூர், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த நக்சல் போராட்டக் குழுவின் நடவடிக்கைகளை வைத்து எழுதப்பட்ட புத்தகம் தோழர் சோழன்...உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அந்தந்த சம்பவங்களின் பத்திரிகை குறிப்புகளோடு கொடுத்திருக்கிறார்...

தனித் தமிழ்நாடு கோரிக்கைக்காக அரசின் கவனத்தை பெறுவதற்கு தோழர் தமிழரசன் தலைமையிலான நக்சல் குழு மருதையாற்று பாலத்தை தகர்ப்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது...

பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட சோழன்...ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இயக்கத்தின் மேடையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து தன்னை இணைத்துக் கொள்கிறான்...சமூகத்தில் நடக்கும் கொடுமைகள், காவல்துறையில் நடக்கும் அநியாயங்களையும் பார்க்கும் சோழன் கொத்தித்துப் போய் களம் இறங்குகிறான்! 

சிவசங்கர் கட்சி அரசியலில் இருந்தாலும் இயக்க அரசியலில் இருந்த ஒரு அமைப்பைப் பற்றி எழுதியிருப்பது, அரசியல் சார்ந்த இயக்கம் ஆட்சியில் எவ்வளவு தாக்கத்தையும், பிராந்திய ரீதியிலான பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்...

நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்திருந்தாலும் வரலாறு கூறுவது போல வறட்சியாக இல்லாமல், கதை சொல்லலை இலகுவாக செய்திருக்கிறார் ஆசிரியர்! 

பதிப்பகம் - கின்டில் பதிப்பு
பக்கங்கள் - 123
விலை - 50