Saturday, December 26, 2020

நூல் அறிமுகம் - மணல் பூத்த காடு - முஹம்மது யூசுஃப்

#வாசிப்பு2020

17/2020

மணல் பூத்த காடு - முஹம்மது யூசுஃப்

பயணம் மனித நாகரிகத்தின் வளர்ச்சியையும், அறிவையும் விரிவாக்கியது...தேவைகளின் நிமித்தமாகவும், நிலங்களின் பண்புகளை அறியவும் மனிதன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்படுகிறான்...அவன் பயணப்பட்டிருக்கவில்லை என்றால் இந்த அளவிற்கு நாகரிக வளர்ச்சியும், வாழ்வியல் மாற்றங்களும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாது போயிருக்கும்! 

ஒவ்வொரு பயணமும் நாம் சென்று காண்கின்ற இடங்களும் நமக்குள் இருக்கும் குழந்தைமையை வெளிக் கொண்டு வருபவை! பயணிப்பதைப் போலவே பயணித்து வந்தவர்களின் அனுபவப் பகிர்வும் மிகவும் சுவாரஸ்யமாணது...அதைப் போன்ற ஒரு வாழ்வனுபவம் தான் இந்த மணல் பூத்த காடு புதினம்!

தூத்துக்குடியிலிருந்து அரபு தேசமான சவூதி அரேபியாவின் ரியாத் நோக்கி வேலைக்காக பயணப்படும் அனீஸ் தான் கதையின் நாயகன்...பயணித்தது அனீஸ் என்றாலும் நாமும் அந்த பறத்தலின் ஊடாக ஒன்றிணைந்து விடுகிறோம்! 

அரேபிய தேசம் என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது வரண்ட பாலைவனமும், அந்நாட்டவர்களின் மேல் நமக்கு பதிந்திருக்கும் எதிர்மறை சிந்தனைகளும் தான்...ஆனால், இந்த புதினத்தில் சவுதியின் இன்னொரு அற்புதமான முகத்தையும், அவர் வடக்கும், தெற்கும், கிழக்கும், மேற்குமாக ஓடி ஓடி தான் ரசித்த ஒவ்வொரு இடங்களையும் தன் எழுத்துக்கள் மூலமாக வாசிப்பவர்களுக்குள் கடத்தியிருக்கிறார் அண்ணன் முஹம்மது யூசுஃப்! இதில் ஒரு கருவி மட்டுமே அனீஸ் கதாப்பாத்திரம்...

ஒவ்வொரு நாட்டிற்கும் அதனுடைய கலை, பண்பாடு, கலாச்சாரத்தின் அடிநாதம் இருக்கும் அது பயணிப்பவனின் கண்களுக்கு தன்னுடைய தரிசனத்தையும் மாண்புகளையும் திறந்து காட்டுகிறது...
ஊரில் இருந்த கடன் காரணமாக ரியாத்திற்கு பயோமெடிக்கல் எஞ்சினியர் வேலைக்கு வரும் அனீஸிற்கு அந்த நிலப்பரப்பின் குறுக்கும் நெடுக்கும் சென்று வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது...அவன் செல்லும் ஒவ்வொரு ஊரின் அருகில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்களையும், சிறப்பு வாய்ந்த ஊர்களையும் சுற்றிப் பார்க்கிறான்...

ஒரு பக்கம் அயல் வாழ்க்கை நிறைய பயணங்களையும் அனுபவங்களையும் தந்தாலும்...தனிமை உணர்வை போக்குபவர்கள் உடன் இருப்பவர்கள் தான் இல்லையா...அனீஸின் அறையில் உடன் தங்கியிருக்கும் இப்ராஹிம் பாய் மூலமாக அனீஸிற்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள்...அதில் முக்கியமாக ஷேக் பாய் வீட்டில் இருக்கும் ரவி, துடுக்காக பேசும் ராஜா, ஹாருன் என ஒரு நண்பர்கள் பட்டாளம் அமைகிறது...

இன்னொரு பக்கம் தோழப்பா, சரவணன் சார் என நல்ல அனுபவம் மிக்க, நல்ல மனிதர்களை சம்பாதிக்கிறான் அனீஸ்! சவுதி மண்ணின் வராலாற்றை தோழப்பா மூலம் அறிந்து கொள்ள முடிகிறது! பிரிட்டனும் பிற மேற்குலக நாடுகளும் சவுதியின் மீது தன்னுடைய ஆதிக்கத்தை எப்படி எல்லாம் நிலைநிறுத்த வேலைகளை செய்கின்றன...அதில் வஹாபிசத்தின் பங்குகள் என்ன என்பதை எல்லாம் ஒரு நல்ல ஆசிரியரின் பொறுமையோடு தோழப்பா எடுத்து கூறுகிறார்! 

முன்னுரையில் ஆசிரியர் கூறியது போல "இந்த எழுத்தை வாசித்து விட்டு சவூதி அரேபியாவுக்குச் செல்லும் வாய்ப்பை வேண்டாம் என மறுத்த, அந்த நாட்டைப் பற்றிய தவறான கருத்தை மனதில் வைத்திருந்த ஒருவன் அங்கு செல்லத் தயாரானால் நான் இதை எழுதியதன் பயன் அடைந்து விட்டதாய் கருவேன்." ஆம் நிச்சயம் நீங்கள் எழுதியதின் பயனை இந்த படைப்பு அடைந்து விட்டது! இனியும் இந்த படைப்பு நிறைய பேருக்கு சவூதியின் மேலான கண்ணோட்டத்தை மாற்றும் தகவல் களஞ்சியமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை! :)

பதிப்பகம் - யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் - 448
விலை - 500

Wednesday, December 2, 2020

நூல் அறிமுகம் - நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்

#வாசிப்பு2020

16/2020

நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்

இலங்கையில் 80 களில் நடந்த போரில் பங்கேற்ப்பதற்காக பயிற்சி பெற்ற இளம் பதின் வயது போராளிகளின் வாழ்வியலை விளக்குகிறது நஞ்சுண்டகாடு...அவர்களின் நஞ்சுண்டகாடு பயிற்சி முகாமில் நடக்கும் விசயங்களையும், இனியவன் மற்றும் சுகுமாறன் என்கிற இரண்டு போராளிகளுக்கு இடையில் ஏற்ப்படும் நட்பை முன்வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் குணா கவியழகன்...


பயிற்சி முகாமில் நடக்கும் சிறு சிறு சச்சரவுகள் அதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் பனிஷ்மெண்ட்டுகள் என கதை போனாலும்...அங்கிருக்கும் போராளிகளின் இடையே இருந்த ஒற்றுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சிறு சிறு பகடியான தருணங்களும் இல்லாமல் இல்லை...

அவர்கள் அனைவரும் பயிற்சி முடிந்து போர்களத்திற்கு போகும் போது வாசிக்கும் நமக்கும் அந்த பிரிவுணர்வு ஏற்ப்படுகிறது...அதன் பிறகாக நடக்கும் இனியவன், சுகுமாறன் சந்திப்புகளும்...சுகுமாறனின் குடும்ப நிலைமை போரின் குரூரத்தால் தாக்கப்பட்டு மிகவும் பரிதாபமான நிலையை அடைந்து துன்புருவதை சுகுமாறனின் அக்கா சொல்லும் போது  மனித வாழ்வின் துன்பியல் சக்கரம் இப்படி எல்லாம் ஒரு குடும்பத்தை அடிக்குமா என்கிற வேதனை எழுந்து ஒரு துளி கண்ணீர் துளிர்க்கிறது...அந்த இடத்தில் குணா அவரின் உணர்வுகளை வாசிப்பவரிடம் கடத்தி விடுகிறார்...

தமிழீழ போரில் பங்கேற்ற போராளிகளின் வாழ்வியலை அறிய விரும்புகிறவர்கள் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்...

பதிப்பகம் - கிண்டில் பதிப்பு
விலை - 99