இந்த புத்தகத்தை வாங்கி சுமார் இரண்டு ஆண்டுகள் இருக்கும்...அவ்வப்போது எடுத்து ஒரு பத்து பக்கங்கள் வாசித்துவிட்டு திரும்ப வைத்துவிடுவேன்... கடந்த ஆண்டு ஏதோ ஒரு வேகத்தில் யுவால் நோவா ஹராரியின் ஹோமோடியஸ் வாசித்து முடித்தேன்... ஹோமோடியஸ் நம்முடைய எதிர்கால உலகம் எப்படியெல்லாம் அமைய வாய்ப்பிருக்கிறது என்பதை ஆராய்ச்சி நோக்கிலும், தற்போதுள்ள தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை அனுமானம் செய்யும் ஒரு படைப்பு... அது ஏற்ப்படுத்திய தாகத்தால் இந்த சேப்பின்ஸ் புத்தகத்தை இந்தமுறை வாசித்தே தீருவது என்னும் முடிவில் 3 மாதங்களுக்கு முன் கையில் எடுத்தேன்...
பொதுவாகவே வரலாறு என்பது ஒரு வரட்சியான சப்ஜெக்ட், போர் அடிக்கும் என்பது போன்ற மனப் போக்கை வரலாற்று ஆசிரியரான ஹராரி உடைத்து விடுகிறார்...ஜெருசலேம் ஹிப்ரூ பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்...கூடவே இவர் "A Brief History of Humankind" என்கிற தலைப்பில் இணைய வகுப்புகளை நடத்தியுள்ளார்! மொத்தம் 62 காணொளிகளைக் கொண்ட இந்த இணைய வகுப்புகள் யூடியூப் இணையதளத்தில் காணக் கிடைக்கின்றன...
சுமார் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பிலிருந்து தோன்றிய பூமியில், 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஹோமோ பேரினத்தற்கும், சிம்பான்சிகளுக்கும் பொதுவான மூதாதையர்கள் தோன்றுகிறார்கள்... அன்றிலிருந்து நாம் இன்று வாழும் நவீன யுகம் வரைக்குமான ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்த புத்தகம் கொடுத்திருக்கிறது...அதுவும் சலிப்பு தட்டாத வண்ணம் நிறைய சுவாரஸ்யமான தகவல்களோடு!
பூமியின் வரலாற்று காலக்கோட்டினை நான்கு பகுதிகளாக பிரித்திருக்கிறார் ஹராரி அவை
1. அறிவுப் புரட்சி
2. வேளாண் புரட்சி
3. மனிதகுல ஒருங்கிணைப்பு பெருமளவில் நடந்த காலகட்டம்
4. இறுதியாக தற்போதைய அறிவியல் புரட்சி யுகம்
1.அறிவுப் புரட்சி
வரலாறு தோன்றுவதற்கு நெடுங்காலம் முன்னரே மனித இனத்தைப் போன்ற விலங்குகள் சுமார் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதலில் தோன்றின... மனித குலத்தின் தொட்டில் என கூறப்படும் ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குப் பகுதியில் முதன் முதலில் மனிதனை ஒத்த உயிரினங்கள் தோன்றியதாக கூறுகிறார்...
நம்முடைய இனமான ஹோமோ ( மனிதன்) சேப்பியன்ஸ் (அறிவார்ந்தவன்) மட்டுமல்லாது பூமியில் இன்னும் பல்வேறு மனித இனங்களும் வாழ்ந்து வந்தன அவற்றுள் முக்கியமானவைகளாக ஹோமோ நியான்டர்தாலென்சிஸ் (நியாண்டர் பள்ளத்தாக்கை சேர்ந்த மனிதன்), ஹோமோ எரெக்டஸ் (நிமிர்ந்த மனிதன்), ஹோமோ சோலோஎன்சிஸ் (இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சோலோ பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள்), அடுத்தது கடல் மட்டம் தாழ்வாக இருந்த காலகட்டத்தில் உருவான ஒரு குள்ள மனித இனமான ஹோமோ ஃபுளோரெசியென்சிஸ் அதிகபட்சமாக ஒரு மீட்டர் உயரம் கொண்டவர்களாகவும், 25 கிலோ எடைக்கும் குறைவானவர்களாகவும் இருந்திருக்கின்றனர்...
சேப்பியன்ஸ் கிழக்கு ஆப்பிரிக்காவில் உருவாகி சுமார் 70000 ஆண்டுகளுக்கு முன்பாக புவி முழுவதும் பரவத் தொடங்கினர்...அப்படி அவர்களின் பரவலின் போது இன்னொரு மனித இனமான நியண்டர்தால் இனத்தவர்களை எதிர் கொள்கின்றனர்... அப்போது அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல்போகவே பின்வாங்கி விடுகின்றனர்... இரண்டாம் ஆக்கிரமிப்பின் போது சேப்பியன்ஸ் இனம், நியண்டர்தால் மட்டுமல்லாது மற்ற அனைத்து இனங்களையும் அழித் தொழிக்கும் வேலையில் வெற்றி பெருகின்றர்...
சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்புவரையிலான காலகட்டத்தில் படகுகள், எண்ணெய், விளக்குகள், வில் அம்புகள், ஊசிகள் (கதகதப்பான ஆடைகளத் தைப்பதற்கு இன்றியமையாதவை) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன... இவைகளின் துணை கொண்டு சேப்பியன்ஸ் இனம் மற்ற இனங்களை வெற்றி கொண்டு உலகத்திலிருந்து அகற்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்...
இந்த காலகட்டத்தில் முளைத்தப் புதிய சிந்தனை வழிகளும் கருத்துப் பரிமாற்ற வழிகளும் தான் அறிவுப்புரட்சயாகும். மரபுச் சிதைவுகளின் காரணமாக இந்த சிந்தனை மாற்றமும்,கருத்துப் பறிமாற்ற வழிகளும் மனித இடத்திற்குத் தோன்றியிருக்கலாம் எனக் கூறுகிறார்.இதுவும் முதல் மொழியல்ல...எல்லா விலங்கினங்களும் அதற்கே உரித்தான மொழிகளில் எச்சரிக்கை சமிக்கைகளை பகிர்ந்து கொள்கிறது... அதாவது ஒரு குரங்கினால் "எச்சரிக்கை, ஒரு சிங்கம் வருகிறது" என்பதை ஒரு வித ஒளி அமைப்பின் மூலமாக வெளிப்படுத்த முடியும்... ஆனால், மனிதனால் ஆற்றின் வளைவின் அருகில் ஒரு சிங்கம் ஒரு காட்டெருமைக் கூட்டத்தைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததை இன்று காலையில் பார்த்தாக ஒரு நவீன மனிதனால் தன் நண்பர்களிடம் கூற முடியும். பிறகு, துல்லியமாக அது எந்த இடம் என்பதையும், அதற்கு செல்லக்கூடிய பாதைகளைப் பற்றியும் கூறமுடியும்...
இவ்வாறாக எப்படி மொழி உருவானது என்பதையும், அதன் ஒவ்வொரு கட்டங்களும் மனித தேவைகளின் பொருட்டு எப்படி எழுத்துருக்கள் பெற்றன என்பதை முதல் பகுதியில் அற்புதமாக விளக்கியிருக்கிறார் ஹராரி!
2. வேளாண் புரட்சி
பல்லாயிரம் ஆண்டுகளாக நாடோடியாக, வேட்டையாடி இனமாக உலகைச் சுற்றித் திரிந்த சேப்பியன்ஸ் இனம், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்மையின் கண்டுபிடிப்பால் அதன் அலைச்சல் ஒரு முடிவுக்கு வந்தது... ஒருசில விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்களைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தெரிந்து கொண்ட மனிதன் தனது நேரம் மற்றும் முயற்சி முழுவதையும் அதற்கு செலவிட்டனர்...
சூரியன் காலையில் தோன்றி மாலையில் மறையும் வரை அவர்கள் விதைகளை விதைத்தனர், தாவரங்களுக்கு நீர் பாய்ச்சினர், நிலத்திலிருந்து களைகளைப் பறித்தனர், செழிப்பான புல்வெளிகளுக்கு செம்மறி ஆட்டுக் கூட்டங்களை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றனர். இந்த வேலைகள் தங்களுக்கு அதிகமான கனிகளையும், தானியங்களையும், இறைச்சியையும் கொடுக்கும் என அவர்கள் நினைத்தனர். மனிதர்களின் வாழ்கைமுறையில் ஏற்பட்ட ஒரு புரட்சி அது. அது வேளாண் புரட்சி என்று அழைக்கப்படுகிறது.
தென்கிழக்காசிய துருக்கி, மேற்கு ஈரான், லெவான்ட் ஆகிய பகுதிகளின் பசும்புல்வெளி நிலங்களில் கி.மு. 9500 - 8500 வாக்கில் மனிதர்களின் கவனம் வேளாண்மையை நோக்கித் திரும்பியதாக ஆசிரியர் கூறுகிறார்... இந்த மாற்றங்கள் எல்லாம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை...எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியக் கிழக்கை அடைந்த ஹோமோ பேரினம் அடுத்த ஐம்பதாயிரம் ஆண்டுகளை விவசாயம் இல்லாமல் அதன் இயல்பிலேயே வாழ்ந்து வந்தது...
நாடோடியாக இருந்த மனிதனால் ஒருசில செழிப்பான காலகட்டத்தில் பெருகிய மக்கள் தொகையில் இருந்த குழந்தைகளையும், முதியவர்களையும் தூக்கிச் சும்ப்பது பெரும் சுமையாக இருந்திருக்கிறது... குறிப்பிட்ட பனி யுகத்திற்கு பிறகாக கிடைத்த செழிப்பான கோதுமை தானிய வளர்ச்சி அவர்களை குறிப்பிட்ட பகுதிகளில் தங்க வைத்து விடுகிறது... அந்த தானியங்களை வைத்திருக்க கிடங்குகள், கொள்கலன்களுக்கு எடுத்துச் செல்லும் வழியில் சிதறிய தானியங்கள் முளை விட்ட போது விவசாயம் என்னும் செயல்முறை மனித இனத்தின் மூளைக்கு கிட்டியதாக கூறுகிறார்.
மக்கள் நிரந்தரமான கிராமங்களுக்குக் குடியேறியதையும் அவர்களுக்கு உணவு அபரிமிதமாக கிடைத்ததன் பயனாக மக்கள் தொகை அதிகரித்தது... நாடோடி வாழ்க்கையை கைவிட்டதின் விளைவாக பெண்கள் ஒவ்ஙொரு ஆண்டும் குழந்தைகளை கருவில் சுமக்க வேண்டி போனது...அதனால் விரைவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் நிறுத்தப்பட்டு கூழும் கஞ்சியும் கொடுக்கப்படுகிறது...
இப்படியாக ஒரு உடைமை சமூகம் உருவாகி அது வசதியாக வாழ்வதற்காக மனித இனம் நிறைய பாரங்களை சுமக்க வேண்டியதாக இருந்தது... வேட்டையாடி மனிதனை விட ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் காலை முதல் இரவு வரை உழைக்க வேண்டியதாக ஆகியது... ஆக, மனித இனம் ஒரு இடத்தில் தங்கியிருந்து ஆடம்பர வாழ்கை வாழ அதிக சிரமங்களை சந்திக்க வேண்டியதாகிப் போனதாக கூறுகிறார்...சுதந்திரமாக சுற்றித் திரிந்த மனிதன் விவசாயத்தின் கண்டுபிடிப்பால் அவனுக்கு அவனே ஆப்பின் மேல் உக்கார்ந்து கொண்டான் என்றே கூறலாம்...
3. மனித குல ஒருங்கிணைப்பு
வேட்டையாடி குழுவாக இருந்த வரைக்கும் சேப்பியன்ஸ் சில நூறு எண்ணிக்கையினால் ஆன குழுக்களாக இருந்து வந்த காலகட்டத்தில் அவர்கள் வேட்டையாடி சேகரிக்கும் உணவு, கனிகளை ஒரு பொதுப்படையான கம்யூனாக இருந்து பகிர்ந்து கொண்டனர்... ஆனால் நிறைய சமயங்களில் அவர்களுக்குள் பூசல்களும், உடலியல் தேவைகளின் காரணமாக பெண்களை கவர்வதற்காக சண்டைளும் அதிகமாக நடைபெற்றன...இப்படி இருந்த சமூக குழுக்களுக்குள் அவ்வதுப்போது ஒருங்கிணைப்பு குலைந்து போவது சாதாரணமான விசயமாக இருந்து வந்துள்ளது...
வேளாண் புரட்சி தொடர் வேலைப்பளுவையும், நிலையில்லாத்தன்மையை கொண்டுவந்திருந்தாலும் அதனால் மனித இனம் நிறைய அனுகூலங்களை பெற்றது... விவசாயம் செய்யும் சமூகம் முதலில் ஒரு நிலையான இடத்தில் தங்கி தங்களுக்குத் தேவையான வளவசதிகள் எல்லாம் அந்த இடத்தில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய கற்றுக் கொண்டன...பிறகு அவர்களுக்குத் தேவையான உறைவிட வசதிகளை பெருக்குவதையும், கிராமங்களை உருவாக்குவதற்கான திட்டங்களையும் தீட்டத் தொடங்கின...இதில் மனித ஒத்துழைப்பு மிகவும் பிரதானமான ஒன்றாக இருந்தது!
இதன் தொடர்ச்சியாக கலாச்சாரங்கள் தோன்றின ஒவ்வொரு கலாச்சாரங்களிலும் ஒத்துழைப்பை பெருக்குவதற்கு தேவையான கட்டுக்கதைகளை மக்களிடையே பரவத் தொடங்கின...உதாரணத்திற்கு கடவுள், பணம், அரசு ஆகிய கற்பனையான விஷயங்கள் மனிதர்களுக்கு நம்ப வைக்கப்பட்டது...இதன் மூலம் மனிதர்களை சிறப்பாக ஒரங்கிணைக்க முடிந்தது... இந்த ஒருங்கணைப்பு மற்ற விலங்குகளிலிருந்து மனிதனை முற்றிலும் வேறான ஒரு பெரும் வாழ்வியல் விலங்கு கூட்டமாக மாற்றியமைத்தது... முக்கியமாக பணத்தின் அறிமுகம் மனிதனின் வாழ்கையை மொத்தமாக புரட்டி போட்டது!
4. அறிவியல் புரட்சி
மனித இனம் தோன்றி கோடிக் கணக்கான ஆண்டுகள் ஓடியிருந்தாலும் அறிவியல் புரட்சி கடந்த 500 ஆண்டுகளாக மட்டுமே நகிழ்ந்த/நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றாகும்! எல்லாம் அறிந்தவன் (சேப்பியன்ஸ்) என்று மனிதகுலம் தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்டாலும் அவர்களின் அறிவியல் குறித்த பிரக்ஞையை மனிதர்கள் தங்களுக்கு அறியாமை இருக்கிறது, இன்னமும் மனித இனம் நிறைய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற ஒரு எண்ணத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது என கூறுகிறார் ஹராரி!
ஒருகாலத்தில் பேரரசுகள் நாடுகளை போரின் மூலம் ஆக்கிரமிப்பு செய்வதற்காக மேற் கொள்ளப்பட கடற்பயணங்களில் இருந்து அறிவியல் புரட்சி யுகம் தொடங்குகிறது! அதன் நீட்சி தான் இப்போது உலகத்தை தவிர வேறு ஏதாவது கிரகத்தில் மனித இனத்தை நிலை கொள்ள வைக்க முடியுமா என்பது வரை சென்றிருக்கிறது... இந்த அறிவியல் புரட்சி யுகத்தில் தான் மனிதன் நல்ல சுகாதாரத்துடனும், பசியின்றியும் வாழ வழிவகை செய்யப்பட்டது என்பதை ஆசிரியர் நிறைய உதாரணங்கள் மற்றும் கணிப்புகளின் மூலம் விளக்குகிறார்...
உலகம் முழுவதும் பல்வேறு கடவுள்/இயற்கை சார்ந்த நிறைய மதங்கள் இருந்த போதிலும், அறிவியல் புரட்சிக்கு பிறகு பிறந்த மதங்களாக கம்யூனிசம், தாராளவாதம், முதலாளித்துவம் ஆகியவற்றையும் மதங்களாகவே வகைபடுத்துகிறார்...
அறிவியல் புரட்சியை தொடர்ந்து நடக்கும் தொழிற் புரட்சி மக்களின் தேவைகளையும், சமூக அடுக்குகளிலும் பல்வேறு மாற்றங்களை எப்படி நகிழ்த்தியது என்பதை நிறைய உதாரணங்களை கொடுக்கிறார்... நவீன தொழிற் சந்தைகளின் தோற்றதையும், பொருளாதாரத்தின் அடிப்படைகளையும், கடன் என்கிற ஒரு கருவி உலக நாடுகளின் முன்னேற்றத்தில் என்ன விதமான தாக்கத்தை கொடுத்தது என்பதையும் விரிவாக விளக்கியுள்ளார்!
இறுதியாக விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதனின் அடுத்தகட்ட பாய்ச்சலாக கடவுள் என்கிற நிலைக்கு அதிமனித இனத்தை உருவாக்குவதன் மூலம் முதலாளித்துவம் இப்போதிருக்கும் மனிதனை அடக்கியாள ஒரு சக்திவாய்ந்த மேட்டுக்குடியை உருவாக்கும் கில்கமெஷ் பணித்திட்டத்தை பற்றிய விவரங்களை இறுதி அத்தியாயங்கள் விளக்குகின்றன!
மனித இனத்தைப் பற்றிய பருந்துப் பார்வையை இந்த புத்தகம் நிச்சயமாக கொடுக்கும்! அனைவரும் வாசிக்க வேண்டிய தவற விடக்கூடாத புத்தகம் சேப்பியன்ஸ்!
No comments:
Post a Comment