Sunday, September 24, 2017

ஆணும், பெண்ணும் சில உறவுச் சிக்கல்களும்

நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழி ஒரு வர் அழைத்திருந்தார். அயர்ச்சியான குரலாய் இருக்க "என்ன மச்சி ஆச்சு?" எனக் கேட்டேன். அவர் காதலித்துக்கு கொண்டிருந்தார் அவருடைய இணை கூறிய விசயத்தை எல்லாம் செய்து கொண்டேயிருந்திருக்கிறார்...

உதாரணமாக ஆண் நண்பர்களுடன் பேசாதே, வெளியே என்னுடைய அனுமதியுடன் தான் போக வேண்டும்...நான் கூறுகின்ற வேலைக்குத் தான் நீ போக வேண்டும்... உனக்கு இது தெரியாது அது தெரியாது நான் சொல்லுவதைத் தான் செய்ய வேண்டும். இறுதியாக இனிமேல் நீ எதையும் எழுதக் கூடாது படிக்கக் கூடாது என முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார் தோழியின் காதலர்...

இதில் நீ இனிமே படிக்கக் கூடாது, எழுதக் கூடாது என கூறுவதெல்லாம் தீவர தாழ்வு மனப்பான்மையின் உச்சம்! "நான் படிக்குறதில்ல, அதனால நீயும் படிக்கக் கூடாது. ஏன்னா என்னைய விட ஒரு விசயத்த நீ அதிகமா தெரிஞ்சுக்கிட்டா என்னோட பேச்ச நீ கேக்க மாட்டல்ல" என்னும் மனப்பான்மையின் வெளிப்பாடு! இந்த மாதிரியான மனப்பான்மை ஒருசில எழுத்தாளர்களுக்கே இருக்கிறது.

இத்தனையும் சொன்னது ஒரு படிக்காத கிரமாத்து ஆளாக இருந்தாலும் பரவாயில்லை. அவரும் படித்த ஆசாமி தான், ஒரு நிறுவனத்தின் மனிதவளத் துறையில் பணி புரியும் நபர்...ஆக நாம் படித்த படிப்பு இப்படி எல்லாம் தான் நம்மை பிற்போக்காக சிந்திக்க வைத்துள்ளதா அல்லது நம்மிடம் உள்ள பிற்போக்கான எண்ணங்களையும், செயல்களையும் போற்றிப் பாதுகாப்பதற்கான சூழலைத் தான் ஏற்படுத்திக் கொடுக்கிறதா என்னும் பெரிய கேள்விக் குறி எழாமல் இல்லை...

ஆண் பெண் உறவுவில் 100/75 இப்படியான கட்டுப்பாட்டுடன் தான் தினமும் நகர்த்தப்படுகிறுது! அதாவுது தன்னை காதலிக்கும் / திருமணம் முடித்த பெண்ணிற்கு ஒரு அழகான பொற் கூண்டினைத் தான் இன்றைய ஆண்கள் பெரும்பாலும் கொடுக்க நினைக்கிறார்கள்! இந்த மாதிரியான நிலையை மாற்றுவதற்கு பெண்ணும் நம்மைப் போன்ற ஒரு சமமான உயிர் தான் இவளுக்கும் நம்மைப் போலவே எல்லா உணர்வுகளும் இருக்கின்றன என்பதை ஆண்கள் தெளிவுற வேண்டும்...

நீங்கள் இந்த மாதிரியான அடக்குமுறைகளை ஒரு பெண்ணின் மீது கையாளும் போதெல்லாம் ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள்.
பெண்ணோடு திறந்த மனதுடன் அமர்ந்து அவளுடைய கனவுகளையும், இலட்சியங்களையும் கொஞ்சமேனும் கேளுங்கள்...

அவர்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள உதவ முடியாவிட்டாலும் தடையாக இருக்காதீர்கள்! ஏனென்றால் பெண் என்பவள் ஒரு ஜடப்பொருள் அல்ல நீங்கள் உங்களுடைய உடைமையாக நினைத்து அடக்கி ஆட்சி செயவதற்கு! அவளும் ரத்தமும், சதையும், நரம்பும் நிறைந்த நம்மைப் போலவே 6 அறிவும் நிறைந்த ஒரு உணர்வுள்ள ஜீவன் தான் என்பதை மனதில் நிறுத்தினாலே போதும் உறவுப் பிரச்சனைகளில் இருந்து வெளியே வரலாம்...

இதே மாதிரியான கண்ணோட்டத்தை ஒரு பெண்ணும் கொண்டிருக்க வேண்டும்...அப்போது தான் அந்த இணை ஆண்-பெண் சமத்துவ சமூதாயத்தின் அங்கத்தினர் என்கின்ற நிலையை எய்த முடியும்!

- கேசவராஜ் ரங்கநாதன்
24-09-2017

Wednesday, July 19, 2017

நூல் அறிமுகம் - மிளிர் கல் - இரா.முருகவேள்

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படியாக கொண்டு ஆவணப்படம் எடுப்பதற்காக டெல்லியில் இருந்து கிளம்பி தமிழகத்திற்கு வரும் முல்லையும், சென்னையில் அவளுடன் இணையும் அவளுடைய கல்லூரியில் படித்த கம்யூனிச தோழனான நவீனும், இடையில் சந்திக்கும் பேராசிரியர் ஸ்ரீகுமாரும் தான் நாவலின் முக்கியமான கதை மாந்தர்கள்.

பயணத்தை சென்னையில் இருந்து ஆரம்பித்து பூம்புகாரில் வாழ்ந்த கண்ணகியின் வாழ்க்கையை பற்றிய செய்தியை சேகரிப்பதற்கான பயணத்தை மேற்கொள்கிறார்கள் முல்லையும், நவீனும். ஏதேதோ கற்பனைகளுடன் புகாரை அனுகிய முல்லைக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது!

கண்ணகி தங்கியிருந்த எழுநிலை மாடத்தையும், ஏனைய முக்கியமான இடங்களையும் நினைவுகளில் அசை போட்டுக் கொண்டு வந்தவளுக்கு இப்போது இருக்கும் புகாரின் கலர் கலரான கட்டிடங்களும் பழமை மறந்த இடங்களும் வெறுப்பை உண்டாக்கி விடுகின்றது. ஒரு கட்டத்தில் முல்லை இது வேண்டாம் நாம் திரும்பி விடலாம் என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறாள்.

அந்த ஒரு சூழலில் தான் பேராசிரியர் ஸ்ரீகுமாரை அவர்கள் சந்திக்கிறார்கள். அவர் கூறுகின்ற வராலற்றுத் தவகல்களால் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. இதற்கிடையில் ரத்தினக் கற்களை பற்றி நாம் அறியாத பல விசயங்களை ஆசிரியர் விளக்குகிறார். அந்த ஆராய்ச்சிக்காக தான் ஸ்ரீகுமார் ஒரு பெரு நிறுவனத்தின் சார்பாக ஸ்பான்சர் செய்யப்பட்டு வந்திப்பது அவரின் கடத்தலிற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் தெரிய வருகிறது!

நாம் இன்று ப்ரிஷியஸ் ஸ்டோன்ஸ் என்று நகைகளில் பதித்து அணிந்து கொள்ளும் வைரகளின் பின்னும், வைடூரியங்களின் பின்னும், இன்னபிற கற்களின் பின்னும் எப்பேர்ப்பட்ட பெருமுதலைகளும், கார்ப்பரேட் வலைப்பின்னலும் சூழ்ந்து கொண்டிருக்கிறது என நிறைய செயதிகளைக் கொட்டியிருக்கிறார். அதே போல சமகால நிகழ்வுகளான மீத்தேன் பற்றியும், விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றியும், நியூட்ரினோ பற்றியும் ஆங்காங்கே அடிக் கோடிட்டு காட்டியிருக்கிறார்!

கடத்தப்பட்ட இடத்திலிருந்து ஸ்ரீகுமார் விடுதலையாகி வந்த பிறகு கண்ணகி சென்ற பாதையை நோக்கிப் பயணம் ஆரம்பிக்கிறது...இடைஇடையே வரும் சிலப்பதிகார விளக்கங்களும் வழிநெடுக அவர்கள் ஆங்காங்கே கண்டடையும் சிலம்பு சார்ந்த இடங்களும் ஆசிரியர் அதை விவரித்த விதமும் நம்மையும் அந்த பயணத்தின் ஒரு பகுதியாகவே உடன் பயணிக்க வைத்திருக்க்கிறது!

பூம்புகாரில் ஆரம்பித்து, கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகளும் பயணித்த அந்த 1800 வருடத்திற்கு முந்திய பெருவழியின் சித்திரம் சற்றே ஒருகனம் கண்முன் வந்து செல்வது நிச்சயம்! கதை நெடுக ரத்தினக் கற்களைப் பற்றிய நிறைய தரவுகள், வலாற்றினைப் பற்றியும், பழந்தமிழரின் வாழ்வியல் குறித்தும், அந்தந்த இடங்களில் இருந்த பழங்குடியினங்களின் வாழ்வியல் குறித்தும் நிறைய விசயங்களை ஸ்ரீகுமார் மூலமாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது! அதே நேரம் சில இடங்களில் ஓவர் டோஸாகவும் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது...அதனால் சில இடங்களில் அயர்ச்சியும் பீடிக்கிறது...

கதை பூம்புகாரில் ஆரம்பித்து மதுரை வழியாக கம்பம் பள்ளத்தாக்கின் வழியாக குமுளி மேல் ஏறி கண்ணகி கோயிலில் இருந்து கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் கொடுங்கல்லூரில் ஒரு சிலிர்ப்புடன் முடிவடைகிறது...

இந்த நாவலை படித்ததும் இதை எழுதுவதற்கு ஆசிரியர் எத்தனை ஆய்வுகள், எத்தனை புத்தகங்களை புரட்டி குறிப்புகள் எடுத்திருப்பார்! என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது!

மளிர் கல்
ஆசிரியர் : இரா.முருகவேள்,
பதிப்பகம் : பொன்னுலகம் பதிப்பகம்,
விலை : ₹200

Sunday, April 10, 2016

ஊருக்கு கிளம்பிய கதை...

நாம ஊருக்கு போறதென்னவோ 3 மாசத்துக்கு ஒரு தரம் தான் அதனால பயண அனுபவங்களை குட்டிக் கதையா எழுதிடலாம் னு முடிவு பண்ணிட்டேன்...கதை புடிக்கல னா என்னைய ஆரும் கைத, கசுமாலம் திட்டப்பிடாது! ஆமா சொல்லிப்புட்டேன் :P

இனி கதைக்கு வருவோம்...

நாங்க இருக்குறது வேளச்சேரி ஏரியா னு தான் பேரு ஆனா விஜய நகர் பஸ் ஸ்டாண்டுல இருந்து பத்தாயிரம் மைல் பயணம் பண்ணினா தான் எங்க ரூமை அடைய முடியும்!!! எங்க போனாலும் நடராஜா சர்வீஸ் தான் எனக்கு...ஆபிஸ்ல இருந்து விஜய நகர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இறங்கினதும் பிரவீனுக்கு போன் அடிச்சேன்...வழக்கம் போல போன எடுத்து கினத்துக்குள்ள இருந்து பேசுற தொனியில அவனோட ஓட்ட போன்ல இருந்து கத்தினான் :P அவனும் சொன்னான் மச்சி நான் அடையார் பேக்கரி பக்கத்துல நிக்குறேன் வந்துடு னு...சரி னு கிளம்பி ரூம் போய் குளிச்சுட்டு சாப்டுட்டு கிளம்பி பஸ் நிலையத்துக்கு வந்தா திருவாரூர் தேர் திருவிழா மாதிரி கூட்டம்!!! அப்படியே பிரவீன் என்னைய பாத்து ஒரு மொறை மொறச்சான்...ஏன்னா அவன் வழக்கமா ட்ரைன் ல போற பேர்வழி...சரி ஏசி பஸ்ல போலாம் னு சொல்லி ஆசுவாசப் படுத்தினேன்....

நின்னு பாத்தோம் பஸ் வர்ர மாதிரி தெரியல...அப்படியே பஸ் ஸ்டாண்டுலயே எதையோ பறிகுடுத்த மாதிரி நடத்துட்டு இருந்தோம்...ஷெட்டுக்கு வெளிய சேர் ஆட்டோ காரன் கூவிக்கிட்டு இருந்தான்!!! மச்சி ஆட்டோ இருக்கு போலாமா னு கேட்டேன்...அவனும் என்னோட பகீரதப் ப்ரயர்த்தனம் பண்ண தயாரானான்...

ஆட்டோவுக்கு உள்ள கானா பாலா தன்னோட கர கர குரல்ல 'டோன்ட் வொரி டோன்ட் வொரி பீ ஹாப்பி 'னு கத்திக்கிட்டு இருந்தார்...

இப்படியாக நாங்கள் இருவரும் ஆட்டோவில் ஏறி உக்கார்ந்தோம்...கொஞ்ச நேரத்தில் ஆட்டோ நிரம்ப ஆட்டோ ஓட்டிய பையன் இரண்டு பேரை தடாலடியாக கூட்டி வந்து பின்னால் லக்கேஜ் வைக்கும் இடத்தில் சுருக்கி அமர வைத்து அவர்கள் நகர முடியாதவாறு பின் கதவை 'டமார்' என மூடிவிட்டு சொன்னான் 'கொஞ்சம் அச்சஸ் பண்ணிக்குங்கணே 20 மினிட்ஸ் ல கோயம்பேடு கொண்டு போய் இறக்கி விடுறேன்' என சொல்லி இருக்கையில் உக்கார்ந்தான்...

சர சரவென வண்டி நகர்ந்தது...கூடவே சென்னைக்கே உரித்தான குத்துப் பாடல்களும், கானாப் பாடல்களும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன காதைக் கிழிக்கும் இரைச்சலுடன்!! குறுகி உக்கார்ந்து இருப்பது ஒரு பக்கம் ,ஆட்டோ பையனின் கானா பற்று ஒரு பக்கம் என பின்னால் உக்கார்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேந்தப் பேந்த முளித்துக் கொண்டே வந்தனர்...

தட தட வென ஓடிய வண்டி உதயம் தியேட்டர் சிக்னலில் 5 நிமிடம் நின்றது...பின்னால் இருந்தவர் பொறுமை இழந்து திட்ட ஆரம்பித்தார்  ஆட்டோகாரங்களுக்கு திமிரு ஆதிமாகிருச்சு எடுயா வண்டிய என்று பின்பு வண்டி மெதுவாக அசோக் நகர், கே கே நகர் வழியாக ஒரு வழியாய் வடபழநி சிக்கனலை எட்டியது...

அதற்குள் கேட்ட நான்கு பாட்டையே ஒரு நாலு தரமாவது திரும்ப கேட்டிருப்போம்!! பிரவீன் எனக்கு எதிரில் விழி பிதுங்கியவாறு உக்கார்த்து இருந்தான்... அவன் கண்ணில் கொலைவெறி மின்னியது...ஒரு வழியாக கோயம்பேடு வந்தடைந்தோம்...

கோயம்பேடு வந்து இறங்கியதும் பேருந்து நிலையத்திற்கு உள்ளே போகப் போக கூட்டம் கும்மியடித்தது!!! பிரவீன் வழக்கம் போல என்னை கரித்துக் கொட்டிக் கொண்டே வந்தான்...உள்ளே போனதும் பேவில் இல்லாது ஓரமாக நின்று இருந்த சேலம் போகும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்...

சிறிது நேரத்திற்குப் பிறகு பேருந்து பேயில் போய் நின்றது...சிறிது நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிரவீனுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தார் நாங்கள் அமர்ந்தது 3பேர் அமரும் இருக்கை அதில் முறையே ஜன்னலொர சீட்டில் நானும் என்னருகில் என் டளபதியும் அடுத்து மூன்றாம் நபரும் இருந்தோம்...

சிறிது நேரத்தில் பேருந்து நகர ஆரம்பித்து அரை மணி நேரத்தில் மெயின் ரோட்டை எட்டியது...எங்களுக்கு ஓரே சந்தோசம் ஏனெனில் வழக்கமாக பேருந்து மெயின் ரோடிற்கு வரவே ஒன்றரை மணி நேரம் பிடிக்கும்!!! மெதுவாக பக்கத்தில் அமர்ந்து இருந்த மூன்றாம் நபர் பிரவீனிடம் பேச்சு கொடுதார்...

பேருந்து தாம்பரத்தை நோக்கிய வழித்தடத்தில் ஓடத் துவங்கியது...நானும் நரம்பனும் (பிரவீன்) இது அவனோட செல்லப் பேரு...பிசினஸ் பத்தின விசயங்களைப் பேசிக் கொண்டு இருந்தோம்...அதுமுடிய அடுத்தது கார்ப்பரேட் கம்பெனிகளின் அரசியல் மற்றும் அதனால் ஊழியர்கள் அடையும் பாதிப்புகளை பற்றியும் விவாதம் திரும்பியது...அப்போது தான் அருகில் இருந்த மூன்றாம் ஆசாமி உள்ளே நுழைந்தார்....

அப்படியே அந்த விவாதம் அரசியல், பெரியாரியம்,.சித்தர் பாடல்கள், தத்துவம், உலக அரசியல் என நானும் அந்த மூன்றாம் நபரும் பேசிக்கொண்டு இருந்தோம் எங்கள் வாயையே பாத்த மாதிரி நரம்பன் நடுவில் மூர்ச்சையற்று உக்கார்ந்து இருந்தான்! :P

இறுதியாக மோடியைப் பற்றி பேச்சை எடுக்கும் போது தான் பயபுள்ள வாயத் தொறந்துச்சு...
அதேபோல அந்த நபர் சொன்னார் என்ன இருந்தாலும் ராஜிவ் காந்தியை புலிகள் கொண்று இருக்கக் கூடாது என்றார்...நான் திரும்ப கேட்டேன் 'இலங்கைக்கு ராஜிவ் அரசு எதற்காக ரானுவ ஒத்துழைப்பு கொடுத்தது? அப்படியே அவர்கள் ராஜிவை கொன்றதால் ஏன் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் நடந்த இனப் படுகொலையை 140000 பேரை ஏன் மத்திய மன்மோகன் அரசு கண்டுகொள்ளவில்லை?'
இதற்கு அவர் நீங்கள் கூறியது சரிதான் என ஆமோதித்தார்...

இந்த விசயங்களைப் பேசிக் கொண்டு இருக்கும் போது ஏன்றோ ஒருநாள் ஊருக்கு பயணித்துக் கொண்டிருக்கும் போது என் அருகில் பயணித்த இலங்கையிலிருந்து வந்து அகதியாக வாழ்ந்த ஒரு நண்பரின் சோகமும், கண்ணீரும் என்னைத் தொற்றிக் கொண்டது...

ஒரு வழியாக வண்டி வழக்கம் போல விக்கிரவாண்டி டீக்கடையில் நின்றது...இங்கு ஒரு டிபன் சாப்பிட சொத்தை வித்துட்டுதான் போகனும்!!! :P நாங்கள் ரெஸ்ட் ரூம் போய்விட்டு வருவதற்குள் அந்த மூன்றாம் நபர் எங்களைத் தேடிக் கண்டுபிடித்து 'டீ சாப்டறீங்களா, காபி சாப்டறீங்களா என கட்டாயப் படுத்தி என் கையில் ஒரு காப்பியைத் தினித்தார்...சரி என்று காப்பியைக் குடித்து விட்டு பஸில் ஏறி உக்கார்ந்தோம்...எல்லாரும் பேசிப் பேசி செம டயர்டு...

அதோடு நாங்கள் பேசுவதைப் பொருக்காமல் கோ பாசஞ்சர்கள் கொலை வெறியுடன் மொறைக்க ஆரம்பித்ததால் பேச்சை அப்படியே மூட்டைக் கட்டி வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தோம்...காலையில பஸ் சேலம் புதிய பஸ் நிலையத்தை அடைந்தது கூட வந்த அந்த நபர் அவர் பெயர் தேவ் ஆனந்த் அவரை ஈரோடு பஸில் ஏற்றிவிட்டு நாங்கள் நகர்ந்தோம்...

ஒவ்வொரு பயணமும் நமக்கு புதிதாக முகம் தெரியாத புதிய நட்புகளை கன நேரத்தில் கோர்த்து விட்டுவிடுகிறது !! எத்தனையோ காதலையும், கவலையை, நம்பிக்கையை, புதிய  பாதையை, புதிய விடியலை, இப்படி எத்தனையோ விடயங்களை நடத்த வல்லது!!! ஒவ்வொரு பயணமும் வித்யாசமான மறக்க முடியாத அனுபவங்களை மனதில் அமைதியாக எழுதிவிட்டு சென்று விடுகிறது இல்லையா??? :)

இவ்வளோ நேரம் இந்த கதையை பொறுமை காத்துப் படித்த அனைவருக்கும் நன்றி!!! :)

Wednesday, March 11, 2015

நட்பு சூழ் உலகு

அகோரமான சத்தத்துடன் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள் அம்மா...என்னவோ எதோ என்று ஓடி வந்து பரிதவித்த பார்வையுடன் அம்மாவை பார்த்தான் பிரபு...அடுப்படியில் வேலை செய்து  கொண்டிருந்த யசோதா போட்டது போட்ட படியே விட்டுவிட்டு ஹாலுற்கு ஓடி வந்தாள்.  இரண்டு வாரத்திற்கு முன்னர் தான் அம்மாவிற்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை சென்னை அரசு மருத்துவமனையில் முடிந்திருந்தது. கழுத்துப்  பகுதியில் அறுவை செய்யப் பட்டிருந்ததால் ஒரு குழாய் மூலம் அம்மா மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அறுவை முடிந்த ஒரே வாரத்தில் டாக்டர்களிடம் ஒப்புதல் வாங்கி அம்மாவை சேலத்திற்கு அழைத்து வந்து விட்டிருந்தான் பிரபு. பிரபுவின் அப்பா பாஸ்கர்  ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு சாலை விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்! அதன் பிறகு வீட்டில் இருந்தது அம்மா, தங்கை யசோதா மற்றும் பிரபு மூன்று பேர் தான்... அப்போது தான் பிரபு படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தான்...  சொற்ப நாட்களில் தான் அம்மாவிற்கு இருந்த தைராய்டு  புற்று நோயாக  மாறி  இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு மருத்துவர்களின் அறிவுரைப் படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அம்மாவை கூட்டிவந்து அறுவை சிகிச்சை செய்தான் பிரபு...

சிகிச்சை முடிந்து சேலத்திற்கு அம்மாவை கூட்டி வந்து வீட்டில் கொஞ்ச நாள் இருந்தால் போதும் சொந்த ஊரின் வாசமே அவளை சீக்கிரம் குணமடைய வைத்து விடும் என்பதில் பிரபு உறுதியுடன் இருந்தான்... ஆனால் சேலத்தின் அப்போதைய சீதோஷன நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை...திசம்பர் மாதம்  ஆகையால் காலை வேளைகளில் பனிபொழிவு அதிகமாகவே இருந்தது! சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என மருத்துவர்களும் அறிவுறுத்தி இருந்தார்கள். ஆனால் காலம் போடும் கணக்கு எப்போதும் நேரெதிர் விகிதத்தில் அல்லவா அமைந்துவிடுகிறது...அம்மாவின் மூச்சு மெதுவாய் ஒடுங்கிக் கொண்டிருந்தது...அவளின் கையினைப் பிடித்திருந்த பிரபுவிற்கு எல்லாமே சூனியமாய் இருந்தது! மெல்ல மெல்ல நாடி ஒடிங்கிற்று சொல்லொண்ணாத துயர் அவன் மனதை பிய்த்து தள்ளியது... யசோதா வாய் விட்டுக் கதறி அழக் கூட முடியாமல் பேய் பிடித்தவளைப் போல செவுற்றின் ஓரம் கூனிக் குறுகி நின்றிருந்தாள்!

அந்த நேரத்தில் சரியாக செல்வா வந்தான் ஆறிலிருந்து இருந்து ஒன்றாகப் படித்தவர்கள் பிரபுவும் செல்வராஜும்...ஓ என்று அலறிய படி ஓடிச் சென்று செல்வாவின் நெஞ்சினில் முகம் பதித்து தாரைத் தாரையாக கண்ணீர் வடித்தான் பிரபு... இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள் என்கின்ற கேள்வி பிரபுவையும், யசோதாவையும் ஆழத் துழைத்திருந்தது... வீடுச் சுவற்றில் இருந்த விநாயகர் படத்தை எடுத்து உடைக்க முயன்றவனை செல்வா இழுத்துப் பிடித்து ஆறுதல் சொன்னான்... பிறகு கட்டிலில் இருந்த அம்மாவின் சடலத்தை இன்னும் சில நண்பர்களின் உதவியுடன் தரையில் இறக்கி வைத்தார்கள்...கொஞ்சம் சொந்தக்காரர்களும் வந்திருந்தார்கள் அதில் கொஞ்சம் பேர் கடன்காரர்களும் இருந்தார்கள்...பிரபுவின் அப்பா அவனுக்கு சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் கொஞ்சம் கடனை சேர்த்து வைத்துவிட்டுச் சென்றிருந்தார், இருக்கின்ற ஓட்டு வீடும் சொந்த வீடு கிடையாது.

பிரபுவின் தாய் மாமனுக்கு அலைபேசி மூலம் தகவல் சொல்லி இருப்பினும் இன்னும் அவர் வந்ததாய் தெரியவில்லை...ஏதோ பிணக்கினால்  அம்மாவும் மாமாவின் வீட்டிற்கு போவதில்லை அவர்களும் இங்கே வருவதில்லை... ரொம்ப தூரமும் இல்லை பஸ் பிடித்தால் அரை மணி நேரத்தில் வந்துவிடலாம்...மணி 3 ஆகி இருந்தது இன்னும் வரவில்லை. அங்கே கூடி இருந்த கொஞ்ச சொந்தக்காரர்களும் ஏதோ கல்யாண வீட்டில் அமர்ந்திருப்பது போல கதை பேசிக் கொண்டிருந்தார்கள்... பிரபுவின் நண்பர்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து நடக்கவேண்டிய வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். செல்வா, சுந்தரராஜ், முனியப்பன், முருகதாஸ் மற்றும் சில நண்பர்கள்...பணத்திற்காகவோ, பொருளிற்க்காகவோ அவர்கள் தயங்கி நிற்கவில்லை. கையில் இருந்த பணத்தைக் கொண்டு அடக்கத்திற்கான அத்தனை வேலைகளையும் பார்த்தார்கள்!

மணி 5.30யை நெருங்கி இருந்தது. மாமன் இன்னும் வருவதாக தெரியவில்லை. செல்வா பிரபுவிடம் சென்று "பிரபு நேரமாகிட்டே போகுது மேலுக்கு முடியாம கிடந்த உடம்பு ரொம்ப நேரம் வச்சு இருக்க கூடாது! காட்டுக்கு எடுத்துட்டு போய் சீக்ரமா எரிச்சிடுறது நல்லது..."என்றான் காதோரமாக "தாய் வீடு கொடித் துணி போடுறதுக்கு கூட வக்கில்லாமலா டா போய்ட்டா எங்கம்மா?" என சொல்லியபடியே விசும்பி விசும்பி அழுதான் பிரபு... அந்த நேரம் பார்த்து சுந்தர் உள்ளே வந்து சொன்னான் "டேய் அப்டி எல்லாம் நினைக்காத டா எத்தினி நாள் இந்த அம்மா  கையால நான் சாப்டிருப்பேன் அந்த கடனுக்காக நான் போடுறேண்டா தாய் வீட்டுக் கோடித் துணி!" என்றான் ஆவேசமாக...அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா சடங்குகளையும் முடிந்த பிறகு பிரேத ஊர்வலம் இடுகாட்டை நெருங்கிக் கொண்டிருந்தது...

சிதையில் அம்மாவின் உடம்பு வைக்கப் பட்டிருந்தது... யாரோ 2,3 பேர் அந்த சமயத்தில் காட்டிற்குள் நுழைந்தார்கள்...மாமா சில சொந்தக்காரர்கள் சகிதமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது..."முகத்த கடைசியா பாக்க வேண்டியவங்க பாத்துக்கோங்க" என்கிற குரல் கேட்டது. அந்த குரலைக் கேட்டதும் அந்த மூன்று பேரும் அவசரமாக நடந்து வந்தனர். மாமாவைப் பார்த்ததும் பிரபுவிற்கு பற்றிக்  கொண்டுவந்தது! திரும்ப நின்று "யார பாக்க இங்க வந்தீங்க என்றான்?" அவர் பேசாமல் அமைதியாக நின்றார்..."பாவிகளா இந்த பொம்பள போய் சேரும் போது கூட நிம்மதியா போக விட மாட்டிங்களா?" என்றான் கண்கள் சிவக்க..."இல்ல மாப்ள உங்க அம்மா பேசின பேச்சு....." என முடிப்பதற்குள் செல்வா குறுக்கிட்டான் "ஏங்க என்னதான் பிரச்சனையா இருந்தாலும் ஒரு மனுஷி சாகும் போது கூடவா இப்டி மனசுல வச்சு பழி வாங்குவீங்க?" என்றான்... பிரபு குறுக்கிட்டு "விடுறா செல்வா என்னைய பொறுத்த வரைக்கும் என்ன பெத்தவ சாகல ஆனா இவங்க எப்பவோ செத்துட்டாங்க...செத்த பொணத்துகிட்ட என்ன டா பேச்சு ஆகுற வேலைய பாக்கலாம் வாடா"... கூட வந்தவர் "தம்பி பாத்து மரியாதையா பேசுப்பா" என்றார்... "யோவ் கூடப் பொறந்த தங்கச்சிக்கு ஒரு கோடித் துணி போட வக்கில்ல இந்தாளுக்கு என்னையா மரியாத? ச்சி இனிமே இங்க நின்னீங்கனா  இன்னும் மரியாதை கெட்டுரும்" என்று பொறுமினான் பிரபு...ஒன்றும் பேசுவதற்கு முடியாமல் அந்த மூவரும் அமைதியாக நடையைக் கட்டத் துவங்கினர்... சிதை எரியத் துவங்கியது...அம்மாவின் இருப்பு இனிமேல் இல்லை என்னும் எண்ணமே அவன் மனதில் பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது...

"சார் கணக்கு முடிக்க மாமா, மச்சான், அண்ணன், தம்பிங்க  எல்லாரும் வாங்க" என வெட்டியான் கூப்பிட... அங்கே இருந்த கொஞ்சம் சொந்தங்களும் அதற்கு முன்னமே கிளம்பி விட்டிருந்தனர்...

அங்கே இருந்த நண்பர்கள் கூட்டம் மட்டும் அங்கே இருந்த கூரை வேயப்பட்ட கொட்டகைக்குப் போய் உக்கார்ந்து நான் தான் மாமன், இவன் மச்சான், இவன் அண்ணன், அவன் தம்பி என கணக்கை முடித்து அமர்ந்திருந்தனர்... அசதியாய் இருந்ததால் செல்வா மடியில் அவனைப் சற்று நேரம் படுக்க வைத்திருந்தான்... சற்று நேரம் தூங்கிய பின் கண்விழித்துப் பார்த்தான் பிரபு... அம்மா செல்வாவின் முகத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்...கண்களில் நீர் தானாகப் பெருக்கெடுத்து ஓடியது...செல்வா கையில் இருந்த கைக்குட்டையை வைத்து துடைத்து விட்டான்...

Monday, March 9, 2015

காதல் என்பது!......

இன்று போனில்...
அம்மா : சொல்லு கேசு
நான் : இங்க ஒன்னுமில்ல மா நீ தான் சொல்லனும்!
அம்மா : ஏன் வாயிஸ் ஒரு மாதிரி இருக்கு? (பேசின ஒற்றை வரியிலேயே கண்டுபிடித்துவிட்டாள் கள்ளி tongue emoticon )
நான் : ஒன்னுமில்ல சளி இருமல் ஜுரம் வர்றா மாதிரி இருக்கு!
அம்மா : உடம்ப பாத்துக்கோ டா
மாத்திரை சாப்டியா டாக்டர் கிட்ட போயிட்டுவா...
நான் : ஐ லவ் யூ ம்மா heart emoticon
அம்மா : இதென்ன டா புது பழக்கம் என்ன இன்னிக்கு காதலர் தினமா? மதர்ஸ் டேக்கு சொன்னா கூட பரவால...
நான் : ஆள் இருக்குறவன் லவ்வருக்கு சொல்றான். நான் உனக்கு சொல்றேன். ஏன் காதல் அன்பு எல்லாம் காதலிகிட்ட மட்டும் தான் இருக்கனுமா என்ன?! வளர்த்தவ கிட்ட இருக்க கூடாதா என்ன?
அம்மா : நீ பேச ஆரம்பிச்சா சீக்கிரம் கண்வீன்ஸ் பண்ணிடுவ டா என்றாள் வெட்கத்தோடு....
அம்மா வெட்க்கப் படும் அழகே தனி அழகு தான்! என்ன கொஞ்சம் கோபக்காரி...இருந்தால் என்ன கோபமிருக்கும் இடத்தில் தானே குணமிருக்கும்! அப்பா விட்டுச் சென்ற அன்றிலிருந்து தனி மனுசியாய் ஆளாக்கப் பாடாய் படுபவள் அவள் தானே!
அப்பா விட்டுச் சென்ற நிலபுலங்களையும் அதனோடு சேர்ந்த வழக்கு விவகாரங்களையும் தனியொரு பெண்ணாக இருந்து கோர்ட், காவல்நிலையம் என அனைத்தையும் தனியாக எதிர் கொண்டவள்!
நானும் கூட சில நேரம் நினைப்பதுண்டு வீட்டில் உறவினர் வந்தால் சமையற் கட்டின் கதவருகில் நின்று உள்ளேயிருந்தே பதில் அளிப்பாள் அப்பாவிடம். அப்பா / அம்மா சண்டைகளில் கோபம் வந்து கத்தினாலும் மற்ற நேரங்களில் அமைதி தான் யாரையும் எளிதாக நம்பிவிடும் சுபாவம் அவளுடையது...அந்த பெண்ணா இவள் என்று பிரம்மித்ததுண்டு!
பெற்ற பிள்ளை வளர்த்த பிள்ளை என எந்த பாகுபாடும் கிடையாது அவளிடம்! என்ன கொஞ்சம் புலம்பல் ஜாஸ்த்தி அனைவரிடம் புலம்வது என இருப்பாள்! சொல்லிப்பார்த்தேன் கேட்கவில்லஐ பாவம் அவளின் மனக்கழிவுகளை எங்கே சென்று இறக்குவாள்? எத்தனை நேரம் தான் அவள் வளர்க்கும் பறவைகிளிடமும்/மீனிடமும்/ நாயிடமும் தனிமையில் பேசிக் கொண்டிருப்பாள்?
இன்றும் நினைவில் இருக்கிறது அம்மா நீ என்னை டிப்ளமோவில் சேர்த்து விடும் போது கல்லூரி வளாகத்தில் என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணில் நீருடன் சொன்னாய் : "கேசு நல்லா படிச்சிடு டா உங்கப்பா இருந்திருந்தா இதகு கூட பண்ணியிருப்பாரா தெரியாது!" வைத்திருக்கிறேன் அம்மா மனதில் அந்த சொற்க்களைப் பச்சைக் குத்தி!
நீ எனக்கு செய்ய நினைத்ததை செய்துவிட்டாய் செய்து கொண்டும் இருக்கிறாய். ஆனால், உனக்கு நான் செய்யவேண்டிய உபகாரம் இன்னும் நிறைய இருக்குது ம்மா! smile emoticon
ஐ லவ் யூ மை கிழவி! <3

Sunday, March 8, 2015

எங்கெங்கு காணினும் நிர்பயா!

கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் நிர்பயா என்கிற பெயரும், முகேஷ் என்கிற பெயரும் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப் பட்டன. "இந்தியாவின் மகள்" என நிர்பயாவை அடையாளப்படுத்திய ஊடகங்கள் முகேஷை யாரென்று அடையாளப்படுத்தும் அவனும் இந்தியக் குடிமகன் தானே?!
தோழி ஒருவர் தனது பதிவில் "அந்த முகேஷின் ஆண்குறியை கொஞ்சம், கொஞ்சமாக வெட்டிக் கொல்ல வேண்டும் எனப் பதிவிட்டிருந்தார்!" இப்போது சொல்லுங்கள் அந்த கற்பழிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலைக்கும், இந்த தோழியின் மனநிலைக்கும் பெரிய வித்யாசம் இருப்பதாகத் தெரியவில்லை! கேட்டால் தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்கிற சப்பைக்கட்டான பதில் கிடைக்கும். சரி இந்த மாதிரியான தண்டனைகள் அதிகமுள்ள வளைகுடா நாடுகளில் வன்புணர்வு குற்றங்கள் எதுவும் நடப்பதில்லையா? அப்படியான தண்டனைகளை கொடுக்க வேண்டுமெனில் இந்திய ஆண்களில் பாதி பேருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்! ஏனெனில் இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு பதினாறு (16) நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகிறார் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன!
சரி முகேஷ் போன்ற மனப்பிறள்வுள்ள மனிதர்கள் உருவாக காரணமாக இருப்பதற்கு இந்த சமூகமும் ஒரு காரணம் தான் அதற்காக நம்மை நாமே தண்டித்துக் கொள்ள எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்?
எப்போதும் இந்தியர்கள் செண்டிமென்ட்டல் இடியட்ஸ் என்பதை மணிக்கு ஒருமுறை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறோம்! அதனாலேயே இந்த மாதிரி அவனின் குறியை வெட்ட வேண்டும், தூக்கிலிட வேண்டும், ஆண்களே இப்படித் தான் என்பன போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கருத்துகள் வந்த விழுந்த வண்ணம் இருக்கின்றன. பெண் குழந்தைகள் அனுபவிக்கும் அதே அளவு பாலியல் தொல்லைகளையும் ஆண்குழந்தைகளும் அனுபவிக்கிறார்கள் என அதே ஆய்வு கூறுகிறது! இப்போது எங்கே கொண்டு போய் முகத்தை வைத்துக் கொள்வீர்கள் இவ்வளவு பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகள்?
நிரந்திமான தீர்வுகளை நோக்கிய நகர்தலை நமது சமூகம் இன்னும் ஒரு இன்ச் கூட முயற்சித்து பார்க்கவில்லை என்பது தான் வருத்தத்திற்குறிய விசயம்! அப்போதைக்கான தீர்வுகளை வீராவேசகமாக பேசிவிட்டு அடுத்த வேளை சோற்றிற்கான வேலைகளை கவனிக்க சென்றுவிடுகிறோம். செக்ஸைப் பற்றின புரிதலும் அதற்கான அரசின் திட்டங்களும் இன்னும் சரியான முறையில் வரையருக்கப்படவில்லை. செக்ஸ் கல்வி மற்றும் பாலின வேறுபாட்டினை வளரும் குழந்தைகள் மத்தியிலும், வளர்ந்த பெரியவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டிய தலையாய கடமை அரசின் கையில் இருக்கிறது!
அதுமட்டுமின்றி நம் வீட்டுக் குழந்தைகளுக்கு நம்முடைய உடல் கட்டமைப்பைப் பற்றின விழிப்புணர்வை கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமை! செக்ஸ் பற்றின விசயங்களை பதின் வயதடைந்த குழந்தைகளுடன், பெற்றோர் தெளிவான விவாதம் செய்ய வேண்டும். மனித இனத்தின் மூலமே காமம் தான் ஒவ்வொரு உயிர்கள் உருவாகக் காரணம் அதுவே! பிறகு அதைப் பற்றின விவாதத்தினை மேற் கொள்வது பாவம் என நினைப்பது சுத்த மடத்தனம்!
இவைகள் என்னுடைய அறிவிற்கு தோன்றின சில விசயங்கள். நண்பர்கள் உங்களது கருத்துக்களை தாராளமாக பதியலாம்.
பெண்களை தெய்வமாக எல்லாம் மதிக்கத் தேவையில்லை! அவளை ஒரு சக உயிராக பார்ப்போம் அதுவே அவளுக்கு அளிக்கும் மிகப் பெரிய மரியாதை!
ஆரோக்கியமான விவாதங்களையும், நல்ல புரிதலையும் இன்றைய சர்வதேச பெண்கள் தினத்தில் நம்வீட்டு வரவேற்பறையிலிருந்து நம் வீட்டுப் பிள்ளைகளிடமிருந்து ஆரம்பிப்போம்! இனி முகேஷ் போன்ற காமுகர்களும் வேண்டாம்! நிர்பயா போன்ற சித்திரவதையை அனுபவிக்கும்/அனுபவித்த பெண்ணும் வேண்டாம்!
அம்மா, அக்கா, அண்ணி, தங்கை, அத்தை, சித்தி, பெரியம்மா, பாட்டி, தோழி & காதலி என என்னை அன்பால் அரவணைக்கும் அனைத்துப் பெண்களுக்கும் என் மனமார்ந்த பெண்கள் தின நல்வாழ்த்துகள்! smile emoticon